‘செல்வம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறலாம்… நான் மீறினால்தான் பிரச்சனையா?’: விடாக்கண்டனாக சிவாஜி தொலைபேசியை நிறுத்தி வைத்தார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் முன்னாள் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, ஜனாதிபதி தேர்தல் பந்தயத்திலிருந்து விலக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

எனினும், “விடாக்கண்டனான“ சிவாஜிலிங்கம் தனது முடிவை மாற்ற மாட்டேன் என உறுதியாக தெரிவித்து வருகிறார். தொடர் அழுத்தங்களையடுத்து, இன்று மதியத்தின் பின்னர் தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளார் சிவாஜிலிங்கம்.

ரெலோ அமைப்பின் தவிசாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கட்டுப்பணம் செலுத்தினார்.

சுயேட்சையாக தேர்தலில் களமிறங்க வசதியாக, நேற்றே ரெலோவின் தவிசாளர் பதவியை துறக்கும் கடிதத்தை, கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

எனினும், இன்று தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தும் வரை சிவாஜியின் அதிரடி முடிவு பற்றி கட்சிக்குள்ளும் முக்கிய தலைவர்கள் அறிந்திருக்கவில்லை.

இன்று சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்திய தகவல் வெளியான பின்னர், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் சிவாஜிலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகும்படி வலியுறுத்தினர். ரெலோவின் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் வலியுறுத்தினர்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாமென வலியுறுத்தப்பட்டது. கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் தொலைபேசி வழியாக பேசியதாக குறிப்பிடப்படுகிறது.

கட்சிக்கட்டுப்பாட்டை மீற வேண்டாமென கட்சி பிரமுகர்கள் குறிப்பிட்டபோது, சிவாஜி சூடாகி, “கட்சியின் அரசியல், தலைமைக்குழு பல முடிவுகள் எடுத்தது. வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டாம், அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டாமென முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவையெல்லாம் மீறி செல்வம் அடைக்கலநாதனும், கோடீஸ்வரனும் அரசாங்கத்தை காப்பாற்றினார்கள். அதெல்லாம் கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயலில்லையா? அதையெல்லாம் நீங்கள் கேட்டீர்களா?. கட்சி தவிசாளர் பதவியிலிருந்து விலகி விட்டுத்தான் போட்டியிடுகிறேன். ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினராக தொடர்கிறேன். நான் போட்டியிடுவது உறுதியானது“ என தெரிவித்துள்ளார்.

தொடர் வற்புறுத்தல்களையடுத்து, சிவாஜியின் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவரை சமரசப்படுத்தி, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக வைக்கும் இறுதிநேர முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here