புலிகளிற்கு எதிராக போரிட அரசு எமக்கு ஆயுதம் தந்தது … குண்டைவெடிக்க வைத்தது சஹ்ரானல்ல, 19வது திருத்தமே: ஹிஸ்புல்லா ‘தேர்தல்’ பேச்சு!


1990இல் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலின் போது, முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்றபோது, துப்பாக்கிக் குண்டுகளின் மத்தியிலும், கணணிவெடிகளின் மத்தியிலும் நின்று அரசாங்கம் தந்த ஆயுதங்களை கொண்டும், பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்தும் மட்டக்களப்பில் முஸ்லிம்களை பாதுகாத்தோம் என தெரிவித்திருக்கிறார் கோட்டாபய சார்பு முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர் என கருதப்படும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.

நேற்று (11) காத்தான்குடியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இதை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1990இல் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலின் போது, முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்றபோது, துப்பாக்கிக் குண்டுகளின் மத்தியிலும், கணணிவெடிகளின் மத்தியிலும் நின்று அரசாங்கம் தந்த ஆயுதங்களை கொண்டும், பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்தும் மட்டக்களப்பில் முஸ்லிம்களை பாதுகாத்தோம். ஆகவேதான் இன்றும் இந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்கிறோம்.

முஸ்லிம்களிடம் 16 இலட்சம் வாக்குகள் உள்ளன. 2015இல் 12இலட்சம் வாக்குகளை மைத்திரிக்கு அளித்தார்கள். 1 இலட்சம் வாக்கைத்தான் மஹிந்தவிற்கு அளித்தார்கள். 2015இல் பெரும்பாலான

2.5 இலட்சம் வாக்குகளை கொடுத்து நன்மைகளை பெற்ற நாம், 2015இல் மைத்திரி, ரணிலுக்கு 12 இலட்சம் வாக்குகளை கொடுத்து பெற்ற நன்மைகள் என்ன?

19வது திருத்தம் வந்தால் நாட்டிக்கு கேடு, பாரிய அச்சுறுத்தல் என நாம் சொன்னோம். ஆனால் கொண்டு வந்தார்கள். இன்று ஜனாதிபதி உள்ளிட்ட எல்லோரும் சொல்கிறார்கள், 19வது திருத்தம் தவறு என.

நாட்டில் குண்டுகள் வெடித்தமைக்கு காரணம் என்ன? 19வது திருத்தம்தான்.

ஒரு நாட்டின் பிரதமரை அழைக்காமல், பொலிஸ்மா அதிபரை அழைக்காமல் பாதுகாப்புசபை கூட்டத்தை கூட்டினால், அது நாடா? 19வது திருத்தத்தினால் நடந்தது இது.

உலகம் முழுவதும் ஜனாதிபதி ஆட்சிமுறை இருப்பது சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பிற்காகத்தான். சஜித்தோ, கோட்டாவோ ஜனாதிபதியாக வேண்டுமென்றால் முஸ்லிம்களிடம் வர வேண்டும். முஸ்லிம் வாக்கில்லாமல் யாரும் ஜனாதிபதியாக முடியாது.

கடந்தமுறை நானும் மைத்திரியை ஆதரித்திருந்தால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றிருப்பேன். ஆனால், அரசியலென்பது பதவிகளல்ல. மக்களிற்கு வழிகாட்டுவது. தேர்தலில் தோல்வியடைந்தேன். அல்லா என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார். தேர்தலில் வென்று வந்த அமீர் அலி, ஹரீஸ் போன்றவர்கள் பிரதியமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்ய பின்வரிசையில் உட்கார்ந்திருக்க, இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்ய அல்லா என்னை முன்வரிசையில் உட்கார வைத்தார்.

ஏப்ரல் தாக்குதல் பற்றி எச்சரிக்கை வந்தபோது ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலர் படுத்துறங்கி விட்டு, இப்பொழுது சஹ்ரானை தெரியுமா என்கிறார்கள். பைத்தியக்காரத்தனம். நாங்களா குண்டை வைத்தோம்? அரசாங்கம் என்ன செய்தது?

என்னை படுகொலை செய்ய சர்வதேச அளவில் பாரிய வலைப்பின்னல் பின்னப்பட்டுள்ளது.

என்னை பொறுத்தவரை நான் 2000ம் ஆண்டே உயிரிழந்து விட்டேன். அதன் பின்னரான ஒவ்வொரு நாட்களும் எனக்கு போனஸ் போன்றதுதான்.

இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளில் மிக மூத்தவன்(சீனியர்) நான் தான். பெளசி ஹாஜியார், ரஊப் ஹக்கீம் எல்லாம் எனக்கு பின் பாராளுமன்றம் சென்றவர்கள்தான்.

நான் யாருடைய ஏஜண்டும் அல்ல. முஸ்லிம்களின் ஏஜண்ட் மாத்திரமே. முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கவே நான் போட்டியிடுகிறேன். 30 வருடம் அரசியலில் இருந்த எனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பைத்தியமா? ஜனாதிபதியாகும் எண்ணம் ஒன்றும் எனக்கில்லை. அந்தளவுக்கு நான் மடையனில்லை. சஜித் வந்தாலும் கோத்தா வந்தாலும் பவர்புள்ளான கபினட் அமைச்சை பெறும் ஆற்றல், சக்தி, அறிவு என்னிடமிருக்கிறது. நான் கெபினட் அமைச்சராக வருவேன்.

எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்கை பெற வாய்ப்பில்லாத படியால், இரண்டாவது விருப்பு வாக்கை வைத்து முஸ்லிம்களிற்காக பேரம் பேசலில் ஈடுபடுவோம். அதற்காகவே போட்டியிடுகிறேன். நவம்பர் முதலாம் திகதி வரை ஒட்டகத்திற்கு வாக்களிக்குமாறு நாம் பிரச்சாரம் செய்வோம். அதன் பின்னர் 2 ஆம் விருப்பு வேட்பாளர் யாரென்பதை நாம் மக்களுக்கு அறிவிப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here