டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: கற்பனையில் நடிகைகள் வருவது தவறா?

எஸ்.வரதன் (37)
திருக்கோவில்

எனக்கு திருமணமாகி 6 மாதமாகிறது. பேச்சு திருமணம். எனக்குள்ள ஒரு பிரச்சனை, உடலுறவின்போது, மனைவியை இன்னொருவராக கற்பனை செய்து விடுகிறேன். சினிமாவில் பார்க்கும் பெண்களை போன்ற கற்பனை வருகிறது. அடிக்கடி செக்ஸ் உணர்வு ஏற்படுகிறது. அப்போதும் சினிமா நடிகைகள்தான் தோன்றுகிறார்கள். இதை எப்படி தவிர்க்கலாம்? இதனால் ஏதாவது பாதிப்பு வருமா?

டாக்டர் ஞானப்பழம்: தங்களால் செய்யமுடியாத காரியங்களை, கற்பனையில் செய்து திருப்தி அடைவது மனித இயல்பு. கற்பனைத் திறன் இல்லையென்றால், மனிதன் பெரிய ஏமாற்றத்துக்கு ஆளாகிவிடுவான். கற்பனைதான் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

செக்ஸ் கற்பனை என்பதும் உலகமக்கள் அனைவருக்கும் இருக்கும் சாதாரண உளவியலே. இந்தக் கற்பனை செக்ஸ் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த உளவியல் ஆராய்ச்சியாளர் ப்ரெட் கார் (Brett Khar) பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கற்பனை என்பது சிறுவயதிலிருந்தே அனைவருக்கும் இருக்கும். பருவ வயதை அடைந்ததும், செக்ஸ் விஷயத்தில் கற்பனை அதிகரித்துவிடுகிறது என்கிறார் அவர்.

1994ம் ஆண்டு அமெரிக்காவில் “செக்ஸ் இன் அமெரிக்கா“ (Sex in America) என்ற ஆராய்ச்சிப் புத்தகம் வெளியானது. அதில், 54 சதவிகித ஆண்கள், 19 சதவிகிதப் பெண்கள் தினந்தோறும் செக்ஸ் பற்றியே கற்பனை செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஹெரால்ட் லெய்டன்பெர்க் (Harold Leitenberg) இதுகுறித்து ஆய்வு செய்தார். அந்த ஆய்வில், 85 சதவிகித ஆண், பெண் இருபாலரும், செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது கற்பனை செய்துகொள்கிறார்கள். அப்படி, உறவின்போது கற்பனை செய்துகொள்கிறவர்களின் செக்ஸ் வாழ்க்கை, மற்றவர்களின் வாழ்க்கையைவிடச் சிறப்பாக இருக்கும். இதில் ஆண்களின் கற்பனைக்கும் பெண்களின் கற்பனைக்கும் கொஞ்சம் வேறுபாடுகள் இருக்கும். பெண்கள், காதலனுடன் ரொமான்ஸ் செய்வது, ஏற்கெனவே தெரிந்தவர்களுடன் உறவு கொள்வது போன்று கற்பனை செய்வார்கள். ஆனால், ஆண்களோ பெண்களின் செக்ஸ் அங்கங்கள், வெவ்வேறு பெண்களுடன் செக்ஸில் ஈடுபடுவது, ஓரல் செக்ஸ் போன்று விதம்விதமாகக் கற்பனை செய்துகொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

செக்ஸ் கற்பனை என்பது தாம்பத்ய வாழ்க்கைக்கு உதவக்கூடியதுதான். செக்ஸ் உறவில் சலிப்பு ஏற்படும்போது அந்தக் கற்பனை உதவும். உறவின்போது கவனச்சிதைவு ஏற்பட்டு, ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறையும்போது இது கைகொடுக்கும். இது பெண்களுக்கும் பொருந்தும். அதனால்தான், இந்த செக்ஸ் கற்பனையை உளவியல் சார்ந்த செக்ஸ் பிரச்னைகளுக்கு ஒரு தெரபெடிக் கருவியாக வைத்தியர்கள் பயன்படுத்துகிறார்கள்.

நம் செயல்பாடுகள் முழுவதும் கற்பனையைச் சார்ந்தே இருக்கும்போதுதான் இது பிரச்னையாக உருவெடுக்கும். இப்படி இருப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். இவர்கள் ஆபத்தானவர்கள். கற்பனையில் மட்டும் வாழாமல் நிஜத்திலும் வாழ வேண்டும். உங்கள் செயற்பாடுகள் திருப்தியாக இருக்கும் வரை மனதை போட்டு அலட்டிக் கொள்ள தேவையில்லை.

உங்கள் விவகாரம் கற்பனை கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல. கற்பனை குதிரையை தட்டி விட்டு, ஜமாயுங்கள்!

 

பெண் (37)
திருகோணமலை

நான் அரச உத்தியோகத்தில் நல்ல பொறுப்பில் இருக்கிறேன். கணவர் வர்த்தகர். எமக்கிடையில் 15 வயது வித்தியாசம் உள்ளது. மூத்த மகனிற்கு 11 வயது. கணவரின் சில நடவடிக்கைகள் எனக்கு பிடிப்பதில்லை. இதனால் எமக்கிடையில் பல வருடங்களாக தொடர்ந்து சண்டை நிலவுகிறது. விவாகரத்து பெற்றுவிடலாமோ என்று கூட யோசித்தேன். இதனால் இரண்டாவது குழந்தையை தள்ளிவைத்தேன். இப்பொழுது இரண்டாவது குழந்தை பிறந்து 4 மாதமாகிறது. எவ்வளவுதான் சண்டை பிடித்தாலும், சில சமயங்களில் உறவை தவிர்க்க முடிவதில்லை. எப்படி இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்?

