நாகரிக மீற்றர் வட்டிக்காரர்களாகும் நிதி நிறுவனங்கள்!

சியா

இன்று வடக்கு கிழக்கில் தற்கொலைகளிற்கு அதிக காரணம் என்ன?
காதல் தோல்வி, குடும்ப பிரச்சனை, பரீட்சை முடிவுகள்… எதுவும் இல்லை. மக்களின் வறுமையை பயன்படுத்தி தமது கல்லாப்பெட்டியை நிரப்ப முயலும் நிதி நிறுவனங்கள்தான். தற்கொலைகள், குடும்ப சீரழிவுகள் என வடக்கு கிழக்கில் கண்ணுக்கு தெரியாத நச்சு கிருமியாக நிதி நிறுவனங்கள் இன்று வடக்கு கிழக்கில் வேர் பரப்பிவிட்டன.

வறுமை, வேலையின்மை, அரசஉதவிகள் இல்லாமை போன்ற காரணங்களால் நிதி நிறுவனங்களின் பிடியில் இலகுவில் மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த நிறுவனங்களிடம் சிக்குபவர்களிற்கு புலியின் வாலைப் பிடித்தவர்களின் கதைதான். விடவும் முடியாத, தொடவும் முடியாத பரிதாபத்திற்குள்ளாகுகிறார்கள். கிட்டத்தட்ட தவித்த முயல் அடிக்கின்றன நிதி நிறுவனங்கள்.

நிதி நிறுவனங்களின் நுண்கடன் திட்டத்தால் வடக்கு கிழக்கில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான மதிப்பீடெதுவும் கிடையாது. நுண்கடன் திட்டங்களின் மறுபக்கம் தொடர்பாக எல்லாவற்றையும் அரசு அறிந்திருந்தும், அது பற்றி அக்கறையில்லாமல் இருந்து விடுகிறது. காரணம், பெரும் நிதி நிறுவனங்களை பகைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இருப்பதில்லை. எதையெல்லாம் செய்து ஆட்சியாளர்களை திருப்திப்படுத்த வேண்டுமென்பதை பெரு முதலாளிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதேபோல நாட்டிலுள்ள ஏழை எளியவர்களையெல்லாம் பாதுகாக்கும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருளாதார திட்டங்களும் வல்லமையும் அரசுகளிடம் இருப்பதில்லை. இந்த இரண்டும் இணையும் புள்ளியில் ஏழை, எளியவர்களின் இரத்தத்தை உறிஞ்சுபவர்களாக நிதி நிறுவனங்கள் மாறுகின்றன என்பதே யதார்த்தம்.

நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த வடமாகாணசபையும் முயன்று பார்த்தது. இரவுவேளைகளிலும் கடன் வசூலிக்க செல்வதை தடுக்க மாகாணசபை ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தாலும், பல இடங்களில் அது கடைப்பிடிக்கப்படுவதில்லை. கடன் வசூலிப்பவர்கள் இரவுகளில் வீடு தேடி செல்வது தொடர்கதையாகவே உள்ளது. அண்மையில் தென்மராட்சியில் கடன்வசூலிப்பவர்கள் இரவு நேரத்தில் சென்று அட்டகாசம் செய்த சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது.

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட- பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரதேசங்கள் மீதுதான் நிதி நிறுவனங்கள் கண்வைத்துள்ளன.

தொழில்வாய்ப்பின்மை, வறுமை போன்ற காரணங்களை தவிர்த்து- நகரப்பகுதிக்கு செல்வதில் உள்ள போக்குவரத்து வசதியீனம், வங்கிகளிற்கு சென்று கடன்பெறுவதில் உள்ள தயக்கம், கிராம மக்கள் வங்கி அதிகாரிகளை சந்திப்பதில் உள்ள சிரமங்கள் என பல நூதனமாக காரணங்களும் நிதி நிறுவனங்களிற்கு வாய்ப்பாகிவிட்டது. இதனால் கழுத்துப்பட்டி, சப்பாத்து சகிதம் கிராமங்களை நோக்கி

படையெடுக்கிறார்கள் நிதி நிறுவன பிரதிநிதிகள். பல கிராமங்களில் இவர்களை எமதூதர்கள் என்றுதான் விளிக்கிறார்கள்.

