80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்!

பலத்த வாதப்பிரதிவாதங்களுடன் எழுக தமிழ் நிகழ்வு நடந்து முடிந்து விட்டது. எழுக தமிழ் நிகழ்வு, விக்னேஸ்வரன் அணியினராலும், எதிர் அணியினராலும் ஆர்வமுடன் பார்க்கப்பட்டதால், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தமிழர் அரசியல் நிகழ்வுகளில் முக்கியமானதொன்றாக மாறி விட்டது.

“எழுக தமிழ் பிரமாண்ட வெற்றி“ என விக்னேஸ்வரன் தரப்பு கூற, “படுத்தே விட்டதய்யா“ என எதிர்த்தரப்புக்கள் கூற, அக்கப் போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனினும், இரண்டு தரப்புக்களுமே கலந்து கொண்ட மக்கள் தொகையை மிகைப்படுத்தியே விதத்திலேயே பிரசாரம் செய்கிறார்கள். சுயாதீனமான கணிப்புக்களின் அடிப்படையில் சுமார் 4,500 பேர் கலந்து கொண்டிருக்கலாமென கருதப்படுகிறது.

உண்மையில் இந்த எண்ணிக்கை வெற்றிகரமான ஒரு எண்ணிக்கை கிடையாது. அதேநேரம், விக்னேஸ்வரன் தரப்பிற்கு தோல்வியும் கிடையாது. ஈழத்தமிழர்களில் மிகப்பெரும்பான்மையினர் புலிகளை கேள்விக்கிடமின்றி ஆதரித்தபோதும், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை மிக வில்லை. தமிழ் சமூகத்தின் மனநிலையை புரிந்தே, எழுக தமிழ் அல்ல, எந்த தீவிரமான போராட்டத்தையும் கணக்கிட வேண்டும்.

எனினும், இந்த சனத்திரள்கையில் விக்னேஸ்வரன் தரப்பு திருப்தியடைய முடியாது. இதில் திருப்தியடைந்தால், விக்னேஸ்வரன் தரப்பு இன்னொரு ஈ.பி.ஆர்.எல்.எவ் போலவே ஆகும்.

எழுக தமிழிற்கு திரண்ட மக்களில் மிகப்பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். யாழ் மக்கள் குறைவு. அதற்கு பல காரணங்களை சொன்னாலும், விக்னேஸ்வரனின் வாக்குவங்கி வெளிமாவட்டங்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன் தொடர்பான மதிப்பீடுகள் குறைகிறதா? அல்லது, எழுக தமிழை பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் குறைபாடிருந்ததா என்ற கேள்விகளுமுண்டு.

இது தேர்தல் அரசியல். விக்னேஸ்வரன் தரப்பும் போராளிகள் அல்ல. தேர்தல் அரசியலுக்குரிய அத்தனை அம்சங்களுடனும் எழுக தமிழை கணிக்க வேண்டும். தேர்தல் அரசியலின் முக்கிய அம்சமே சனங்களின் திரட்சிதான். அது எழுக தமிழில் மிஸ்ஸிங். அப்படிப் பார்த்தால் எழுக தமிழ் ஒருவித சறுக்கலே.

எழுக தமிழ் ஏன் சறுக்கியது?

இதற்கான ஐந்து காரணங்களை தந்துள்ளோம்.

1.விக்னேஸ்வரன்

விக்னேஸ்வரன் தன்னைப்பற்றிய அரசியல் மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். அதை சரியாக செய்வார் எனறாலே அவரது அரசியல் வெற்றியடையும். விக்னேஸ்வரன் என்ற பெயர் எல்லாக்காலத்திலும் அவரை காப்பாற்றாது. ஒருகாலத்தில் மாகாணசபை நிர்வாகத்தை குழப்பி, அரசின் பங்காளியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டபோது, கூட்டமைப்பின் மீதான அதிருப்தியின் வடிகாலாக விக்னேஸ்வரன் இருந்தார். அதுவே, அரசியலில் நீடிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அவருக்கு கொடுத்தது. ஆனால் அதை அவர் பற்றிப்பிடித்தாரா என்பது கேள்விக்குறியே.

