இயற்பியல் நோபல் பரிசு: 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

இயற்பியல் நோபல் பரிசு, 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.

உலகளவில் மருத்துவம், வேதியியல், இயற்பியல், சமாதானம், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த பரிசு 9 இலட்சத்து 14 ஆயிரம் டொலர் பணம், ஒரு தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசும் 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.

அவர்கள் கனடிய அமெரிக்க அண்டவியல் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் பீபிள்ஸ், சுவிஸ் நாட்டின் வானியலாளர்கள் மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ் ஆவர்.

ஜேம்ஸ் பீபிள்சுக்கு நோபல் பரிசில் பாதியளவு வழங்கப்படுகிறது.

இவர், ‘பிக் பேங்’ என்று அழைக்கப்படுகிற பெரு வெடிப்புக்கு பிறகு இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை பற்றிய நமது புரிதலுக்கு பங்களித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளை செய்ததற்காக இப்பரிசு தரப்படுவதாக நோபல் பரிசை வழங்குகிற ரோயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமி கூறுகிறது.

மைக்கேல் மேயர், டிடியர் கியூலோசைப் பொருத்தமட்டில், இவர்கள் நோபல் பரிசின் பாதியை பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள், நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு கோளினை 1995-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.

ஜேம்ஸ் பீபிள்ஸ், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

மைக்கேல் மேயரும், டிடியர் கியூலோசும் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள்.

மொத்த பரிசு பணமான 9இ லட்சத்து 14 ஆயிரம் டொலரில் பாதியை ஜேம்ஸ் பீபிள்சும், மீதி பாதியை மைக்கேல் மேயரும், டிடியர் கியூலோசும் பகிர்ந்து கொள்கின்றனர்.

நோபல் பரிசளிப்பு விழா, ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10ம் திகதி நடக்கிறது. சுவீடன் மன்னர் 16ம் காரல் குஸ்டாப், நோபல் பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here