பொதுவேட்பாளர் முயற்சி வெற்றியளிக்கவில்லை: வேட்பாளர் பட்டியலில் இருந்தவர்கள் அனந்தி, கண்மணி!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பான முயற்சிகளை, கடைசிநேரத்தில் ஆரம்பித்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இன்று நண்பகலுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலஅவகாசம் முடியும் நிலையில், பொதுவேட்பாளர் தொடர்பான நிலைப்பாட்டை அந்த குழுவால் எட்ட முடியவில்லை.

சில மத தலைவர்கள், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுபவர்கள், பல்கலைகழக விரிவுரையாளர்கள் இந்த முயற்சியில் இறங்கியிருந்தனர்.

பெரும்பான்மை கட்சிகளிற்கு நிபந்தனையின்றிய ஆதரவு வழங்குவதன் மூலம் அரசியல் ரீதியான எந்த நன்மையும் கிடைப்பதில்லை, வெற்று காசோலையை கையளிப்பதை போன்ற அந்த நடவடிக்கையை கைவிட்டு, அதை அரசியல்ரீதியாக அணுக வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தல் சமயத்தில் பெரும்பான்மை கட்சிகளுடன் இரகசிய பேச்சு நடத்தி, பொருளாதார அனுகூலங்களை பெற்று, தேர்தல் நிலைப்பாடு எடுத்துவரும் நிலையில், இந்த முயற்சி கவனிக்கத்தக்க ஒன்றாக இருந்தது. அதனாலேயே எல்லா அரசியல்கட்சிகளும் தவிர்க்க முடியாமல் அந்த முயற்சி தொடர்பாக கலந்துரையாடி வந்தனர்.

இரண்டு நாட்களின் முன்னர் கொழும்பில் இரா.சம்பந்தனை இந்த குழு சந்தித்தது. அதன்போது, சஜித் பிரேமதாசவுடன் மூன்று சுற்று பேச்சு நடத்தியும் இணக்கப்பாடு கிடைக்கவில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். எனினும், பொது வேட்பாளராக களமிறங்க தயாராக இல்லையென நாசூக்காக குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்னர் நேற்று முன்தினம் க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்கள்.

விக்னேஸ்வரனுடனான சந்திப்பின்போது, அவரை பொது வேட்பாளராக களமிறங்க வேண்டுமென குழுவினர் கேட்கும் நோக்கம் இருக்கவில்லை. எனினும், தான் களமிறங்கும் நோக்கம் இல்லையென விக்னேஸ்வரனே தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரனுடனான சந்திப்பில், சம்பந்தன் அல்லது விக்னேஷ்வரனை களமிறக்கினாலே மக்களின் ஒருமித்த வாக்கை பெறலாமென சுரேஷ் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொதுவேட்பாளர் யார் என்ற கலந்துரையாடலின் முடிவில் சில பெயர்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தன. முன்னதாக கிழக்கு நிர்வாக அதிகாரியொருவரின் பெயர் ஆலோசனை மட்டத்தில் இருந்தாலும், பின்னர் அது கைவிடப்பட்டது. பின்னர், வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியின் வடக்கு இணைப்பாளர் செல்வின், அனந்தி சசிதரன், திருகோணமலை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் கண்மணி உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.

இந்த குழுவினர் நேற்றும் (4) யாழில் கலந்துரையாடல்களை நடத்தினார்கள். புளொட், ரெலோ, தமிழ் தேசிய பசுமை இயக்கம், அனந்தி சசிதரன் தரப்பு ஆகியோருடன் பேச்சு நடத்தினார்கள். தமது பொது வேட்பாளர் பரிந்துரைகள் தொடர்பாகவும் கட்சிகளின் அபிப்பராயங்களை கேட்டனர்.

நேற்று காலையில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் ஐங்கரநேசனை சந்தித்து பேசினார்கள். பொதுவேட்பாளர் திட்டத்திற்கு அவரும் ஆதரவளித்தார்.

பின்னர், அனந்தி சசிதரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இதன்போது, அனந்தி சசிதரனை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி குழுவினர் கேட்டனர். அதற்கு அவர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தார்.

பின்னர் தமிழ் அரசுக்கட்சி, புளொட், ரெலோ அமைப்பினரை சந்தித்து பேசினர்.

இநத முயற்சியை வரவேற்ற மாவை சேனாதிராசா, கட்சிக்குள் கலந்துரையாடி ஒரு முடிவை தெரிவிப்பதாக தெரிவித்தார்.

த.சித்தார்த்தன் குறிப்பிடும்போது, இந்த முயற்சிக்கான காலஅவகாசம் போதாமையை சுட்டிக்காட்டி, கட்சி சாராத வேட்பாளர் களமிறங்க வேண்டியதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன், சுயேட்சையாக போட்டியிடுவதெனில் முன்னாள், இன்னாள் எம்.பியாக இருக்க வேண்டியதையும் சுட்டிக்காட்டி, கட்சி சார்பில் களமிறங்குவதிலுள்ள அபாயங்களையும் சுட்டிக்காட்டினார். எனினும், அவர்களின் முயற்சியை தொடரும்படி கேட்டுக் கொண்டார்.

பின்னர், ரெலோ தரப்புடன் சந்திப்பு நடந்தது. கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் உள்ளிட்டவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த முயற்சியை வரவேற்ற ரெலோ, எனினும் கட்சியின் மத்திய, அரசியல் குழு சம்மதமின்றி தம்மால் முடிவை அறிவிக்க முடியாதென்றார்கள். இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலஅவகாசம் முடியும் நிலையில், தமது கட்சி கூட்டங்களை நடத்தி முடிவை அறிவிக்கும் அவகாசம் கிடையாததை சுட்டிக்காட்டினார்கள். எனினும், அவர்களின் முயற்சியை உற்சாகப்படுத்தினர்.

இதன்போது, என்.சிறிகாந்தாவை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி குழுவினர் கேட்டுக் கொண்டனர். எனினும், அதை அவர் மறுத்தார். கவர்ச்சியான, கட்சி சார்பற்ற ஒருவரை நியமிக்க வேண்டுமென்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here