காதலர்களை ஒன்றாக அடக்கம் செய்ய உத்தரவிட்ட பிரபாகரன்: உத்தரவை மீறிய கருணா!

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 21

பீஷ்மர்

விடுதலைப்புலிகளின் முக்கி தளபதி சோவின் தற்கொலை பற்றிய சில தகவல்களை மேலோட்டமாக கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். பால்ராஜின் கட்டளையை ஏற்காத ஜெயந்தன் படையணி தளபதியொருவரை பற்றி குறிப்பிட்டு, அவரை ஏன் புலிகள் விட்டுப்பிடித்தார்கள் என்பதற்கான காரணங்களை குறிப்பிடும்போது மட்டக்களப்பு மகளிர் படையணி தளபதி நிலாவினி, சோ பற்றிய கிளைச் சம்பவங்கள் விரிந்து வந்துள்ளன. இரண்டு கிளைச்சம்பவத்தையும் குறிப்பிட்டு விட்டு, இந்த அத்தியாயத்திலேயே பிரதான விசயத்துக்குள் நுழைந்து விடுவோம்.

குட்டிசிறி மோட்டார் படையணி தளபதியாக இருந்த சோ விற்கும், அந்த படையணியின் மகளிர் அணியின் பொறுப்பாக இருந்த பெண் தளபதியொருவருக்கும் காதல் இருந்தது. சில வருடங்களாக அந்த காதல் இருந்தது. ஆனால் அவர் அதை இயக்கத்தில் பதிவு செய்யவில்லை. இருவரும் பெரியவர்கள், பொறுப்பான பதவியில் இருந்தவர்கள். அதனால் அது நாகரிகமான காதலாக இருந்தது. திருமணம் செய்யும்படி இயக்கம் சொல்லும்போது இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற, இருவருக்கிடையிலான உடன்படிக்கையாக அது இருந்தது. எப்பொழுதாவது இருவரும் சந்தித்து பேசிக்கொள்வார்கள். அவ்வளவுதான். இப்போதே பதிவு செய்தால், ஒரே படையணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் காதலிக்கிறார்கள் என, படையணிக்குள்ளேயே கதை வரலாமென சோ நினைத்திருக்கலாம்.

Image result for தளபதி விதுசா
போராளிகளுடன் தளபதி விதுசா

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணையும் ஒவ்வொருவரையும் பற்றிய தனிப்பட்ட விபரங்கள் பதிவு செய்யப்படும். அதில் ஒரு முக்கியமான கேள்வி- நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா? என்பது. பின்னர் வருடாந்தம் இந்த பதிவு புதுப்பிக்கப்படும். அமைப்பில் இணைந்த பின்னர் காதலில் சிக்கினால் அடுத்த வருட பதிவில் பதிவுசெய்யலாம். சோ இதை செய்யவில்லை.

அவரது காதல் விசயம் எப்படியோ வெளியில் கசிந்து விட்டது. இது அவர்களிற்கு பெரிய அசௌகரியமாக இருந்திருக்க வேண்டும். ஒரே பிரிவில் இருப்பவர்கள், இரகசியமாக காதலித்த விசயம் வெளியில் வந்ததை அவர்கள் ஏன் அவ்வளவு சீரியசான பிரச்சனையாக எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை.

இந்த விசயம் வெளியில் கசிந்ததை தொடர்ந்து, மாலதி படையணி தளபதி விதுசா, சோவின் காதலியை அழைத்து சில அறிவுரைகள் சொன்னதாகவும் அப்போது ஒரு பேச்சிருந்தது. சோவின் காதலி மாலதி படையணி நிர்வாகத்திற்கு கீழ்ப்பட்டவர் அல்ல. ஆனால் பொதுவாக மகளிர் படையணி போராளிகள், தளபதி விதுசாவில் பெரிய மரியாதை வைத்திருந்தனர். அவர் என்ன சொன்னாலும் கேட்பார்கள். இந்த அடிப்படையில் சோவின் காதலியை விதுசா அழைத்து பேசியிருக்கலாம். ஆனால் சோவின் காதலியை விதுசா அழைத்து பேசிய விசயம் போராளிகள் மட்டத்தில் வெறும் பேச்சளவில்தான் இருந்ததே தவிர, உறுதிப்படுத்தப்படவில்லை.