இந்த திட்டத்தின் அனைத்து கூறுகளிலும் மோசடியும், ஏமாற்றுமே உள்ளது. ஏழ்மையை சாட்டாக வைத்து அவர்களின் சிறுஉழைப்பை உறிஞ்சும் மகாமோசமான குற்றத்தை அரசு அனுமதித்துள்ளது.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கிழக்கின் பல கஸ்டப்பிரதேசங்களில் நிதி நிறுவனங்கள் ஒரேவிதமான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றன. கிராமத்தில் யாராவது ஒருவரின் வீட்டை மையமாக தேர்ந்தெடுக்கிறார்கள். கடன்பெறுபவர்கள் அங்கு அழைக்கப்பட்டு விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. குழு கடன்களும் உள்ளன. இதில் ஐந்துபேர் அல்லது மூன்று பேர் இணைந்த குழுவாக்கப்படுகிறார்கள். இதில் மத்திய வங்கியின் கட்டுப்பாடு ஒன்றை நிதி நிறுவனங்கள் மீறுகின்றன. கடன் பெறுபவர்கள் நிதி நிறுவன அலுவலகங்களில்தான் விண்ணப்ப படிவங்களை பூர்த்திசெய்ய வேண்டும். மனிதாபிமானம், இயற்கைநீதியையெல்லாம் கணக்கில் எடுக்காத நிதி நிறுவனங்கள் எந்த சட்டத்திலும் ஓட்டையைத்தான் தேடுவார்கள். கிராமங்களில் உள்ள வீடுகளில் நிரப்பப்படும் விண்ணப்ப படிவங்களை அலுவலகங்களில் பூர்த்தி செய்வதாகவே குறிப்பிடுவார்கள்.

இங்கு வழங்கப்படும் கடன்களில் அநியாய வட்டி விதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஊரில் உள்ள மீற்றர் வட்டிக்காரர்களை போலத்தான் நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றன. என்ன, இவர்கள் கழுத்துப்பட்டி, சப்பாத்து அணிந்து நாகரிகமாக மீற்றர் வட்டி அறவிடுகிறார்கள்.

நிதி நிறுவனம் ஒன்றின் நுண்கடன் திட்டம் ஒன்றின்படி முப்பதாயிரம் ரூபா ஒருவர் கடனாக பெறலாம். இதற்கு விண்ணப்பிக்கும் ஒருவரிற்கு இருபத்தெட்டாயிரம் ரூபாவே வழங்கப்படுகிறது. மிகுதி இரண்டாயிரம் ரூபா சேவைக்கட்டணமாக கழிக்கப்பட்டு விடுகிறது. கடனை செலுத்தி முடிக்க வேண்டிய காலப்பகுதி பதினெட்டு மாதங்கள். மாதாந்த கட்டுப்பணம் இரண்டாயிரத்து முன்னூறு ரூபா. இதன்படி பார்த்தால் பதினெட்டு மாத இறுதியில் நிதிநிறுவனத்திற்கு கடனாளி செலுத்தியுள்ளது நாற்பத்தியோராயிரத்து நானூறு ரூபா. கிட்டத்தட்ட பதின்மூவாயிரத்து நானூறு ரூபாவை வட்டியாக செலுத்துகிறார். அவர் எடுத்த கடன் தொகையின் பாதியை விட சற்றுகுறைந்த தொகையை வட்டியாக செலுத்துகிறார்!
மூவர், ஐவராக அமைக்கப்பட்ட குழுவினர் தவணைப்பணம் செலுத்தும் போது அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும். ஒருவர் இல்லையென்றாலும், அவர் வரும்வரை அனைவரும் காத்திருக்க வேண்டும். யாராவது ஒருவர் பணம் செலுத்தவில்லையென்றால், அவருக்காக மற்றவர்கள் பணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட திகதியில் கட்டுப்பணத்தை செலுத்தாமல் விட்டால் ஐநூறு ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும்.

