தோஷமுற்ற இருவர் ஜாதகத்தை சேர்க்கலாமா? சேர்க்கக்கூடாதா?

ஜோதிடத்தில் பலவித விதிமுறைகள் சொல்லப்படுகிறது. இந்தவழியில் செல்.. இதுதான் விதி! என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும். ஆனால், மற்றொருவர் இந்தவழி செல்லாதே என்று கூறும் எதிர்மறை விதி. இந்த இரு விதியையும் புரிந்து கொள்ளுவது கடினம். ஜோதிடம் என்பது ஒரு பெரும் கடல் அதைப் படித்துக் கற்றுக்கொண்டே தான் இருக்கவேண்டும்.

முதலில் தோஷம் என்றால் என்ன என்பதை பொதுவான விளக்கம் பார்ப்போம்..

ஜெனன ஜாதகக் கட்டத்தில் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் அசுபர்கள் என்று கூறப்படும் சூரியன், செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது இருந்தால் தோஷத்தை ஏற்படுத்தும். இதற்கும் தோஷ விலக்குகளும் உண்டு அது வேறு பதிவில் பார்ப்போம்

ஜாதகம் பார்க்க என்னிடம் வரும் பெற்றோர்கள் பத்து திருமணப் பொருத்தம் பார்த்தால் போதும் என்று வருகின்றனர். ஆனால் ஆண், பெண் ஜாதகங்களில் உள்ள தோஷங்களை துல்லியமாக ஒப்பிட்டு திருமணம் செய்யலாமா கூடாதா என்று தீர்மானம் செய்ய வேண்டும் என்று சொன்னாலும் அவர்களுக்கு புரியவில்லை. இருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷம் என்கிற பாபசாம்யம் எவ்வளவு சதவீதத்தில் உள்ளது என்பதையும் அதற்கான கணக்குகளைப் போட்டு முடிவு செய்ய வேண்டும். ஆணின் தோஷம், பெண்ணை விட அதிகமாகவோ / சமமாக காணப்பட்டால், திருமண செய்யலாம். பெண்ணின் தோஷம் அதிகமாக இருந்தால் தோஷ சாம்யம் திருப்திகரமாக இல்லை என்று பொருள். அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க கூடாது. தோஷமுற்ற இரு ஜாதகத்தை சேர்ப்பது ஒரு விதி. தோஷமுற்ற இரு ஜாதகத்தை சேர்க்கக்கூடாது என்பது மறு விதி.

திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது தோஷமில்லாத ஜாதகத்தை தோஷமில்லாத ஜாதகத்தோடு சேர்க்கவேண்டும் என்பது சரியான முறை. அதேசமயம் தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்குப் பரிகாரமாக கூறப்படுகிறது. இது முதல் விதியாகும். எடுத்துக்காட்டாக செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை செவ்வாய் தோஷமுள்ள ஜாதகத்துடன் தான் பொருத்தம் செய்ய வேண்டும். களத்திர தோஷம் மற்றும் பாவர்களின் தோஷம் பெற்ற ஜாதகத்தை அதே தோஷம் கொண்ட ஜாதகத்துடன் சேர்க்கவேண்டும் என்று ஒருவித கூற்று.

இரண்டாவது விதி ஒருசில தோஷ அமைப்பு உள்ள ஜாதகத்தை தோஷமில்லாத ஜாதகத்தோடு சேர்க்கவே கூடாது. எடுத்துக்காட்டாக ஒருவருக்கு புத்திர தோஷம் உள்ளது என்றால் அவரை புத்திர தோஷம் கொண்ட பெண்ணோடு சேர்க்கக்கூடாது. அது மகா புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். அதாவது ஒருவருக்கு புத்திர தோஷம் ஜாதகத்தில் எங்கெங்கு பார்க்கவேண்டும் என்று பார்ப்போம்.

முதலில் திருமண பொருத்தத்தில் ஆண் பெண் ஜாதகத்தில் மகேந்திர பொருத்தம் இல்லாமல் இருந்தால், தோஷ சாமியத்தில் குறைந்த சதவீதம் பெற்று இருந்தால், 5,9 அதிபதிகள் பாதிக்கப்பட்டால், அதில் முக்கியமாக ஐந்தாம் அதிபதி நீச்சமோ, பாவிகள் சேர்க்கையால் பாதிக்கப்பட்டால், புத்திர காரகன் என்றழைக்கப்படும் பொன்னவன் குரு அஸ்தமனம் அல்லது கெட்டுப்போனால் புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பிறப்பது தடை, திடீர் கருக்கலைப்பு, மலட்டுத் தன்மை என்று பல பிரச்னைகளையும் புத்திர சோகத்தையும் ஏற்படுத்தும். அதனால் தான் இந்தமாதிரி தோஷம் கொண்டவர்களை சேர்க்கக்கூடாது. இந்த தோஷத்திற்கு ஒருவர் ஜாதகமாவது மிகவும் வலுத்து புத்திர யோகம் இருக்கவேண்டும் அப்பொழுது தான் ஒரு சில பரிகார தோஷ நிவர்த்திக்கொண்டு தோஷத்தை விலக்கி புத்திர பாக்கியத்தைக் கொடுக்க முடியும்.

