‘கம்பீரின் கதையை முடித்தது நான்தான்’: பாகிஸ்தான் பந்துவீச்சாளர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை தானே முடித்து வைத்தேன் என கூறியுள்ளார் பாகிஸ்தானின் 7.7 அடி உயரமான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான்.

பாகிஸ்தானில் உள்ள தனியார் சனல் ஒன்றுக்கு முகமது இர்பான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

”2012-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தொடரோடு இந்திய அணி வீரர் கவுதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று கூறலாம். அந்தத் தொடரில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் 4 முறை என்னுடைய பந்துவீச்சில்தான் கவுதம் கம்பீர் ஆட்டமிழந்தார்.

இந்தியாவுடன் அந்தத் தொடரில் நான் விளையாடியபோது, இந்திய வீரர்கள் அனைவரும் என்னுடைய பந்துவீச்சை எதிர்கொள்ள அச்சமடைந்தார்கள். என்னுடைய உயரம், என்னுடைய பந்துவீச்சின் வேகம் ஆகியவற்றைப் பார்த்த இந்திய வீரர்களால் கடந்த 2012-ம் ஆண்டு தொடரில், எனது பந்துவீச்சில் சரியாக விளையாட முடியவில்லை.

அதிலும் கவுதம் கம்பீர், போட்டியின்போது என்னுடைய முகத்தைப் பார்க்கவே மாட்டார் (சிரிக்கிறார்). இரு அணிகளும் வலைப் பயிற்சியில் ஈடுபடும்போதுகூட கம்பீர் என்னுடைய முகத்தை நேருக்குநேர் பார்ப்பதைத் தவிர்த்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 2012-ம் ஆண்டு தொடரில் கம்பீர் என்னுடைய பந்துவீச்சில் 4 முறை ஆட்டமிழந்தார். நான் பந்துவீச வந்தாலும், என்னைப் பார்த்தாலும் நடுங்குவார்.

இந்த தொடருக்குப் பின் இங்கிலாந்து தொடரில் மட்டும் இந்திய அணியில் கம்பீர் இடம் பெற்றார். அதன்பின் அணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அதன்பின் அதிகமான போட்டிகளில் கம்பீர் விளையாடவி்ல்லை.
என்னைப் பொறுத்தவரை கவுதம் கம்பீரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையையும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையையும் முடித்து வைத்ததே நான்தான் (சிரிக்கிறார்).

விராட் கோலி கூட என்னிடம் அந்தத் தொடரின்போது பேசுகையில், உங்களின் உயரத்தால் வேகப்பந்துவீச்சை சரியாகக் கணித்து விளையாட முடியவில்லை. மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் பந்துவரும் என்று நினைத்திருந்தேன், ஆனால், 145 கி.மீ. வேகத்தில் பந்து வருகிறது என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், ஒருமுறை எனது லென்த் பந்தை அடித்து ஆட முற்பட்டு கோலி ஆட்டமிழந்தார்.

அப்போது களத்தில் மறுமுனையில் நின்றிருந்த யுவராஜ் சிங் பஞ்சாபி மொழியில் கோலிடம் பந்தை அடித்து ஆடாதே, அதுபோகும் போக்கில் தட்டிவிடு என்றார். ஆனால், கோலி பேச்சைக் கேட்காமல் அடித்து ஆடும்போது, ஆட்டமிழந்தார்”.

இவ்வாறு இர்பான் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here