Image result for ஓயாத அலைகள் 3 ஆனையிறவு வெற்றிகாதல் விசயம் வெளியில் வந்தது அவமானம் என நினைத்து அவர்கள் தற்கொலை செய்துகொண்ட படியால் புலிகளும் இந்த சம்பவம் பற்றி அவ்வளவாக விசாரணை செய்யவில்லை.

அம்பகாமத்தில் இருந்த சிறிய அம்மன் ஆலயமொன்றிற்கு சென்ற இருவரும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளனர். அந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி யாருமே இல்லை. ஒரு கைக்குண்டு வெடித்த சத்தம் கேட்டு போராளிகள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, இருவரும் கட்டியணைத்தபடி குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் பிரபாகரனின் காதிற்கு சென்றதும் மிகுந்த வருத்தப்பட்டார். காதல் விசயம் வெளியில் கசிந்ததை ஏன் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும்? என்னிடம் சொல்லியிருந்தால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருப்பேனே என்றுதான் கூறினாரே தவிர, சோ மீது கோபப்படவில்லை. வாழ்வில் இணைய முடியாத அந்த காதலர்களின் உடல்களை ஒன்றாக அடக்கம் செய்ய உத்தரவிட்டதும் பிரபாகரன்தான்.  அவர்கள் இருவரும் மாவீரர் பட்டியலில் இணைக்கப்படவில்லை. ஆனால் அருகருகாக, முழுமையான மரியாதையுடன் புலிகள் அவர்களின் உடல்களை அடக்கம் செய்தனர்.

புலிகள் அமைப்பிற்குள் பின்னாளில் ஒரு விதி ஏற்படுத்தியிருந்தார்கள். சொந்த காரணங்களினால் தற்கொலை செய்து கொள்பவர்களை மாவீரர் பட்டியலில் இணைப்பதில்லை. துயிலுமில்லங்களிலும் விதைப்பதில்லை. அவர்களின் உடலை வீட்டிற்கே கொடுத்து விடுவார்கள்.

சோவின் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்றால், புலிகளிற்குள் காதல் விசயங்களில் எப்படியான இறுக்கமான நடைமுறை இருந்தது என்பதை குறிப்பிடவே. இப்பொழுது நான் சொல்லப்போகும் விசயம் சிலருக்கு அசௌகரியமாக இருக்கலாம். ஆனால் இதை அந்த களத்தில் நின்ற யாருமே மறுக்க மாட்டார்கள்.

மேலே சொன்ன இதே இறுக்கமான நடைமுறை கிழக்கு படையணிகளில் அவ்வளவாக இருக்கவில்லை. களமுனையில் தொடர்ச்சியாக நிற்கும் போராளிகளிற்கு அதிகமான கட்டுப்பாடு விதிப்பது அவர்களை சோர்வடைய செய்து, களத்தை விட்டு ஓட வைக்குமென அதன் தளபதிகள் நினைத்தார்கள். இதனால் களமுனையில் சில விசயங்களில் கண்டும்காணாமலும் இருந்து விட்டார்கள்.

அன்பரசி படையணி தளபதி நிலாவினியும் இந்த இயல்புடையவர்தான். அவருக்கும் ஜெயந்தன் படையணி முக்கியஸ்தர்கள் சிலருக்குமிடையில் உடல்ரீதியான தொடர்பிருப்பதாக களமுனையில் பேச்சு எழுந்தது. இது புலிகளின் உயர்மட்டம் வரை சென்றது.