ஐந்தாம் பாவ முக்கியத்துவத்தை புலிபாணி தன் பாடலில்..

வித்தை வாகனம் வீடுசுபஞ்சுகம்
மெத்தையன்னை மிகுசுகநான்கதாம்
பத்தின்பாதி பழையசீமான் கந்திரம்
வித்தை புத்திபுத்திரர் செல்வமே

இப்பாடலில் சூட்சமாக எனக்கு பதிந்தது என்னவென்றால் – பத்தில் பாதியான ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானமானதால் முன்னோர் பெருமை கல்வி, வித்தை நலம், சிறந்த புத்தி மற்றும் புத்திரர் செல்வம் ஆகியன இருந்தால் 4-வது பாவத்தை அதாவது வாகனம், வீடு, சுபம் மற்றும் தழுவணை மிகுவதும் ஆன சுகபோகங்களையும் அடையச் செய்யலாம் என்பது கூற்று.

முக்கியமாக ஜாதத்தில் 1, 5, 9 பலம் பெற வேண்டும். 5-இல் ராகு இருந்தால், ஐந்தாம் அதிபதி பலமற்று இருந்தால் புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். புத்திரகாரகன் குரு நிலைய அறிய வேண்டும் அவரை அஸ்தங்கம் பெற்றுள்ளாரா, பகை வீட்டில் உள்ளாரா, அசுப பார்வை பெற்றுள்ளாரா, பாதகாதிபதி சேர்க்கை அடைந்துள்ளாரா என்று பார்க்கவேண்டும். இந்த தோஷமானது யாரோடு சேர்கிறாரோ அவரின் தோஷ தாக்கம் அதிகமாக உள்ளதா என்று சூட்சம முறையில் கணக்கீடு செய்ய வேண்டும். புத்திர பாக்கியம் இருக்கிறதா என்று பீஜ ஸ்புடம் மற்றும் க்ஷேத்திர ஸ்புடங்களைக் கணக்கிடும் வழிமுறைகள் கண்டுபிடிக்கலாம் என்று பலதீபிகா நூலில் குறிப்பிட்டுள்ளது.

ஜாதகத்திற்கு ஏற்ப கிரக சேர்க்கை பொறுத்தே தோஷத்தில் அளவு விகிதாச்சாரம் மாறுபடும். சரி, எங்களுக்கு சில சுலசூழ்நிலையால் திருமணம் ஆகிவிட்டது, ஆனால் குழந்தை பெரு இல்லை என்ன செய்யலாம்? என்று கேட்பது புரிகிறது. இந்த புத்திர தோஷத்தில் தப்பிக்க ஜெனன ஜாதகத்தில் ஜாதகரின் லக்கினத்திற்கு சுபக்கிரகங்களின் பரிவர்த்தனை, ஜாதகருக்கு ஏற்ப தசை புத்தி அந்தரம் கொண்ட காலங்களில், குரு கோட்சாரத்தில் 5, 9 பார்வையிடும் காலம், 5ம் அதிபதியுடன் குரு சேரும் காலம் என்றும் பலவித சூட்சமங்களைக் கடவுளால் அருளப்படும்.

பரிகாரம் என்கிற கோணத்தில் பார்த்தால் ராமேஸ்வரத்தில் மற்றும் தேவி பட்டினத்தில் புனித நீராடுவது, தோஷ நிவர்த்திக்காக ஸ்ரீகாளஹஸ்தி, திருவெண்காடு, திருக்கருகாவூர், திருநாகேஸ்வரம் போன்ற தலங்களுக்குச் சென்று உரியப் பூஜைகள் செய்வது, பிதுர் பூஜை செய்து அவர்களிடம் முறையிடுவது, உங்கள் குலசாமியிடம் கேட்பது, ஜாதகரின் தோஷ கிரகங்களுக்கு உரிய இஷ்ட கடவுளை வணங்குவது, தான தருமம் செய்வது என்று பல வழிமுறைகள் உண்டு. நம்மை உருவாக்கிய கடவுளால் முடியாது எதுவும் இல்லை என்று நம்புவோம் அவரை நமஸ்கரிப்போம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here