உடுவில் பெண் குழந்தையின் உயிரிழந்தாரா, உயிருடன் இருக்கிறாரா என்பதில் நீடித்த சர்ச்சை நேற்று முற்றுப்பெற்றதாகவும், இறுதிச்சடங்கு இன்று நடைபெறுமென்றும் உறவினர்களால் வெளியிடப்பட்ட தகவலை நேற்றிரவு தமிழ் பக்கம் வெளியிட்டிருந்தது. எனினும், இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் குழப்பமும், திருப்பங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
குழந்தையை இன்று அடக்கம் செய்வதாக முன்னர் திட்டமிட்டிருந்த குடும்பத்தினர், இன்று நடக்கவிருந்த இறுதிச்சடங்களை தள்ளிவைக்கலாமா என ஆலோசித்துக் கொண்டிருப்பதாக நேற்றிரவு (09) தமிழ் பக்கத்திடம் தெரிவித்தனர். என்ன முடிவெடுப்பது என தெரியாமல் குடும்பத்தினர் தடுமாறி வருவதை அவதானிக்க முடிகிறது.
காரணம்- இறுதியாக குழந்தையை பரிசோதித்த வைத்தியர், குழந்தையின் உயிர்நிலைமை தொடர்பில் தன்னால் தெளிவாக அறுதியிட முடியவில்லையென கூறியதையடுத்தே இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த
இரண்டரை வயது பெண் குழந்தை காய்ச்சல் பாதிக்கப்பட்டாள். குழந்தையை தெல்லிப்பளை வைத்தியசாலையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு 4 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது.
எனினும் காய்ச்சல் நீடித்தமையால் குழந்தை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு 11 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது. குழந்தையை சடலமாக புதன்கிழமை
நள்ளிரவு உறவினர்களிடம் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
குழந்தையின் இறுதிச் சடங்கு நேற்றுமுன்தினம் (7) வீட்டில் நடைபெற்றுள்ளது. முற்பகல் 11 மணியளவில் குழ்ந்தையின் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியுள்ளது.
அதனால் குழந்தை உயிருடன் உள்ளது என சிலரால் நம்பிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து குழந்தையின் சடலம் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னர் இந்து முறைப்படி வழிபாடும் நடைபெற்றுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டது என பெரியோர்கள், பெற்றோருக்கு எடுத்துக் கூறினர். அதனையடுத்து சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிச் சடங்கு நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இறுதிச் சடங்கு இடம்பெறவிருந்த நிலையில் குழந்தை மலம் சலம் கழித்துள்ளார்.
அதனால் அவர் நெருங்கிய உறவினர் வீடொன்றில் வைக்கப்பட்டு, வைத்தியர்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளார். பின்னர் நேற்று (9) காலை கடவுளிடம் மன்றாடி பெற்றோர் வழிபாடுகளில் ஈடுபட்டனர். எனினும் குழந்தை உயிரிழந்ததாக தனியார் வைத்தியசாலை கூறியது.
இதன்பின்னர், குழந்தை வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு சென்று பரிசோதனையில் ஈடுபட்ட சிரேஷ்ட வைத்தியரொருவர், குழந்தையின் உடல்நிலைமையால் அதிசயித்துப் போனதாக பெற்றோர் தெரிவித்தனர். வைத்தியப் பரிசோதனையின் முடிவில் குழந்தை இன்னமும் உயிருடன் இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தெரிவிக்க முடியாமல் வைத்தியர் தடுமாறியதாக கூறினார்கள்.
தன்னுடைய வாழ்நாள் கால வைத்தியத்துறை வரலாற்றில் இவ்வாறானதொரு அதிசயத்தைப் பார்த்ததேயில்லை எனக் குறித்த வைத்தியர் தெரிவித்துள்ளதுடன் கடவுளை நீங்கள் நம்புவது போல நானும் நம்புவதாகவும், ஆகவே, குழந்தையை இன்னமும் இரண்டு நாட்கள் வைத்துப் பார்க்குமாறும் தெரிவித்து விட்டுக் கனத்த மனத்துடன் அங்கிருந்து சென்றுள்ளார் என கூறினார்கள். இதனால் இன்றைய இறுதிச்சடங்கும் நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்றிரவு தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டனர். எனினும், இதை இன்று காலை இதுவரை உறுதிசெய்ய முடியவில்லை.
இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரனிடம் இந்த சர்ச்சை தொடர்பில் தமிழ் பக்கம் வினவியபோது- “இறந்த உடலிலிருந்து மலம், சலம் வெளியேற வாய்ப்புள்ளது. பொதுவாகவே யாராவது இறந்தால், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர்தான் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்போம்“ என்றார்.