டாக்டர் ஞானப்பழம்: அன்பு தங்கையே… நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஒரு பிரச்சனையே கிடையாது. மனமும், உடலும் அவற்றில் இயல்பில் செயற்படுகின்றன. அவ்வளவுதான்.

செக்ஸின் ஆகப்பெரிய பலம் என்ன தெரியுமா?

நீங்கள் மனதிடம் உடையவராக இருந்தாலும், கட்டுப்பாட்டோடு இருக்கப் பழகியவராக இருந்தாலும், பல நாள்கள் சாப்பிடாமலேயே தாக்குப்பிடிக்கக்கூடியவர் என்றாலும் சில இயற்கை உபாதைகளைத் தவிர்க்கவே முடியாது. மல சலம் கழிக்காமல் எப்படி ஒரு நாளைக் கடத்த முடியாதோ, அதைப்போலத்தான் தாம்பத்யமும். சில நாள்களுக்கு அதிகமாக உறவுகொள்ளாமல் தாக்குப் பிடிக்கலாமே தவிர, காலம் முழுவதும் அப்படியே தொடர முடியாது. சில வைராக்கியமான மனிதர்களுக்கு மட்டுமே அது சாத்தியமாகலாம்.

உங்களிற்கு சில தகவல்கள் சொல்கிறேன்.

இரு இணைகளுக்கு இடையிலான உறவில் மகிழ்ச்சி நிலவுவதில் உடலுறவுக்கு முக்கிய பங்கிருக்கிறது. இது தொடர்பாக பாலியல் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில், இரு காரணங்களைக் கண்டறிந்தார்கள்.

உறவு வலுப்பெற…

கணவன்/மனைவிக்கிடையே எந்தக் காரணத்துக்காகப் பிரச்னை ஏற்பட்டிருந்தாலும், அதைத் தவிர்த்துவிட்டு நல்ல உறவு பேணப்பட வேண்டும் என்பதற்காகக் கொள்ளும் உடலுறவு. இவர், இந்த உறவின் மூலம் தன் இணையிடம் நெருக்கத்தை அதிகரிக்க விரும்புபவர்.

மோதலைத் தவிர்க்க…

தினசரி வாழ்கையில் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கவும், சண்டை, ஏமாற்றத்தைத் தவிர்க்கவும் வைத்துக்கொள்ளப்படும் உடலுறவு. அதே நேரத்தில் இத்தகைய உடலுறவுகொள்ளும் நபர்களின் ஆசை மற்றும் திருப்தி, அவரின் இணைக்குக் கிடைப்பதில்லை என்றும், இது தொடரும் பட்சத்தில் கட்டாயத்தின்பேரில் இணங்குபவருக்கு நாளடைவில் பாலுறவுமீது வெறுப்பும், அது குறித்த எதிர்மறை எண்ணங்களுமே ஏற்படும் என்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. சண்டையில்லாமல், சராசரியாக வாழும் தம்பதியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்விலும், இதே முடிவுகள் வெளியாகின.

ஒருவருக்கு பூரண திருப்தியும், மற்றொருவருக்கு அத்தகைய சந்தோஷமும் கிடைக்காததால் உடலுறவு கொள்ளாமலேயே இருப்பது நல்லதா?- இதற்கும் விடை சொல்கிறது அந்த ஆய்வு. தம்பதியினர் உடலுறவு கொள்ளாத நாள்களுடன் ஒப்பிடுகையில், என்ன காரணங்களுக்காக உறவுகொண்டிருந்தாலும், கொஞ்சமாவது அவர்கள் திருப்தி பெற்றார்கள் என்பதை அவர்களால் மறுக்க இயலவில்லை.

அன்பு செலுத்த கால நேரம் தேவையில்லை. அதைப்போல, உங்கள் தாம்பத்ய அன்பைச் செலுத்தவும் எந்த நிபந்தனைகளும் தேவையில்லை. அதே நேரத்தில், இணையால் உங்களுடன் உடல், மனரீதியாக கொஞ்சம்கூட இணங்க முடியாது என்ற சூழலில் அவர்களுடன் பலவந்தமாக உறவு கொள்ளக் கூடாது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதும், அதை ஏற்றுக்கொண்டு செயல்படுவதும் முக்கியம்.

தங்கள் தேவைகளை பரஸ்பரம் புரிந்து கொள்வதும் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதும், கல்யாணமாகி 50 ஆண்டுகள் ஆனாலும் தினம் தினம் தேனிலவுக் காலமாகவே அமைய உதவும் என்பதே பாலியல் மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை.

உங்கள் இருவருக்குமான உறவு நீடிப்பது, உங்களிற்கிடையிலான மனக்கசப்புக்களை நீக்க உதவும். பிரச்சனைகளை களையும் முயற்சியை இருவரும் பேசி, மனப்பூர்வமாக ஆரம்பிக்கலாம். இருவராலும் முடியாவிட்டால் ஒரு உளநல ஆலோசகரிடம் செல்லலாம்.

உங்கள் இருவருக்குமிடையில் உள்ள வயது வித்தியாசம், கணவரின் வர்த்தகம், அரச உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதன் மூலம் விரிவடையும் பல உலகம் என, உங்கள் இருவருக்குமிடையிலான கசப்பிற்கு காரணங்கள் இருக்கலாம். அதை நீங்களோ, உளநல ஆலோசகர் மூலமோ களைந்து விடுங்கள்.

முந்தைய பாகத்தை படிக்க: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 14

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here