மாபியாக்களின் பிடியில் நெல்லியடி பொதுச்சந்தை! விவசாயிகள், மக்கள் திண்டாட்டம்

சத்திரியன்

விவசாயம்தான் இந்த தேசத்தின் அடிப்படை. தேசத்தின்முதுகெலும்பாக இருப்பவர்கள் விவசாயிகள் என பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளும் சொல்கின்றன. என்றாலும் எந்த அரசும் விவசாயிகளை வாழ வைப்பதில்லை. நவீன பொருளாதாரக்கொள்கை, நிர்வாக செயற்பாடுகள் விவசாயிகளையும் விவசாயத்தையும் பிரித்து, இணையவே முடியாத பிளவை உண்டு பண்ணுபவைகளாக உள்ளன.

இது மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி. இடதுசாரிய சிந்தனை மரபில் வளர்ந்த மைத்திரி பொலன்னறுவயில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இன்றும், வீட்டு தோட்டம் வைத்திருப்பதாக கூறுகிறார்.

அவர் சுகாதார அமைச்சராக இருந்த சமயத்தில், தனது வீட்டுத்தோட்டத்தில் விளைந்த மரவள்ளியுடன் ஒரு போஸ் கொடுத்திருந்தார். இன்றும் கூகிளில் மைத்திரியை தேடுபவர்கள் அந்த படத்தை காணலாம்.

நன்றாக விளைந்த மரவள்ளி அது. ஒரு வீட்டின் தேவைக்கு மிதமிஞ்சியது. தொழிற்முறை விவசாயியோ, வீட்டுத்தோட்டம் செய்பவரோ நிச்சயம் அதை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்தே தீர வேண்டும். மைத்திரி அப்படி செய்திருக்கமாட்டார். அப்படி செய்திருப்பார் என வைத்தாலும், நல்லவேளையாக அவர் பொலன்னறுவயில் இருந்துவிட்டார்.

பத்திற்கு ஒன்று கழிவு, தராசு வெட்டல் முறைக்கு எதிராக உயரதிகாரிகளிற்கு கடிதம் ஒன்று தயார் செய்தபோது, நெல்லியடியை சுற்றியுள்ள பல விவசாய அமைப்புக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. விவசாயிகளிற்கு தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வின்மைதான் இந்த சிக்கலிற்கு காரணம் என்கிறார்கள்.

அவர் நெல்லியடியில் இருந்திருந்தால், அன்றுடன் விவசாயத்தை மூட்டை கட்டி வைத்திருப்பார். விவசாயிகள் நமது கண்கள் என இன்று பேசுவதைபோல பேசிக்கொண்டிருக்க மாட்டார். “பேசாமல் பிள்ளை குட்டிகளையாவது உருப்பட வையுங்கள்“ என்றுதான் விவசாயிகளிற்கு அறிவுரை சொல்லியிருப்பார்.
அப்படியொரு பகல்கொள்ளை நெல்லியடி பொதுச்சந்தையில் நடக்கிறதென குமுறுகிறார்கள் விவசாயிகள். பிரதேசசபை நிர்வாகம், சந்தை குத்தகைகாரர்கள், உள் வியாபாரிகள் என சந்தை வர்த்தகத்துடன் தொடர்புபட்ட அத்தனை தரப்பினாலும் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கிறது விவசாயிகளின் உழைப்பு. சந்தை நிர்வாகத்தை வழிப்படுத்த வேண்டிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்த பகல்கொள்ளையை வேடிக்கை பார்ப்பவர்களாக இருப்பதுதான் விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நெல்லியடி பொதுச்சந்தைக்கு தமது உற்பத்திகளை கொண்டு வருபவர்கள், தமது உற்பத்திக்கான நியாயமான விலையை பெற்றுக்கொள்ள முடியாது. இது மட்டும்தான் பிரச்சனையா என்றால்… இல்லை. நுகர்வோர் அதை கொள்வனவு செய்வதென்றால் ஆனை விலை, குதிரை விலை கொடுக்க வேண்டியுள்ளது. வெள்ளவத்தை சந்தையில் விவசாய உற்பத்திகள் விற்கப்படும் விலையை விட, நெல்லியடி பொதுச்சந்தையில் அதிக விலை விற்கப்படுகிறதென்றால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

