பிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார தேரர்?: பரபரப்பின் உச்சம்!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள்ளேயே பௌத்த பிக்குவின் உடலை புதைக்க, உயர்மட்ட அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இதேவேளை, ஆலய நிர்வாகத்துடன் சமரசத்திற்கு முயன்று, அந்த பகுதியில் பிக்குவின் உடலை புதைக்க, பௌத்த தேரர்கள் இன்று மாலை தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான குருகந்த ரஜ மகாவிகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை ஆலயத்திற்கு கொண்டு வந்து, அங்கேயே அடக்கம் செய்ய முயற்சிகள் நடக்கலாமென எதிர்பார்க்கப்படுவதாக நேற்று தமிழ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

இதற்கான ஏற்பாடுகள் நேற்று நடந்ததையடுத்து, ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்களால் பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. மேலதிக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று காலை இடைக்கால தடையுத்தரவு ஒன்றை நீதிவான பிறப்பித்தார். இதன்படி, நாளை காலை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இந்த விடயம் ஆாாயப்பட்டு தீர்ப்பளிக்கப்படும்வரை, பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் பூமிக்குள் புதைக்கவோ, தகனம் செய்யவோ தடைவிதிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று பொதுஜன பெரமுனவினர் பெருமளவில் அங்கு வந்து பௌத்த பிக்குவின் உடலிற்கு வணக்கம் செலுத்தினர். இதன்போது, பிள்ளையார் ஆலயத்தில் குவிந்திருந்த தமிழ் மக்களுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இன்று மாலை பிக்குகள் தரப்பினர் சமரச முயற்சியில் இறங்கினர். பிள்ளையார் ஆலய நிர்வாகம் தரப்பிலிருந்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்று, பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்கும்படி கோரினர். அனைவரும் வணங்கும் தெய்வம் ஒன்றுதான், எமக்குள் வீண் சச்சரவு வேண்டாம் என தற்போதைய விகாராதிபதி தெரிவித்தார். எனினும், ஆலய நிர்வாகம் அதை நிராகரித்து விட்டது.

இதேவேளை, பௌத்த பிக்குவின் சடலத்தை அங்கு புதைக்க அனுமதிக்கும்படி உயர்மட்ட அரசியல் அழுத்தம் ஆலய நிர்வாகத்திற்கு பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

நிர்வாக அழுத்தத்தை மேற்கொண்டு பிக்குவின் உடலை எப்படியாவது அந்த பகுதியிலேயே புதைக்க வேண்டுமென உயர்மட்ட உத்தரவு, நிர்வாகத் தரப்பிற்கு வழங்கப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட நிர்வாக அலகுகளிலிருந்து உத்தியோகப்பற்றற்ற முறையில் இந்த தகவல்கள் ஆலய நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த பகுதி தமிழ் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்கு குழுவொன்று நாளை முல்லைத்தீவு வரவுள்ளதாக பௌத்த பிக்குகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்குவின் உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு நாளை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதால், பொலிசார் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனமும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீராவியடி ஆலயம் சார்பில் வழக்கில் முன்னிலையாகும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் மற்றும் கொழும்பிலுள்ள சில சிரேஷ்ட சட்டத்தரணிகள் நாளை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார்கள். அது தவிர, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் சட்டத்தரணிகள் குழுவொன்றும் நாளை முன்னிலையாகவுள்ளது. அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் குழுவினர் சுயாதீனமாக அங்கு முன்னிலையாக தீர்மானித்துள்ளதாக அறிய வருகிறது.


தமிழ் பக்கத்தின் செய்திகளை ஜேவிபி இணையம் தொடர்ந்தும் திருடி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்தில் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here