மாகாணசபை காலம் முடிந்தபோது, கேள்வி பதில் ஒன்றில், கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கப் போகிறேன் என்றார். ஆனால அதை அவர் ஆழமான ஈடுபாட்டுடன செய்யவில்லை. கூட்டமைப்பின் மீதான அதிருப்தியின் தோற்றுவாயான விக்னேஸ்வரன், அதை சொந்த அரசியலாக மாற்றாத வரை, அவரது வெற்றியையும் தோல்வியையும் கூட்டமைப்பு மீதான அபிப்பிராயமே தீர்மானிக்கும்.

வெகுஜன அரசியல் தலைமை, கட்சி தலைமைக்கான இயல்புகளை வளர்க்காமல், விக்னேஸ்வரன் என்ற பெயருக்கு, மக்கள் திரள்வார்கள் என்றோ, கட்சியினர் வேலை செய்வார்கள் என்றோ அவர் கருதுவது தவறு.

2. மீண்டும் விக்னேஸ்வரன்

இணைத்தலைமையில் விக்னேஸ்வரன் நீடிப்பது, பிற கட்சிகளின் பங்களிப்பை தடுத்தது. தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலவீனங்களினால் உருவானதென பகிரங்கமாக அறிவித்து விட்டு, தனிக்கட்சியொன்றை விக்னேஸ்வரன் ஆரம்பித்து விட்டு, எழுக தமிழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைய வேண்டுமென எதிர்பார்ப்பது ரூ மச். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை விக்னேஸ்வரன் துறக்க வேண்டும். அல்லது, தமிழ் மக்கள் கூட்டணியை விட்டு விலக வேண்டும். விக்னேஸ்வரன் இனியும் பேரவையின் இணைத்தலைமையில் தொடர்வது வலம்புரி பத்திரிகை ஆசிரியருக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால், அரசியல் அறம் கிடையாது.

3. செயற்பாட்டியக்கமாக இல்லாமை

தமிழ் மக்கள் பேரவையிலுள்ளவர்களும் சரி, தமிழ் மக்கள் கூட்டணியிலுள்ளவர்களும் சரி- மிகப்பெரும்பாலானவர்கள் வெகுஜன கவர்ச்சிமிக்க தலைவர்கள் கிடையாது. பேரவையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ விட்டால் கட்டமைப்புடைய அமைப்பெதுவும் கிடையாது. கட்டமைப்புடைய ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஆதரவு தளமே ஊசலாடிக் கொண்டிருக்கும்போது, பேரவையின் எந்த மக்கள் செல்வாக்குமற்றவர்களால் மக்களை திரட்ட முடியுமென கணக்கிடுவது எந்த நியாயம்?

சிவப்பு, மஞ்சள் நிறத்தினாலோ, தாயகம், தேசியம் என்ற கோசங்களாலோ மட்டும் மக்களை திரட்ட முடியாது. அரசியல் அமைப்பாக எப்படியான செயற்பாட்டியக்கத்தை கொண்டிருக்கிறது என்பது முக்கியம். விடுதலைப்புலிகளை மக்கள் ஆதரித்தமைக்கு ஒரே காரணம்- அவர்கள் செயற்பட்டார்கள். அரசியல் செயற்பாட்டியக்கமாக பேரவையோ, தமிழ் மக்கள் கூட்டணியோ மாறாதது மக்களை திரட்ட முடியாமைக்கு இன்னொரு காரணம்.

வழக்கத்திற்கு மாறாக இம்முறை எழுக தமிழ் உணர்வகளை தட்டியெழுப்பவில்லை. பிரசாரத்தின் போதோ, நிகழ்வுகளிலோ அது இருக்கவில்லை. பேரவையிலுள்ள யாழ்ப்பாண மேல்தட்டு வர்க்கம், ஓய்வுபெற்றவர்கள், செயற்பாட்டு பாரம்பரியமில்லாதவர்கள் போன்ற பல காரணங்களால் உணர்வெழுச்சியான பிரசாரத்தையோ, நிகழ்வையோ நடத்தவில்லை.

பிரசாரம் கிராம மட்டங்களை சென்றடையவில்லை. வலம்புரி பத்திரிகையால் மட்டுமே ஒரு புரட்சியை ஏற்படுத்தி விட முடியுமென்றால், இந்த தேசத்தில் எப்பொழுதோ சைவ ராச்சியம் தோன்றிருக்க வேண்டும். அல்லது பசுக்காவலர்கள் இயக்கம் உருவாகியிருக்க வேண்டும்.