தரகர்கள், உள் வியாபாரிகளின் கொள்ளை இலாப நோக்கம்தான் நெல்லியடி பொதுச்சந்தையை சார்ந்த வியாபாரிகளிற்கும், நுகர்வோருக்கும் பேராபத்தாக உருவெடுத்துள்ளது.

விவசாயிகள் சந்தைக்குள் வைத்து தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாதென அண்மைக்காலம் வரை வியாபாரிகள் அடாவடி செய்தனர். எனினும், விவசாயிகள் சிலர் விட்டுக்கொடுக்காமல் போராடியதால் இன்று அந்த உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. என்றாலும், விவசாயிகளின் விற்பனையில் குழப்பத்தை ஏற்படுத்தும் காரியங்களை வியாபாரிகள் செய்கிறார்கள் என குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

நெல்லியடி பொதுச்சந்தைக்கு உற்பத்திகளை கொண்டு வரும் விவசாயிகள் மூன்று வகையினர். முழுநேர விவசாயி,பகுதிநேர விவசாயி, பொழுதுபோக்கு விவசாயி. கடைசி இரண்டு வகையினரும் அரச, தனியார் உத்தியோகம் அல்லது வெளிநாட்டு பிரஜைகளாக உள்ளனர். உற்பத்தி பொருட்களை தேடி நியாயமான விலையில் இவர்கள் சந்தைப்படுத்துவதில்லை. காலையில் அலுவலகம் செல்வதற்கு முன், வியாபாரிகளுடன் பேரம் பேசாமல் கிடைக்கும் விலையில் உற்பத்திகளை விற்றுவிடுகிறார்கள். இவர்களால்தான் முழுநேர விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த வருடம்வரை நெல்லியடி பொதுச்சந்தையில் காட்டுத் தர்பார்தான் நடந்தது. விவசாயிகள் உற்பத்திகளை விற்பனை செய்ய முயன்றால் விபரீதங்கள் ஏற்பட்டது. ஒருங்கிணைப்புகுழு கூட்டம், பிரதேசசபை, பிரதேசசெயலர் இணைந்து உருவாக்கிய குழு கூட்டங்களில் விவசாயிகள் உற்பத்திகளை விற்பனை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றிய போதும், உள்வியாபாரிகள் அதை அனுமதிக்கவில்லை. பெண்ணொருவர் தனது உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்ய முயன்றபோது, பொருட்களை தட்டிவிட்டு வியாபாரிகள் அடாவடியில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் பிரதேசசபை, அப்போதைய சந்தை குத்தகைக்காரர், பொலிசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூராட்சி ஆணையாளர், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் உள்ளிட்டவர்களிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். இதன்பின்னரே ஆமை வேகத்தில் நெல்லியடி பொதுச்சந்தையில் சில மாற்றங்கள் நடந்தன.

முக்கியமாக சந்தைக்கு வரும் பொருட்களை நிறுவையிட இலத்திரனியல் தராசு மாற்றப்பட்டது. முன்னர் இருந்த இரும்பு தாராசில் 1.5- 2 கிலோகிராம் வரையில் குறைவாக நிறையிடப்பட்டு வந்தது. புதியவர்கள் என்றால் 4 கிலோஅளவில் வெட்டப்படுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். அதுதவிர, கொண்டுவரப்படும் பொருளின் நிறையை தராசில் நிற்பவர் ஆளுக்கு தகுந்தது போல

மாற்றி பதிவிட்டு வந்தனர். இப்போது இலத்திரனியில் தராசு மாற்றப்பட்டதன் பின்னர் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.

