சிவாஜியை காப்பாற்றுமா ரெலோவின் யாழ் மாவட்ட அணி?

ரெலோவின் ஒழுக்காற்று நடவடிக்கையில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை பாதுகாக்கும் முயற்சியாக, ரெலோவின் யாழ் மாவட்ட குழு தீர்மானமொன்றை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சி கட்டுப்பாட்டை மீறி ஜனாதிபதி தேர்தலில் குதித்துள்ள சிவாஜிலிங்கம், வரும் சனிக்கிழமை நடைபெறும் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தில், கட்சியை விட்டு விலக்கப்படலாமென தெரிகிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் வந்த சிவாஜிலிங்கம், நேற்றிரவு கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா உள்ளிட்டவர்களுடன் மந்திராலோசனை நடத்தியுள்ளார். ரெலோவின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் சிலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இரவு 9 மணி தொடக்கம் 11 மணிவரை இந்த மந்திராலோசனை நடைபெற்றதாக, அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, கட்சியின் முடிவை மீறி செயற்பட்ட சிவாஜிலிங்கத்தை தன்னால் காப்பாற்ற முடியாதென சிறிகாந்தா நேரடியாக தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கத்தின் முடிவை தனிப்பட்ட ரீதியாக ஆதாரித்திருந்தாலும், கட்சி கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஆதரிக்க முடியாதென்றார். அத்துடன், தவிசாளர் பதவியை துறந்ததாக தன்னிடம் கடிதம் வழங்கியதாக சிவாஜிலிங்கம் பொய் சொன்னதையும் கண்டித்தார்.

சனிக்கிழமை கூடும் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தில், தனியொருவராக தன்னால் சிவாஜிலிங்கத்தை பாதுகாக்க முடியாதென்றும், ஆனால் இயன்றவரை முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தன்னை கட்சியை விட்டு நீக்கினால் க.வி.விக்னேஸ்வரனின் கட்சியில் இணைவேன் என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

சிவாஜிலிங்கத்தின் மீது சிறிய ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க வசதியாக, வரும் சனிக்கிழமைக்கு முன்னதாக ரெலோவின் யாழ் மாவட்ட குழு கூட்டத்தை கூட்டி, சிவாஜிலிங்கத்தின் மீது “மென்மையான ஒழுக்காற்று நடவடிக்கை“ எடுக்க வலியுறுத்தும் தீர்மானமொன்றை நிறைவேற்றவும் ஒரு முயற்சி நடக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here