இந்த விசயத்தை விசாரணை செய்த புலனாய்வுத்துறையினர், வந்த தகவல் உண்மைதான் என்பதை உறுதி செய்தனர். இது பிரபாகரனிற்கு தெரியவந்ததும், கோபமடைந்தார். ஜெயசிக்குறு களமுனை தளபதியாகவும், கிழக்கு படையணிகளின் தளபதியாகவும் இருந்த கருணாவை அழைத்து, இந்த சம்பவத்தை குறிப்பிட்டு கண்டித்தார். உடனடியாக நிலாவினியை இயக்கத்தை விட்டு நீக்குமாறும் அறிவுறுத்தினார்.

ஆனால் கருணா அதை செய்யவில்லை. அன்பரசி படையணி பொறுப்பாளராக வேறு ஒருவரை நியமித்துவிட்டு, நிலாவினிக்கு பொறுப்புக்கள் வழங்காமல் விட்டு வைத்திருந்தார். பிரபாகரன் சொன்னது, நிலாவினியை வீட்டுக்கு அனுப்பும்படி. ஆனால், கருணா அதை செய்யாமல், நிலாவினியின் பொறுப்புக்களை மட்டும் எடுத்து புதியவருக்கு வழங்கினார். இந்த விடயம் பிரபாகரனிற்கும் போனது. அவர் சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

கருணா ஏன் நிலாவினியை வீட்டுக்கு அனுப்பவில்லை?

Image result for ஓயாத அலைகள் 3 ஆனையிறவு வெற்றிஇது கொஞ்சம் சிக்கலான விசயம். இது தொடர்பில் உத்தியோகபூர்வமான எந்த விசாரணையும் நடக்காததால், ஒரு தலைப்பட்சமான தகவல்கள்தான் உள்ளன. விடுதலைப்புலிகளால் நிலாவினி விசாரணை செய்யப்பட்டபோது, சில தகவல்களை குறிப்பிட்டிருந்தார். எனினும், சூழ்நிலை கருதி அவற்றை இப்போது குறிப்பிடாமல் தவிர்த்து விடுகிறோம். வாசகர்கள் புரிந்துகொளவார்கள் என நம்புகிறோம்.

ஓயாத அலைகள் மூன்றின்போது பால்ராஜின் கட்டளையை ஏற்க மறுத்த அக்கினோவை பற்றிய தகவல் புலிகளின் தலைமைக்கு போனபோது, அவர் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையென தீர்மானித்தார்கள். இன்னொருமுறை தலைமையின் கட்டளையை கருணா மீறும் சூழலை ஏற்படுத்தாமல் இருப்போம், கருணா விடயத்தில் விரைவாக ஒரு முடிவெடுக்கலாம் என்பதே புலிகளின் எண்ணம்.

கிழக்கு தளபதிகளில்- தனது சிஷ்யர்களாக, நம்பிக்கையானவர்களாக- கருணா கருதும் ஒரு சிலர் கட்டுப்பாடுகளை மீறி நடப்பதும், கருணா அதை கண்டும் காணாமலுமிருப்பதையும் புலிகள் அவதானித்திருந்தனர். அக்கினோ விசயத்திலும், பிரச்சனையை உடைக்கும் வரை செல்லாமல், வளைந்து கொடுத்து செல்வோம், நேரம் வரும்போது கவனிப்போம் என புலிகள் நினைத்தார்கள்.