ஆரம்பகால சந்தை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த கோளாறிற்கு காரணம். அதுவரையிருந்த சந்தைமுறை விடுதலைப்புலிகளின் காலத்தில் மாற்றமடைந்தது. இந்த சமயத்தில் உற்பத்தியாளர்கள் நட்டமடைவதில்லை. உற்பத்தி பொருட்கள் மேலதிகமாக விரயமாகாமல் புலிகள் கொள்வனவு செய்தனர். ஒரே கொள்வனவு விலை தீர்மானித்து, உள்வியாபாரிகள்ளும் புலிகளும் அந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்தனர். அப்போதுதான் பத்திற்கு ஒன்று கழிவுமுறை வந்தது. பத்திற்கு ஒன்று கழித்து, வியாபாரியின் மொத்த விற்பனையின் 15% புலிகளிற்கு கொடுக்க வேண்டும்.

பத்து கிலோவிற்கு ஒரு கிலோ கழிவு. மண்ணிற்குள் விளையும் அனைத்திற்கும் இந்த கழிவுமுறை இருந்தது.அறுவடை செய்த வெங்காயம் ஓரிரு நாட்களில் விற்கப்பட்டாலே இந்த விதிமுறைக்கு பொருத்தமானது. சில மாதங்களின் பின் வெங்காயம் விற்பவரிற்கு இது அநீதி. நெல்லியடியில் இதுதான் நடக்கிறது.
விவசாயிகளின் போராட்டத்தின்பின் அந்த நடைமுறை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரச்சனையாகும் என கருதுபவர்களிடம் மட்டுமே கழிக்கப்படாமலிருக்கிறது. மற்றையவர்களிடம் இன்றுவரை கழிக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது. இது சர்ச்சையாகும் சமயங்களில் சில நாட்கள் மட்டும் சீராக இயங்கும். பின்னர் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடும்.

கழிவுமுறையை பிரதேசசபையும் மறைமுகமாக ஊக்குவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். சந்தை வாடகையை வியாபாரிகளிடம் அதிகமாக அறவிட, இப்படியொரு சலுகையை கொடுக்கிறார்கள் என்கிறார்கள். புலிகள் தமது வரிக்காக வியாபாரிகளுக்கு கொடுத்த பத்திற்கொன்று கழிவை, அதிகரித்த வாடகையை பெற பிரதேசசபை கண்டும் காணாமலும் விடுகிறதா?

இன்றைய நிலவரப்படி உற்பத்தியாளர்களிடம் இருந்து ஐம்பது ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் மரவள்ளி கிழங்கு நூறு ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மரவள்ளி நட்டு ஒன்பது மாதத்தின் பின் அறுவடை செய்யும் வியாபாரியின் நிலைமையையும், சந்தை மாபியாக்களின் கொள்ளை இலாபத்தையும் புரிந்து கொள்ளுங்கள். எண்பது ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் முருங்கைக்காய் இருநூற்று நாற்பது ரூபாவிற்கு விற்பனையாகிறது. கொழும்பில் இருநூறு ரூபாவிற்கு முருங்கைக்காய் வாங்கலாம். முப்பது ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் வாழைப்பழம் தொன்னூறு தொடக்கம் நூறு ரூபா வரை விற்கப்படுகிறது.

விவசாயிகளை மோசமாக வஞ்சிக்கும் சந்தைமுறை இது. மரக்கறி உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாவிட்டால், தானிய உற்பத்திக்கு மாறப் போவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். அப்படி நடந்தால், நெல்லியடி பிரதேசத்தில் மரக்கறி விலை பவுண் விலையாகும்.

முன்னர் கொள்வனவிற்காக வெளியிடங்களில் இருந்தும் வர்த்தகர்கள் நெல்லியடிக்கு வந்தனர். இன்று யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் உள்ளூர் தரகர்கள் என்கிறார்கள். இப்பொழுது தரகர்கள் மூலம் அவர்களிற்கு விவசாய உற்பத்திகள் கிடைக்கின்றன.