4. உள்வீட்டு பிரச்சனைகள்

எழுக தமிழ் ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. திடுதிப்பென பேரணியை அறிவித்து விட்டு, ஒவ்வொரு பிரமுகர்களையும் தொலைபேசியில் அழைத்து, “எத்தனை பேரை கொண்டு வருகிறீர்கள்?“ என கேட்டால் எரிச்சல்தான் வரும். மட்டக்களப்பில் இருந்து வெறும் மூன்று பேருந்ததான் வந்தது. அதில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாட்டாளர்கள் தவிர, மிகுதி அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே. ஒவ்வொரு பேருந்திற்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டிருந்தது.

இணைத்தலைவர்களில் ஒருவரான வசந்தராசா, “ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்து விட்டு, பேரணியை அறிவித்துவிட்டு, எத்தனை பேரை கொண்டு வருவீர்கள் என விக்னேஸ்வரன் கேட்கிறார். என்னால் இதற்கு மேல் ஆட்களை திரட்ட முடியாது“ என நெருங்கியவர்களுடன் குறைபட்டுக் கொண்டார்.

அண்மையில், யாழில் பெருமெடுப்பில் கட்சி மாநாட்டை நடத்திய ஐங்கரநேசன் தரப்பு, பேரணிக்கு ஆட்களை அழைத்து வரவில்லை. ஏற்பாட்டு குழுவிற்குள் இருந்த அதிருப்திதான் அதன் காரணம். பிரதேசரீதியான கட்டமைப்பில்லாத தனிநபர்கள், செயற்பாட்டாளர்களாக இன்மை ஆகிய பலவீனங்களுடன் பிடுங்குப்பாடும் சேர, சில தனிநபர்களாக ஏற்பாட்டாளர்களும், பேரவையும், கூட்டணியும் இயங்கியமை.

5. ஆசைப்பட்டதெல்லாவற்றையும் காசிருந்தாலும் வாங்க முடியாது

ஆசைப்பட்டதெல்லாவற்றையும் காசிருந்தால் வாங்கலாம். ஆனால், மக்கள் எழுச்சிகளை ஏற்படுத்த முடியாது. வெளிநாட்டிலிருந்து பணத்தை வீசியெறிந்து, தாயக அரசியலை தீர்மானிக்க முடியாது. எழுக தமிழின் செலவு உத்தேசமாக 80 இலட்சம் என ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து உத்தியோகப்பற்று இல்லாமல் கூறப்பட்டுள்ளது. எழுக தமிழில் கலந்து கொள்ள வந்தவர்களிற்கு மதிய உணவு வாங்கப்பட்டிருந்தது. ஆனால் எஞ்சிய பெருமளவு உணவு காக்கைதீவில் கொட்டப்பட்டுள்ளது.

எழுக தமிழின் மூலவேர் சில வெளிநாட்டவர்கள். களத்தில் முறையான செயற்பாடில்லாமல் மக்களை திரட்ட முடியாது என்பது அவர்களிற்கு இப்போது புரிந்திருக்கும்.

இன்னொரு முக்கியமான விடயம், பலம், பலவீனத்தை சரியாக கணிப்பிட்ட பின்னரே காரியத்தில் இறங்க வேண்டும். ஈ.பி.ஆர்.எல்.எவ் யாழ்ப்பாணத்தில் இருந்து 20 பேருந்துகளில் ஆட்களை கொண்டு வருவதாக கூறியிருந்தது. வவுனியாவிலிருந்து 19 பேருந்துகள் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 9 பேருந்துகள்தான் வந்தன. உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி, எத்தனை பேருந்து வரும், எத்தனை பேரை கொண்டு வருவீர்கள் என்பது தமிழ் அரசியலில் சாத்தியமில்லை.

மொத்தத்தில் நிறைய பலவீனங்கள் எழுக தமிழ் ஏற்பாட்டில் தெரிந்தது. அவற்றை உடனடியாக சரி செய்யாவிட்டால், தமிழ் மக்கள் பேரவையை மீளுருவாக்கம் செய்யாவிட்டால், இன்னொரு எழுக தமிழை நடத்தவே முடியாமல் போகலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here