சிவாஜி விவகாரம்: ‘சுவிட்ச் ஓவ்’ செய்துவிட்டு தலைமறைவான சிறிகாந்தா; அதிரடியாக சுற்றிவளைத்து பிடித்த ரெலோ!

ரெலோவின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் குதித்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கோட்டாபயவின் செல்லப்பிள்ளையென ஒரு தரப்பும், தன்மான தமிழன் என இன்னொரு தரப்புமாக சிவாஜி விவகாரத்தில் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இணையத்திலும், அரசியல் வட்டாரத்திலும் “ட்ரெண்டிங்காக“ மாறிய சிவாஜி விவகாரத்தையொட்டு நடக்கும் சில சுவாரஸ்ய- உள்வீட்டு தகவல்களையும்- தருகிறோம்.

சிவாஜிலிங்கம் ஏன் தேர்தலில் குதித்தார்?, பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

இந்த கேள்விக்கு இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால், “பலமான பின்னணிகள்“ இல்லாமலிருக்கவும் வாய்ப்பில்லை. இதேவேளை, சில அரசியல்புரசல் தகவல்களை பட்டியல்படுத்தி, விடயத்தை காலத்தின் முடிவில் விட்டுவிட்டு விவகாரத்திற்கு செல்லலாம். வடமாகாணசபை தேர்தல் சமயத்தில் அனந்தி சசிதரன் வீட்டில் நடந்த கைக்குண்டு தாக்குதல், மஹிந்த ராஜபக்ச காலத்தில் நீதிபதியொருவரின் இடமாற்ற விவகாரத்தில் அரச அமைச்சராலேயே முடியாத விடயத்தை, சிறிகாந்தா தொலைபேசியில் பசிலுடன் பேசி முடித்தது பற்றிய பல அரசல் புரசல் தகவல்கள் அரசியலரங்கில் உள்ளது.

இதை, இந்தளவில் விட்டுவிட்டு, சிவாஜியின் லேட்டஸ்ட் அதகளத்திற்கு வருவோம்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் நேற்று சிவாஜி சார்பில் அனந்தி சசிதரனால் செலுத்தப்பட்டது. நேற்று முன்தினம் யாழில் ரெலோவின் ஏற்பாட்டில் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சிவாஜியிடம், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமுள்ளதா என கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டிருக்கிறார். அப்படியெந்த திட்டமுமில்லையென சிவாஜி மறுத்து விட்டார்.

ஆனால், நேற்று திடுதிப்பென கட்டுப்பணம் செலுத்தினார்.

இதையடுத்து கட்சிக்குள் பெரிய களேபரம் ஏற்பட்டது. கட்சியின் முடிவை மீறி சிவாஜிலிங்கம் செயற்பட்டதற்கு கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு எழுந்தது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள கட்சி செயற்பாட்டாளர்கள் கட்சி தலைமையுடன் பேசி, தமது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதையடுத்து, சிவாஜிலிங்கத்துடன் கட்சி பிரமுகர்கள் பேசினர். எனினும், சிவாஜி மசியவில்லை. முடிந்தால் கட்சியை விட்டு நீக்கிப்பாருங்கள் என சவால் விட்டார்.

சிவாஜியின் சர்ச்சை உருவானதும், கட்சி செயலாளர் என்.சிறிகாந்தாவை தொடர்பு கொண்ட கட்சி பிரமுகர்கள், உடனடியாக கட்சியின் அரசியல் உயர்பீடம், தலைமைக்குழுவை கூட்டும்படியும்,சிவாஜி மீதான ஒருக்காற்று நடவடிக்கை பற்றி ஆலோசிக்க வேண்டுமென்றனர். எனினும், இதற்கு சாதகமாக பதிலளிக்காத சிறிகாந்தா தனது தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டார்.

சிறிகாந்தாவும், சிவாஜியும் நெருக்கமானவர்கள். சிறிகாந்தா தொலைபேசியை நிறுத்தி வைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் தவிர்ப்பது, சிவாஜியை காப்பாற்றவேவ என்ற அப்பிராயம் கட்சிக்குள்ளேயே வலுக்க ஆராம்பித்தது.

சிறிகாந்தாவின் பின்னணியிலேயே சிவாஜியின் நகர்வு இடம்பெற்றதாக கட்சி பிரமுகர்கள் சிலர் இப்போதும் நம்பகிறார்கள். இது குறித்து பேச முடியாதவறு சிறிகாந்தா தொலைபேசி தொடர்பை துண்டித்திருந்தார். நேற்றும், இன்றும் அவருடன கட்சி தலைவர்கள் பேச முயன்றும் பலனளிக்கவில்லை.

இந்தநிலையில் இன்று கட்சி தலைவர் செல்வம் அடைக்காலதன், மற்றும் வினோ நோகராதலிங்கம் உள்ளிட்டவர்கள் அதிரடி முடிவெடுத்து, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தனர்.

என்.சிறிகாந்தாவின் இல்லத்திற்கு நேரில் சென்று கதவை தட்டியுள்ளனர். அவர்களின் வரவை சிறிகாந்தா எதிர்பார்க்கவில்லை.

கட்சியின் அரசியல் உயர்பீடத்தை உடனடியாக கூட்டி, சிவாஜி மீது கடும் நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியுள்ளனர். எனினும் சிவாஜியை காப்பாற்றவே சிறிகாந்தா முயன்றார். சிவாஜி மீது நடவடிக்கை அவசியமில்லையென்றார். தவிசாளர் பதவியிலிருந்து மட்டும் விலக்கலாமென்றார்.

எனினும், தவிசாளர் பதவியை சிவாஜியே துறந்து விட்டதை சுட்டிக்காட்டி, அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலக்க வேண்டுமென்றனர்.

அத்துடன் வரும் சனிக்கிழமை அரசியல் உயர்பீடத்தை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தினர். சனிக்கிழமை அந்த கூட்டத்தை கூட்டுவதென முடிவானது.


தமிழ்பக்கத்தின் விசேட செய்திகளை ஜேவிபி, தமிழ் வின் உள்ளிட்ட லங்காசிறி ஊடக குழும இணைங்கள் மீள்பிரசுரம் செய்து வருகின்றன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் கன்னத்துடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here