ரெயில் மோதி பலியான பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8¾ லட்சம்; வீட்டில் சில்லரையாக ரூ.1¾ லட்சம் மீட்பு

ரெயில் மோதி பலியான பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8¾ லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் இருந்து ரூ.1¾ லட்சம் சில்லரையாக மீட்கப்பட்டது.

மும்பை கோவண்டி ரெயில் நிலையம் அருகில் சம்பவத்தன்று இரவு முதியவர் ஒருவர் ரெயில் மோதி பலியானார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர் கோவண்டி ரெயில்நிலையம் அருகில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வந்த பிச்சைக்காரர் பிர்பிசந்த் ஆசாத் (82) என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார், பிரேதப்பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை ஒப்படைப்பது தொடர்பாக பிர்பிசந்த் ஆசாத்தின் குடிசைக்கு சென்றனர்.

அப்போது அந்த குடிசையில் இருந்த சாக்குப்பைகளில் சில்லரைகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் அந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வசதியாக அங்கு இருந்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

அப்போது அந்த சில்லரைகளுடன் பிச்சைக்காரரின் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களும், பல்வேறு வங்கி கணக்கு புத்தகங்களும் இருந்தன.

அந்த வங்கி கணக்கு புத்தங்கள் மூலம் பிச்சைக்காரரின் நிரந்தர மற்றும் சேமிப்பு வங்கி கணக்குகளில் ரூ.8 லட்சத்து 77 ஆயிரம் இருப்பதை அறிந்து கொண்டனர். மேலும் சாக்குப்பைகளில் இருந்த சில்லரைகளை விடிய விடிய எண்ணினர்.

அதில் சில்லரையாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. போலீசார் முதியவரின் உடல் மற்றும் பணத்தை ஒப்படைக்க அவரது சொந்த ஊரான ராஜஸ்தானில் உள்ள குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here