தென்னாபிரிக்காவின் போராட்டக் குணம் எங்கே போனது? – ரபாடாவை ‘சாதாரணமாக்கியது’ எது?

விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணி ட்ரா செய்யும் வாய்ப்பைத் தக்கவைக்க முடியாமல் உடைந்து போன பிட்சில் கடைசி நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு முன்னதாக 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து படுதோல்வியடைந்தது.

புனே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ரொஸ்ஸில் தோற்றாலும் வேகப்பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதகமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு சாதகமாக இருந்த சூழ்நிலையைப் பயன்படுத்தவில்லை. இதற்கு ஒரு காரணம் மயங்க் அகர்வாலுக்கு பிலாண்டர் பந்தில் பிளம்ப் எல்.பி. கொடுக்கவில்லை. நடுவர் தன் பணியை ஒழுங்காகச் செய்து அவுட் கொடுக்கட்டும் அகர்வால் அதனை ரிவியூ செய்யட்டும், ஆனால் எப்போதும் நொட் அவுட் கொடுப்போம் தென்னாபிரிக்கா மேல்முறையீடு செய்து கொள்ளட்டும் என்ற போக்கு இங்கு வந்து ஆடும் அணிகளுக்கான நியாயம் கற்பிக்காது. அகர்வாலுக்கு அப்போது அவுட் கொடுத்திருந்தால் ஒருவேளை ஆட்டத்தின் போக்கு மாறியிருக்க வாய்ப்புண்டு.

ஒரு அவுட் போதும் ஒரு டெஸ்ட் போட்டியை மாற்றிவிடக்கூடிய தன்மைகளை நாம் இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறோம். அதே போல்தான் கோலி 120+ ரன்களில் இருந்த போது எல்.பி.கொடுக்கவில்லை, இம்முறை அம்பயர்ஸ் கோல் என்று வரும் எனத் தெரிந்து மூன்றாம் நடுவர் தீர்ப்பை அணுகாமல் விட்டு தவறிழைத்தார். இந்த இரண்டு அவுட்களும் தென்னாபிரிக்காவுக்குச் சாதகமாக அமைந்திருந்தால் டிக்ளேருக்காகக் காத்திருக்கவும் நேரிட்டிருக்காது. அதே போல் கடைசி 18-20 ஓவர்கள் பிலாண்டரோ, ரபாடாவோ வீசாமல் பந்து வீச்சு சொத்தையாகி 11 ஓவர்களில் ஜடேஜாவும் கோலியும் 113 ரன்களை விளாசியதும் நடந்திருக்காது.

மாறாக 601 ரன்கள் அடித்த பிறகு இந்திய அணியின் பந்து வீச்சு ஆக்ரோஷமாக அமைந்தது, நெருக்கமான களவியூகம் அதிநெருக்கடி என்பதற்கு தென்னாபிரிக்க துடுப்பாட்டக்காரர்கள் எளிதில் இரையாகினர். இந்த விதத்தில் இந்த இந்திய அணி வித்தியாசமானதுதான். கில்லர் இன்ஸ்டிங்க்ட் என்பார்களே அது இந்திய அணியிடம் சமீபத்திய புதிய போர்க்குணம், ஆனால் போர்க்குணத்துக்குப் பெயர் பெற்ற தென்னாபிரிக்க அணியோ பெயர் ‘போன’ அணியாக பரிதாபமாக காட்சியளிக்கிறது. டுபிளெசியின் கப்டன்சியும் உற்சாகமில்லாமல் உத்வேகமில்லாமல் காணப்பட்டது.

தென்னாபிரிக்க அணி கடந்த முறை முற்றிலும் குழிபிட்சில் சிக்கி சின்னாபின்னமானது, அப்போது கூட போராட்டக் குணத்தைக் கைவிடவில்லை. அதற்கு முந்தைய தொடர்களில் தென்னாபிரிக்க அணி இந்திய அணியை தொடரில் ஒரு டெஸ்ட்டிலாவது வீழ்த்தி விடும், காரணம் டேல் ஸ்டெய்னின் ஜீனியஸ்தான் காரணம்.

டேல் ஸ்டெய்ன் 2008-2015 வரை இந்தியாவில் 6 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்திய சூழ்நிலைக்கேற்ப ரிவர்ஸ் ஸ்விங் கலையையும் அவர் சரியாகப் பயன்படுத்தினார். 2008 அகமதாபாத் டெஸ்ட், 2010 நாக்பூர் டெஸ்ட் போட்டிகள் வலுவான இந்திய துடுப்பாட்ட வரிசையையே ஆட்டம் காண வைத்த வகையில் டேல் ஸ்டெய்னின் பந்து வீச்சு இந்தியப் பிட்ச்களில் ஒரு மிகப்பெரிய விஷயமாக விதந்தோதப்பட்டது.

மாறாக ரபாடா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பந்துவீச்சாளலர், அவரது 150 கிமீ வேகம் பிட்ச் உள்ளிட்ட நிலைமைகளையும் கடந்து அசாத்தியமானது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நன்றாக வீசினாலும் ஏதோ ஒன்று ‘எக்ஸ் பாக்டர்’ என்று கூறுவார்களே அது அவரிடம் மாயமாகியுள்ளது.

