உத்தரவாதம் தரும் வேட்பாளரிற்கு ஆதரவு: தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு!

யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தமிழ் கட்சிகள் சிலவற்றுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜனாதிபதி தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

தமிழ் மக்கள் சார்பில் வேட்பாளர்களிடம் சில கோரிக்கைகளை வைப்பதென்றும், அதை ஏற்றுக்கொள்பவரை ஆதரிக்கலாமென்றும் இதன்போது கட்சிகளிற்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது என தமிழ் பக்கம் அறிந்தது..

யாழ் பல்கலைகழக மாணவர ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கை தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில்- மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம், புளொட் சார்பில்- த.சித்தார்த்தன், பா.கஜதீபன், இராகவன், ரெலோ சார்பில்- என்.சிறிகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணி சார்பில்- க.அருந்தவபாலன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில்- சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில்- க.சுகாஷ், மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது நல்ல யோசனை, ஆனால் அதற்கு காலம் கடந்து விட்டதால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டுமென தமிழ் கட்சிகளிடம் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளரிடமும், வேட்பாளரின் பின்னாலுள்ள நாடுகளிடமும் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து, உத்தரவாதம் கோரப்பட வேண்டுமென மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் வலியுத்தினர். சஜித் பிரேமதாச- மேற்குலகம், கோட்டாபய- சீனா தரப்புடன் பேச வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகளை வேட்பாளர்கள், சர்வதேச சமூகம் கண்டுகொள்ளவில்லையென்றால் என்ன செய்வது என ஆலோசிக்கப்பட்டது.

தேர்தலை பகிஷ்கரிக்கலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது. தேர்தலை பகிஷ்கரிக்கக்கூடாது என மாவை சேனாதிராசா தெரிவித்தார். பகிஷ்கரிப்பை எதிர்ப்பதாக ரெலோவும் தெரிவித்தது. பகிஷ்கரிப்பை புளொட்டும் ஆதரிக்கவில்லை.

பகிஷ்கரிப்பை அறிவிப்பதால் நிகழும் ஆபத்துக்களையும் சுட்டிக்காட்டினர் சிலர். சிறிதரன் எம்.பி தெரிவித்தபோது, விடுதலைப்புலிகள் பகிஷ்கரிப்பை அறிவித்தபோது கிளிநொச்சியில் சைக்கிளில் சென்று ஒருவர் வாக்களித்ததை சுட்டிக்காட்டி, தற்போதைய நிலையில் 50 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.

அப்படியானால் அனைவரும் வாக்களித்து சஜித்தை வெல்ல வைக்கப் போகிறீர்களா என மணிவண்ணன் கேள்வியெழுப்பினார். அப்படியானால் வாக்களிக்காமல் பகிஷ்கரித்து கோட்டாவை வெல்ல வைக்கப் போகிறீர்களா என சிறிதரன் எம்.பி பதில் கேள்வியெழுப்பினார்.

அனைத்து தரப்பும் ஒற்றுமையாக பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்தால் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பகிஷ்கரிப்பார்கள், அதிக சதவீதமானவர்கள் பகிஷ்கரித்தார்கள் என்பதை குறிப்பிடலாமென பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடல் தொடர்பாக பல்கலைகழக மாணவர்கள் இன்று அறிக்கையொன்றை வெளியிடுவார்கள். அந்த அறிக்கையில், எமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பகிஷ்கரிப்பதை பற்றியும் ஆலோசிப்போம் என்றாவது குறிப்பிடலாமென சிறிதரன் எம்.பி குறிப்பிட்டார். அதையும் மாவை எதிர்த்தார்.

இதையடுத்து, ஒவ்வொரு கட்சிகள் சார்பிலும் தலா இருவரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, வரும் திங்கட் கிழமை மாலை மீண்டும் சந்திக்கவுள்ளது. இதில், கட்சிகள் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு, தமிழ் மக்கள் சார்பில் வேட்பாளர்களிடம் சமர்ப்பிக்கவுள்ள கோரிக்கைகள் இறுதி செய்யப்படும்.


தமிழ்பக்கத்தின் விசேட செய்திகளை ஜேவிபி உள்ளிட்ட லங்காசிறி குழும ஊடகங்கள் பிரதி செய்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. செய்திகளை சுடச்சுட தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here