மஹிந்த கட்அவுட் விழுந்ததால் எதிர்காலம் கேள்விக்குறியான யுவதி!

மகரகம பகுதியில் வீதிக்கு குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் பிரசார கட்அவுட் ஒன்று சரிந்து விழுந்ததில், இளம்பெண் ஒருவர் இடுப்பின் கீழ் செயலிழந்து, வைத்தியசாலையில் தொடர்ந்து போராடி வருகிறார். செயலிழந்து போயுள்ள நரம்புகளை புத்துயிர்க்க வைக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் நடத்தும் மருத்துவ போராட்டம் பேசப்படாத கதையாகி விட்டது.

சுலரி லக்னிமா (27) என்ற யுவதியே, கட்அவுட் சரிந்து விழுந்ததில் இடுப்பின் கீழ் செயலிழந்துள்ளார்.

காலி ரத்கமவை சேர்ந்த சுலரி வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். மகரகம நகரில் உள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சந்திப்புக்காக செப்டம்பர் 8ம் திகதி ரத்கமவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறினார். கம்பஹாவை சேர்ந்த அவரது காதலன் சுஜீவா ஹர்ஷன் (29) அங்கிருந்து புறப்பட்டு, காதலியுடன் சேர்ந்து கொண்டார்.

இந்த ஜோடி பமுனுவவை நோக்கிச் செல்லும்போது, ​​அரசியல் நிகழ்வுக்காக போடப்பட்ட பெரமுனவின் பெரிய பந்தல் வீதியில் சரிந்தது. பந்தலின் ஒரு பகுதி சுஜீவாவின் காலில் மோதி அவர் விழுந்தார். பலகைகளின் கீழ் சுலாரி சிக்கிக்கொண்டார்.

“அங்கிருந்தவர்களும் நானும் சுலரியை விடுவித்தோம். முச்சக்கர வண்டியொன்றில் அவளை களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். கால்களை உணர முடியாமலிருப்பதாக சுலரி, முச்சக்கர வண்டிக்குள் என்னிடம் சொன்னாள். அவை இன்னும் இருக்கிறதா என்று கேட்டாள். வைத்தியசாலையில் இருந்தபோது, ​​ரத்கமவிலுள்ள அவரது தாய்க்கும், மகரகமவிலுள்ள அவரது அத்தைக்கும் செய்தி அனுப்பினோம். எனினும், அவர்கள் களுபோவிலவுக்குச் செல்வதற்கு முன்பு, அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், ”என்று சுஜீவ தெரிவித்தார்.

சுலரி இப்போது இரண்டு வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருக்கிறார். இந்த வார தொடக்கத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. “அவரது கால்களில் கடுமையான நரம்பு பாதிப்பு இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு விரிவான பிசியோதெரபி தேவைப்படும் என்றும் வைத்தியர்கள் எங்களிடம் கூறினர். அவளுடைய கீழ் மூட்டுகளின் பயன்பாட்டை முழுமையாக மீட்டெடுப்பாளா என்பதை அவர்கள்தான் சொல்ல முடியும்” என்று சுஜீவா விளக்கினார்.

பொதுஜன பெரமுனவை சேர்ந்த முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் உபாலி கொடிகார, அவரது மனைவி முன்னாள் மகரகம முதல்வரும், மகரகமவின் பொதுஜன பெரமுன அமைப்பாளருமான காந்தி கொடிகார ஆகியோர் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து, அதற்காக இந்த அட்அவுட்டை வைத்திருந்தார்கள். இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொள்வதாக இருந்தது.

கொடிகார தம்பதி வைத்தியசாலைக்கு சென்று, சுலரிவைஸ்ரீய பார்வையிட்டதாகவும் சுஜீவ கூறினார். “அவர்களுடன் எங்களுக்கு எந்த சண்டையும் இல்லை. நாங்கள் ஏழை மக்கள். நாங்கள் விரும்புவது சுலரி நலமடைய வேண்டும் என்பதே ”என்று சுஜீவ கூறினார்.

கடந்த திங்களன்று நுகேகொட மேலதிக நீதிவான் முன்னிலையில், உபாலி கொடிகார ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மகரகம நகர சபையிடமோ, வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடமோ அனுமதி பெறாமல் அந்த கட்அவுட் வைக்கப்பட்டதாக மகரகம பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். நகரசபையும் அதை உறுதி செய்தது.

கொடிகார இதை மறுத்தார். “பாடசாலை புத்தகங்களை ஆண்டுதோறும் விநியோகிக்கும் நிகழ்வை நாம் செய்கிறோம். அதற்காகவே இந்த பந்தல் அமைக்கப்பட்டது. ஓகஸ்ட் 28 அன்று நகரசபை தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக  கோரிக்கை வைத்தோம். அவர் கடிதத்தில் செப்டம்பர் 8 அன்று கையெழுத்திட்டார். என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. செப்டம்பர் 7 ம் திகதி இரவு 10 மணியளவில் இந்த பந்தல் அமைக்கப்பட்டது. மறுநாள் காலை 10 மணியளவில் அது சரிந்தது. ஏன் என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை. எத்தனை காரணங்களால் அது சரிந்திருக்கக்கூடும். ஒரு வேளை அது ஒரு வாகனத்தால் தாக்கப்பட்டிருக்கலாம், ஒருவேளை அது காற்றாக இருக்கலாம், இது நமது அரசியல் போட்டியாளர்களால் நாசவேலை செய்யப்படலாம் ” என்று அவர் கூறினார்.

“நாங்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளோம், அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். நாம் அனைவரும் மனிதர்கள். அவள் சுகமடைய நீண்ட பாதையை எதிர்கொண்டால், நாங்கள் அவளுக்காக அங்கே இருப்போம்” என்று அவர் கூறினார்.

டிசம்பர் 4ம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும். சுலரி குடும்பத்துடன் அப்போது ஒரு இணக்கப்பாடு வரும் என கொடிகார தெரிவித்தள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here