இதற்கு ஒரு காரணத்தைக் குறிப்பிட வேண்டுமென்றால் கடந்த 2 ஆண்டுகளில் 2018-19 -ல் ரபாடா வீசிய ஓவர்கள் எவ்வளவு தெரியுமா? 53 டெஸ்ட் போட்டிகளில் 811 ஒவர்களை வீசியிருக்கிறார். 128 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த 2 ஆண்டுகளில் அதிக ஓவர்களை வீசிய வகையில் நதன் லயன் 35 டெஸ்ட்களில் 1132 ஓவர்களை வீசி முதலிடத்தில் இருப்பதாக கிரிக் இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தனை ஓவர்களை ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசியிருக்கும் போது இந்தியா மாதிரி இடங்களில் வெயில் கொளுத்தும் சூழ்நிலையில் அதுவும் மழையால் ஈரப்பதம் நிறைந்த புற பீல்ட் உள்ள பகுதிகளில் பந்து சென்று திரும்பும்போது ரிவர்ஸ் ஸ்விங் சாத்தியமில்லாத நிலையில் ரபாடா சாதாரணமான பந்துவீச்சாளராகவே தெரிவார். ஒரு திறமையான வேகப்பந்து வீச்சாளனுக்குத் தேவை உண்மையான ஆட்டக்களங்கள், அதாவது புற்களுடன் வேகப்பந்து வீச்சுக்கான ஆட்டக்களம் அமைக்க வேண்டும் என்று கூறவில்லை, முதல் 2 நாட்கள் துடுப்பாட்டத்திற்குச் சாதகமாக இல்லாமல் ரன் எடுப்பதற்கு வீரர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த வேண்டியதை வலியுறுத்தும் பிட்ச்கள் தேவை. அப்படி இருந்தால்தான் சர்வதேச டெஸ்ட் போட்டி இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதைப் பார்க்க முடியும் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும், சவால்கள் கூட்டத்தை ஈர்க்கும், இதனை விடுத்து இந்திய வெற்றிதான் முக்கியம் என்ற ரீதியில் ஆட்டக்களம் அமைத்தால் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து இந்தியாவில் ஆடப்படும் டெஸ்ட் போட்டிகள் மைக்கல் வோகன் கூறுவது போல் அறுவையாகி மக்கள் வரத்துக் குறைந்து விடும்.

அதிக ஓவர்களை 2018-19களில் வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா 5வது இடத்தில் இருக்கிறார், இவர் 49 டெஸ்ட் போட்டிகளில் 724.3 ஓவர்களை வீசியுள்ளார். அதற்கான பலனை இப்போது விராட் கோலி மட்டுமல்ல இந்திய ரசிகர்களும் ஏன் பும்ராவுமே அனுபவித்து வருகிறார். காயம் அவரைப் பதம் பார்க்கத் தொடங்கி விட்டது.

எனவே திறமையான பந்துவீச்சாளர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பிட்ச்களை உண்மையானதாக அமைக்க வேண்டும். இந்தியா வெற்றி பெற்றால் கடினமாக ஆடி வெற்றி பெற வேண்டும், எதிரணியை ஒப்புக்கு சப்பாணியாக்கி விடும் ஆடுகளங்களைப் போட்டு அதில் வெற்றி பெற்று முடிசிலிர்ப்பும் போக்கு வேண்டாம். இதைத்தான் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகின்றனர்.

ஐசிசி, பிசிசிஐ போன்றவை பணம் குவிக்கும் நோக்கத்தையே பிரதானமாகக் கொண்டிருந்தால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துதான் போகும், இவர்களே அழித்து விட்டு பிறகு ஐயையோ அழிந்து கொண்டிருக்கிறதே என்று போலித்தனமாகப் புலம்பிப் பயனில்லை.

எனவே ரபாடாவை சாதாரணமாக்கியது திறமையான இந்திய துடுப்பாட்டம் அல்ல, அவர் 2 ஆண்டுகளாக வீசிய ஓவர்களின் எண்ணிக்கை, இங்குள்ள பிட்ச் உள்ளிட்ட கடினமான சூழ்நிலைமைகள்தான். உண்மையான பிட்ச்களைப் போட்டிருந்தால் கபில்தேவுக்குப் பிறகு எத்தனை உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை இந்தியா உருவாக்கி இருக்க முடியும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஜவகல் ஸ்ரீநாத், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, ஏன் 9-10 ஆண்டுகளாக போராடி இங்கிலாந்தில் ஒரே டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்று, அலிஸ்டர் குக்கிற்கு ஜடேஜா விட்ட கட்சினால் ஒரே டெஸ்ட் போட்டியுடன் கரியரை இழந்த ராஜஸ்தானின் பங்கஜ் சிங் உட்பட அனைவரும் கிளென் மெக்ராவாக, ஜேம்ஸ் ஆண்டர்சனாக உருவாகியிருக்க முடியும், மாறாக உடையும் ஆட்டக்களங்களையும் பிளாட் பேட்டிங் பிட்சைப் போட்டும் இவர்களது கரியரை விரைவில் அழித்ததுதான் இங்கு நடந்தது. இனிமேலும் விழித்துக் கொள்ளா விட்டால் பும்ரா போன்ற அரிய ரத்தினங்களையும் பிட்சிற்கு இரையாக்க நேரிடும்.

ரசிகர்களும், வாசகர்களும் சிந்திக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை, இல்லையெனில் ‘இந்தியா வெற்றி’ என்ற ஒற்றை வெற்று வெற்றிக் கொக்கரிப்பில்தான் (triumphalist attitude) போய் முடிவோம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here