படிப்பறிவில்லாத முல்லைத்தீவு மக்களை குழப்புவது பாதிரிமாரே; நந்திக்கடல் பாடத்தை சரியாக கற்கவில்லையா?: ஞானசாரர் எகத்தாளம்!

இந்து கோயில்களில் பலி பூஜை நடத்தும் போது இல்லாத தீட்டு, பௌத்த பிக்குவை எரிப்பதால் வந்து விடுமா? கல்வியறிவில்லாத முல்லைத்தீவு மக்களை தமிழ் அரசியல் வாதிகள் குழப்புகிறார்கள். நீராவியடி விவகாரத்தில் பின்னணியில் பாதியார்களே உள்ளனர். இவர்கள் யாரும் நந்திக்கடலில் கிடைத்த பாடத்தை சரியாக படிக்கவில்லையென எகத்தாளமாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர்.

நேற்று கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனவின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நாயாறு குருகஹந்த விகாரை தொடர்பான சர்ச்சைக்குரிய சம்பவங்களில் சில தமிழ் ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிடாமல் தமிழ் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றன.

நாயாறில் உள்ள அந்த பௌத்த விகாரையுடன் நாங்கள் தொடர்பு கொண்ட போது வடக்கு கிழக்கு மக்கள் உண்மையில் எம்மை அன்போடு நடத்தினார்கள். சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மனதில் கொண்டு எம்மை வரவேற்றார்கள். சில தமிழ் மக்களது வீடுகளில் எங்களுடைய புகைப்படங்களையும் வைத்திருக்கிறார்கள்.

அவ்வாறு எம்மோடு நெருக்கமாகச் ஏற்பட்ட அவர்கள், பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமையுடன் ஏற்பட்ட சர்ச்சையில் யாரோ கூறிய தவறான தகவல்களை கேட்டு மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். அதனால் எமக்கு எந்த வருத்தமும் இல்லை. எனினும் இவர்களை பின்னிருந்து வழி நடத்துகின்ற ஏதேனும் ஒரு மதம் சார்ந்த அமைப்பு உண்டு என்று சந்தேகிக்கிறோம். நடைபெற்ற போராட்டங்களில் முன்னணியில் நின்ற பாதிரமார்களை நோக்கும்போது இராயப்பு ஜோசப் நினைவிற்கு வந்தார்.

இவர்கள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கர்தினாலின் கொள்கையையும் கணக்கில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அதேபோல நந்திக்கடலில் கிடைத்த பாடத்தையும்  சரியாக கற்றுக்கொள்ளாமல், இன்னமும் தமிழ் மக்களை குழப்பும் வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்தபோது முல்லைத்தீவு பிரதேசத்தில் சுமார் 93 ஏக்கர் நிலப்பகுதியில் பௌத்த வழிபாட்டுக்குரிய இடமாக காணப்பட்டது. அதற்கான சான்றுகள் தொல்பொருள் திணைக்களத்திடம் உள்ளது. இங்கு கோடிக்கணக்கான விகாரைகள் இருந்தமையால் அது கொட்டயாரம்பத்துவ என்று அழைக்கப்பட்டது. இந்த ஆதாரங்களுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ன பதிலளிக்கப் போகிறது,

யுத்தம் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு நாயாறு குருகஹந்த விகாரையின் விகாராதிபதி ஆக இருந்த தேரர், வீதியோரத்தில் சுமார் இரண்டு அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையொன்றை கண்டார். சிங்களவர்களும் பிள்ளையாரை வழிபடும் மரபுண்டு.

அந்தவகையில் அவர்தான் இந்தப் பிள்ளையார் சிலையை அங்கிருந்த விகாரைக்கு கொண்டுசென்று வைக்கின்றார். ஆனால் அதற்கென கோயில் நிர்வாக குழு ஒன்றை உருவாக்கி சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்கள் அதனைக் கொண்டு அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.

முல்லைத்தீவில் பெரும்பாலான இடங்களில் மின்சார வசதி கூட இல்லை. கற்றறியாத சாதாரண பாமர மக்கள் இவர்களுடைய அரசியல் நாடகங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனினும், இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் நாங்கள் ஏதாவது கூறிவிட்டால் உடனடியாக சிறையில் அடைத்து விடுகிறார்கள்.

அந்தப் பகுதி விகாரைக்கு சொந்தமான இடம் என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொல்பொருள் திணைக்களத்தினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் இதை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் அடக்கி வைக்காமல் அவர்களுடைய கை பொம்மை போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

பிக்குகள் அந்த விகாரையில் தங்கி, உண்டு, உறங்கி இருந்தார்கள். அதனால் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால் அவருடைய பூதவுடலை மாத்திரம் எரிக்கக்கூடாது. இந்துக்களின் கோயில்களில் பலிபூஜை நடத்தும்போது இல்லாத தீட்டு, ஒரு பௌத்த பிக்குவின் பூதவுடலை எரிப்பதால் வந்து விடுமா? எமக்கு இவை ஒன்றும் புரியவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here