மீண்டெழுந்து ஆதிக்கம் செலுத்தியது தென்னாபிரிக்கா!

விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று தென்னாபிரிக்க அணி மொத்தம் 346 ரன்களைக் குவித்து 5 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

4ம் நாளான நாளை விரைவில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 100 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி வேகமாக ரன்களைக் குவித்து தேநீர் இடைவேளைக்குப் பிறகு தென்னாபிரிக்காவை இறக்கி விட்டு டீன் எல்கரை விரைவில் வெளியேற்றினால் 5ம் நாள் பிட்ச் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தரும் வாய்ப்பு உள்ளது.

டீன் எல்கரின் 160 ரன்களும் குவிண்டன் டி கொக்கின் கில்கிறிஸ்ட் பாணி 111 ரன்களும் தென்னாபிரிக்காவை பொலோ ஓனிலிருந்து மீட்டு 400 ரன்களுக்கு அருகில் கொண்டு வந்துள்ளது. கடந்த தொடரை ஒப்பிடுகையில் 80 ஓவர்களைத் தாண்டி தென்னாபிரிக்கா ஆடியுள்ளமை, பிட்சின் தன்மையினால் அல்ல, ஏனெனில் பிட்சில் சில ரஃப் இடங்கள் ஸ்பின்னர்களுக்குச் சாதகமாகவே உள்ளன. ஆனால் டீன் எல்கர், டுப்ளெசிஸ், குவிண்டன் டி கொக் மிக அருமையாக ஆடினர், எப்படி வேகப்பந்து வீச்சு ட்ராக்கில் ஷோர்ட் பிட்ச் பந்துகளை ரன் எடுக்கும் வாய்ப்பாக மாற்ற வேண்டுமோ அதே போல் ஸ்பின் எடுக்கும் பிட்சில் ஃபுல் லெந்த் பந்துகளை ரன் வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். இன்று டீன் எல்கர், டுப்ளெசிஸ், டி கொக் இதைத்தான் செய்தனர். ஆகவே பிட்ச் ஏதோ மாறிவிட்டது என்று பொருளல்ல, தென்னாபிரிக்க அணியின் தடுப்பாட்டமும், தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பியதும் தான் இந்திய அணி இன்று போராட வேண்டிய நிலைக்குக் காரணம் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

அஸ்வின் மிகப்பிரமாதமாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 27வது முறையாக அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் இந்திய அணி இன்னமும் 117 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்கா இன்னிங்ஸின் இந்திய பிட்ச் வரலாறு கூறுவதென்னவெனில் 2013க்குப் பிறகு ரொஸ் தோற்ற அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் பக்கம் வந்ததில்லை. ‘இது ஜொஹான்னஸ்பர்க் அல்ல’ என்று கடந்த முறை தென்னாபிரிக்கா மீது லேசான கிண்டல் அடித்த அஸ்வின் தன் விக்கெட்டுகளுக்காக போராட வேண்டி வந்தது என்பதே உண்மை.

அஸ்வின் அவ்வாறு கூறியதற்குக் காரணம் அஸ்வின் பந்துகளை அது திரும்பும் திசைக்கு எதிராக இடது கை வீரர்கள் அடிப்பது கடினம், ஆனால் எல்கர் இன்று அதைத்தான் செய்தார், இதனால் அஸ்வினுக்கும் எல்கருக்கும் ஒரு சிறு போட்டி இருந்தது தெரிந்தது. அஸ்வினிடம் விக்கெட்டையும் அவர் கொடுக்கவில்லை.

ஜடேஜா அதிவேக 200 விக்கெட்டுகள் சாதனை செய்த இந்திய வீரராக மட்டுமல்லாமல் இடது கை வீச்சாளர்களில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை 44 டெஸ்ட்களில் எடுத்துச் சாதனை புரிந்தார்.

மொகமது ஷமி முழு உடற்தகுதியுடன் இல்லை என்பது தெரிந்தது, அதனால் கட்டுப்படுத்தும் நோக்கம் தெரிந்தது, இஷாந்த் சர்மா உண்மையில் இந்தப் பிட்சிலும் பந்துகளை தையலில் பட்டு தெறிக்க வைத்தார், முதல் ஸ்லிப்பை பாரம்பரிய முறைப்படி நிறுத்தியிருந்தால் எல்கர் அவுட் ஆகியிருப்பார் இவரிடம், ஆனால் விசித்திரமான வைட் ஸ்லிப் களவியூகத்தினால் பந்து கைகளுக்குத் தள்ளி சென்றது, இந்திய அணியும் டீன் எல்கரின் உறுதி என்ன என்பதைப் பார்க்க நேரிட்டது.

பவுமா கால்களை நகர்த்தாமல் கிரீசிற்குள் நின்றபடியே ஆடியதால் இஷாந்த் சர்மா பல அவுட் ஸ்விங்கர்களுக்கு பிறகு ஒரு பந்தை பெரிய அளவில் உள்ளே ஸ்விங் செய்ய பவுமா எல்.பி.ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு டுப்ளெசிஸ், எல்கர் கூட்டணி அமைத்து 115 ரன்களைச் சேர்த்தனர், டுப்ளெசிஸ், அஸ்வினின் சாதாரண பந்துக்கு அவுட் ஆகி வெளியேறினார், அதன் பிறகு டி காக், எல்கர் கூட்டணி 164 ரன்களை சுமார் 42 ஒவர்களில் சேர்த்தது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. எல்கர் கடைசியில் ஜடேஜாவின் 200வது விக்கெட்டாக வீழ்ந்தார்.

குவிண்டன் டி காக் விக்கெட்டை அஸ்வின் ஒர்க் அவுட் செய்து வீழ்த்தினார், இரண்டு பந்துகள் லெந்தில் பிட்ச் ஆகி வெளியே நன்றாகத் திரும்பி பீட்டன் செய்ய அதே லெந்த் பந்து ஒன்று நேராக உள்ளே புகுந்து போல்ட் ஆக்கியது.

இந்த விக்கெட் இந்தியாவுக்கு கொஞ்சம் நிம்மதி அளித்தது. ஆட்ட முடிவில் சேனூரான் முத்துசாமி 12 ரன்களுடனும் மஹராஜ் 3 ரன்களுடனும் களத்தில் நிற்க தென்னாபிரிக்கா அணி 385/8 என்று இன்றைய தினத்தை நம்பிக்கையுடன் முடித்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here