சீனாவின் வழியில் செயற்பட்டு பாகிஸ்தானில் 500 ஊழல்வாதிகளையாவது சிறையில் அடைக்க விரும்புகிறேன்!

சீன ஜனாதிபதியின் வழியை பின்பற்றி பாகிஸ்தானில் ஊழலில் ஈடுபடும் 500 நபர்களை சிறைக்கு அனுப்ப விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

இன்று (8) சீனாவிற்கு பயணம் செய்துள்ள இம்ரான் கான், சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சீன மன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

சீனாவிடமிருந்து தான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், நாட்டின் தலைமை ஊழலை எவ்வாறு எதிர்கொண்டது என்பதைத்தான் என்றார்.

“ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் மிகப்பெரிய சிலுவைப் போரில் ஒன்று ஊழலுக்கு எதிரானது. சுமார் 400 “அமைச்சரவை மட்டத்திலுள்ளவர்கள்” ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு சீனாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று நான் கேள்விப்பட்டேன்.

ஜனாதிபதி ஜின்பிங்கின் முன்மாதிரியைப் பின்பற்றி, பாகிஸ்தானில் 500 ஊழல் செய்தவர்களை சிறையில் அடைக்க விரும்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தானில் வழக்குகளை செயலாக்குவது மிகவும் சிக்கலானது” என்று கூறினார்.

ஊழலை ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு மிகப்பெரிய தடையாக அவர் குறிப்பிட்டார்.

சீனாவிடமிருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான விஷயம், மக்களை வறுமையிலிருந்து உயர்த்திய விதம் என்று பிரதமர் இம்ரான் கூறினார்.

“சீனாவைப் பற்றி எனக்கு மிகவும் உத்வேகம் அளிப்பது, அவர்கள் 30 ஆண்டுகளில் 700 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து உயர்த்திய விதம். இது மனித வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை.” என்றார்.

தனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, முதலீட்டாளர்கள் பாகிஸ்தானுக்கு வருவதை எளிதாக்குவதற்காவான முடிவை எடுத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

“அவர்கள் பாகிஸ்தானில் லாபம் ஈட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதம மந்திரி அலுவலகம் நம் நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை உற்சாகப்படுத்துகிறது. வியாபாரத்தை எளிதாக்குவது பிரதமர் அலுவலகத்திலிருந்து இயக்கப்படுகிறது. சிபிஇசி திட்டங்களில் எங்களுக்கு சிக்கல்கள் இருந்ததால் நாங்கள் ஒரு சிபிஇசி ஆணையத்தை உருவாக்கியுள்ளோம். சிபிஇசியின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு அதிகாரம் இருக்கும் என்று நாங்கள் இப்போது முடிவு செய்துள்ளோம், அந்த அதிகாரம் பிரதமர் அலுவலகமாக இருக்கும், இதனால் எனது அலுவலகம் பாகிஸ்தானில் முதலீடு செய்வதை எளிதாக்குகிறது.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here