வவுனியா பொதுவைத்தியசாலை பதில் பணிப்பாளர் அனுமதியின்றி வெளிநாடு சென்றாரா?: விசாரணை தீவிரம்!

வவுனியா பொதுவைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பெற்ற விடுமுறைகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணையொன்று நடைபெற்றுள்ளது. கடந்த 07ம் திகதி இந்த விசாரணை நடைபெற்றது.

இந்த வருடம் ஏப்ரல் 19ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரையான காலப்பகுதியில் பதில் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், அதே வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தரான அவரது மனைவி ஆகியோர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக, சுகாதார அமைச்சிற்கு முறைப்பாடொன்று அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.நந்தகுமார், மாகாண நிர்வாக பணிப்பாளர் ஜக்சில் உள்ளிட்ட குழுவினர், வவுனியா பொது வைத்தியசாலைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

குறித்த காலப்பகுதியில் முறையற்ற அனுமதியின்றி மலேசியா சென்றதாக பதில் பணிப்பாளர், அவரது மனைவியான தாதிய உத்தியோகத்தர் ஆகியோர் தொடர்பாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைத்தியசாலை பணிப்பாளர் வெளிநாடு செல்வதெனில், ஆளுனரின் அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம். எனினும், வவுனியா பதில் வைத்தியசாலை பணிப்பாளர் அதை பெற்றிருக்கவில்லையென அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளாந்த கையொப்பமிடும் புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை புகைப்பட பிரதியெடுத்துக்கொண்டு விசாரணைக்குழுவினர் சென்றுள்ளனர்.

பதில் பணிப்பாளர், கணக்காளர், வாகன சாரதி உள்ளிட்டவர்களிடம் அந்தகுழு வாக்குமூலம் பெற்றதாக தமிழ் பக்கத்திற்கு தகவல் தந்த சுகாதரத்துறை உயரதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த ஏப்ரலில் வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வெளிநாடு சென்று வந்த அடுத்தடுத்த சில தினங்களில், வவுனியா வைத்தியசாலையிலிருந்து வெளிநாடு சென்று வந்த வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பற்றிய விபரத்தை மாகாண சுகாதார சேவைகள் அலுவலகத்திம் கோரியிருந்தது. வவுனியா வைத்தியசாலையிலிருந்து அனுப்பப்பட்ட விபரத்தில், பதில் பணிப்பாளரின் விபரம் அதில் உள்ளடங்கியிருக்கவில்லையென கூறப்படுகிறது.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here