பிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை!

புற்றுநோயால் உயிரிழந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள்ளேயே தகனம் செய்ய வேண்டுமென, ஏனைய பிக்குகள் விடாப்பிடியாக நிற்பதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான குருகந்த ரஜ மகாவிகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை ஆலயத்திற்கு கொண்டு வந்து, அங்கேயே அடக்கம் செய்ய முயற்சிகள் நடக்கலாமென எதிர்பார்க்கப்படுவதாக நேற்று தமிழ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

உயிரிழந்த பிக்குவின் உடல் அங்கு எடுத்துவரப்படும் ஏற்பாடுகள் நடந்ததையடுத்து, நேற்று இரவு பிரதேச மக்கள் இது குறித்து பொலிஸ் முறைப்பாடு மேற்கொண்டனர். இரவே, மேலதிக நீதிவானின் முன்னிலையில் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டு, நாளை திங்கட்கிழமை நீதிவான் நீதிமன்றத்தில் இது குறித்து ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கப்படும் வரை, ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல், குருகந்த ரஜா மகா விகாரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி உடலை தகனம் செய்யும் முயற்சிகள் நடந்தாலும் என்ற முன்னெச்சரிக்கையாக, பிரதேச மக்கள் பெருமளவில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் திரண்டுள்ளனர். நூறிற்கும் அதிகமான மக்கள் அங்கு திரண்டிருப்பதாக, அங்குள்ள தமிழ்பக்க செய்தியாளர் குறிப்பிட்டார். தற்போது அங்கு ஒருவித பதற்றமான நிலைமை நீடிக்கிறது.

பிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்ய அனுமதிக்கும்படி, விகாரை சார்பில் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் கட்டுமானங்கள் செய்ய அனுமதிக்கக்கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தை நாளை காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் ஆராயவுள்ளது. இதன்போது, அடக்கம் செய்வது குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, ஆலயம் சார்பில் முன்னிலையாக சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலர் நாளை முல்லைத்தீவு செல்கிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here