விவசாயிகளின் உற்பத்தி செலவு கண்மண் தெரியாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், விவசாய உற்பத்திகளை பொருத்தமான விலையில் விற்க முடியாமலிருப்பது விவசாயிகளிற்கு செய்யும் அநீதி. விவசாயம் செய்வதில் உள்ள சிரமத்தை ஒரு விவசாயி சொன்னார். தோட்டத்தில் மாடு கட்ட முடியாது. களவுபோய்விடும். ஒரு லோட் எரு முப்பத்தெட்டு ஆயிரம் ரூபா. இந்த விலைக்கு எரு வாங்கி விவசாயம் செய்து, நெல்லியடி சந்தைக்கு உற்பத்திகளை கொண்டுவரும் விவசாயி எப்படி வாழ்வது?

உள்ளூர் விவசாயிகளிடம் கழிவு வெட்டுபவர்கள், தம்புள்ள, வலிகாமம், தென்மராட்சி பிரதேசங்களில் இருந்து மரக்கறி கொண்டுவரும் வியாபாரிகளிடம் கழிவு வெட்டுவதில்லை. அவர்கள் தங்குதடையில்லாமல் சில்லறை வர்த்தகத்திலும் ஈடுபடுகிறார்கள். இது சட்டமீறல்.

அந்த சமயத்தில் கரவெட்டி பிரதேசசெயலர், “நீங்கள் என்ன விலைக்கென்றாலும் வாங்கி விற்பனை செய்யுங்கள்“ என கூறி, வியாபாரிகளின் காட்டுதர்பாரிற்கு வழியேற்படுத்தி கொடுத்தார் என வருத்தத்துடன் கூறுகிறார்கள் விவசாயிகள். அதுதவிர, விவசாயிகள் தமது உற்பத்திகளை வியாபாரிகளிடம்தான் விற்பனை செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டு, விவசாயிகளின் வயிற்றில் அடித்தார் இந்த பிரதேசசெயலர்.

தற்போதைய நெல்லியடி சந்தையின் நிர்வாகமுறை கஸ்ரப்படும் விவசாயிகளிற்கு அனுகூலமாக இல்லை. நோகாமல் நொங்கு குடிக்கும் வியாபாரிகளிற்கு சாதகமானது. இது அங்கு வியாபார மாபியாவாக உருவெடுத்து, உற்பத்தியாளர்கள், நுகர்வோரிடம் இருந்து பகல்கொள்ளையிடுகிறது.

இதை தடுக்க, விவசாயி வாழ, மக்கள் நியாயமான விலையில் பொருள்களை கொள்வனவு செய்ய உழவர் சந்தையே பொருத்தமானது. உற்பத்தியாளனிற்கும் நுகர்வோருக்கும் இடையில் பாலமாக இருப்பவைதான் சந்தை. புறோக்கர்களை உருவாக்குபவை அல்ல.

—————————————————————————–

நெல்லியடி சந்தை விலை என பத்திரிகைகளில் ஒரு குறிப்பு வரும். இது மக்களை ஏமாற்றும் வித்தையென்கிறார்கள் விவசாயிகள். நேற்றைய விலை என பத்திரிகைகளில் ஒரு விலை வரும். அது நேற்றைய விற்பனை விலை. அனேகமாக கவர்ச்சிகரமான விலைதான் வெளியிடுகிறார்கள். நல்ல விலையில் கொள்வனவு செய்வார்கள் என உற்பத்தியாளர்கள் சென்றால், “அது நேற்றைய விலை. இன்று மலிந்துவிட்டது“ என குறைந்த விலையில் கொள்வனவு செய்கிறார்கள். கவர்ச்சிகரமான விலையை குறிப்பிட்டு, உற்பத்தியாளர்களை சந்தையை நோக்கி வரவைக்கவே இந்த உத்தியை பாவிப்பதாக சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here