குழுக்களாக அமைக்கப்பட்ட கடன்குழுவில் ஒருவர் பணம் செலுத்தாமல் விடுவதால் ஏற்படும் பிணக்குகள் அடிதடி வரையும் சென்றிருக்கிறது. கிராமப்புறங்களில் இப்படியான சம்பவங்கள் அதிகம் பதிவாகிறது. நிதி நிறுவனங்களும் மிரட்டல் உத்தியைதான் கடன் அறவிட வைத்திருக்கின்றன. சண்டியர்களை போல நடந்துதான் கடனை வசூலிக்கிறார்கள். முன்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கிய நிதி நிறுவனங்கள் சில ரௌடிக்குழுக்களை போஷித்து, கடன் அறவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களில் பணத்தேவைகளுடன் இருப்பவர்களை இலக்காக வைக்கும் நிதி நிறுவனங்கள், நுண்கடன் திட்டங்களின் நிபந்தனைகளை தெளிவாக கூறுவதில்லை. இதனால்தான் புலிவாலை பிடித்த கதையாக பலர் அல்லாடுகிறார்கள். நுண்கடன் திட்டங்களால் பலன் என்னவென்பதை அரசு முறையாக ஆய்வுசெய்து, அதை வழிப்படுத்த வேண்டும். நுண்கடன்களால் கிடைக்கும் சிறிய கடனால் யாரும் தொழில்முயற்சிகளை செய்ய முடியாது. மீறி தொடங்கினாலும், அதன் வட்டிவீதம் அவரை உறிஞ்சியெடுத்துவிடும். சில தற்காலிக ஆறுதல்களை மட்டுமே நுண்கடன்கள் வழங்கும். பின்னர் நுண்கடனும் இன்னொரு பிரச்சனையாகிவிடும்.

ஆக, மக்களின் வறுமை என்ற ஒன்றை மூலதனமாக வைத்து நிதி நிறுவனங்கள் தங்களை கொள்ளை இலாபமீட்டுகின்றன. இதை பற்றி பேசினால், நாங்களா மக்களை நிர்ப்பந்திக்கிறோம், அவர்கள் தேடி வருகிறார்கள் என்ற சப்பைகட்டை கட்டுவார்கள். இந்த இடத்தில்தான் அரசின் குறைபாடு வெளித்தெரிகிறது. இலங்கை போன்ற சிறியநாட்டில் அரசின் கவனிப்பிற்கு எட்டாத கிராமங்கள் இன்னும் இருப்பது அவமானம். வங்கிகளில் கடன் எடுப்பதில் சிரமமடையும் மக்களும், மக்களுக்கு கடன்கொடுப்பதில் தயங்கும் வங்கிகளும் வளர்ச்சியடையும் நாட்டிற்கு நல்ல அறிகுறியல்ல.

சொந்த நாட்டு மக்களையே மொட்டையடித்து சில பெருமுதலாளிகள் வளரவும், அவர்களின் சில பணியாளர்கள் வாழவும் நிதி நிறுவனங்களை இப்படியே தொடர அனுமதிப்பது அரசாங்கத்தின் கொள்கை தவறு. நிதி நிறுவனங்களிற்கு சார்ப்பாக ஒரு தலைப்பட்சமான விதிமுறைகளை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும். மக்களின் வாழ்வுடன் தொடர்புபட்ட விவகாரங்களில் பகல்கொள்ளை அணுகுமுறை இருக்க முடியாது. மக்களின் வாழ்க்கை மாற்றம்தான் நிதி நிறுவனங்களின் குறிக்கோளாக இருந்தால், குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். நிதி நிறுவனங்களை இஸ்டம் போல இயங்க அனுமதிக்ககூடாது. இது எல்லாவற்றையும் விட எல்லா மக்களும் அரசுஉதவியையும், கடனையும் பெறும்விதமான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here