அக்கினோ விசயத்தை பெரிதுபடுத்தாததைபோல அப்போது புலிகள் நடந்து கொண்டார்கள். ஆனையிறவை வீழ்த்தும் உக்கிர சண்டையும் நடந்து கொண்டிருந்தது. இந்த சூழலில் அக்கினோ என்ற ஒருவரின் சிக்கலை முதன்மைப்படுத்தவில்லை. ஆனால் அக்கினோ விசயம் புலிகளின் “கையாளப்பட வேண்டிய விசயங்கள்“ பட்டியலிற்கு போனது. அத்துடன், ஓயாத அலைகள் மூன்றில் அதன்பின்னர் ஜெயந்தன் படையணியை களமிறக்குவதையும் தவிர்த்துக் கொண்டனர். உப படையணியொன்றை போலவே பயன்படுத்தினார்கள். ஓயாத அலைகள் மூன்று, நான்கில் வடக்கை சேர்ந்த படையணிகள்தான் மிகப்பெரும் பங்கு வகித்தன. கிழக்கு படையணிகள் உப படையணிகளாகவும், ஓய்விலும் இருந்தன.

புலிகள் படையணிகளிற்குள் பேதம் காட்டுவதில்லை. ஆனால் ஜெயந்தன் படையணி விசயத்தில் இப்படியான முடிவெடுத்ததற்கு காரணமிருக்கிறது. அக்கினோ விசயத்தை தளபதி தீபன் உடனடியாக கருணாவிற்கு அறிவித்தார். ஆனால் கருணா அதை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை. “அவர்கள் அப்படி நடப்பதில் தவறில்லை“ என்பதை போன்ற பதிலொன்றையும் சொல்லியிருக்கிறார். கிழக்கு இளநிலை தளபதிகளின் முறுகலின் பின்னணி என்னவென்பதை புலிகள் சரியாக கணித்ததால், தொடர்ந்து நிலைமைய சிக்கலாக்காமல் விடுவோம் என்றுதான் ஜெயந்தன் படையணியை அவ்வளவாக களமிறக்கவில்லை.

Image result for ஓயாத அலைகள் 3 ஆனையிறவு வெற்றி
ஆனையிறவில் புலிக்கொடியை ஏற்றும் பானு

2000 ஆம் ஆண்டில் புலிகளிற்குள் நடந்த இவ்வளவு பெரிய சிக்கலை இதுவரை பெரும்பாலானவர்கள் அறிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்பொழுது நடந்த சில சம்பவங்களை இப்பொழுது குறிப்பிட்டால், அனைத்தையும் பொருத்திப் பார்த்து நீங்கள் ஒரு முடிவிற்கு வர வாய்ப்பாக அமையும்.

ஓயாத அலைகள் 3 இன் யாழ்ப்பாண முனைக்கான சமரில் கிழக்கு படையணிகளின் பங்கு மிக குறைவு. வடக்கை சேர்ந்தவர்கள்தான் இந்த சமரில் ஈடுபட்டனர். இந்த சமர் தொடங்க முன்னர் தளபதிகள் மட்டத்திலான கலந்துரையாடலில் பிரபாகரன் சொன்ன விசயத்தை கவனிக்க வேண்டும். “யாழ்ப்பாணத்திற்கான சமரை யாழ்ப்பாணத்தவர்களே செய்யட்டும். கிழக்கு போராளிகளை எல்லா முனைகளிலும் களமிறக்குவது சரியல்ல. அவர்களிற்கு தமது பிரதேசங்களை மீட்க வேண்டிய தேவையும் உள்ளது“.

ஆனையிறவை புலிகள் கைப்பற்றியதும், 2000 ஏப்ரலில். 22ம் திகதி தளபதி பானு ஆனையிறவில் புலிக்கொடியை ஏற்றினார். இன்றும் புலிகளிற்கு எதிரானவர்கள் சொல்வார்கள், தளபதி கருணா ஆனையிறவில் கடுமையாக போராடியும் புலிக்கொடி ஏற்றும் பொறுப்பு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பானுவிற்கு வழங்கப்பட்டது என. ஆனால் உண்மையில் விசயம் அதுவல்ல. இவர்கள் சிந்திப்பதை போல “அவர் மட்டக்களப்பு, நான் யாழ்ப்பாணம்“ என சின்னத்தனமாக புலிகள் சிந்தித்ததில்லை.

அப்படியென்றால் உண்மையில் நடந்தது என்ன?

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here