நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்!

படம்- குமணன்

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக விகாரை அமைத்து அடாவடியில் ஈடுபட்டு வந்த பௌத்த பிக்கு இன்று உயிரிழந்தார்.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமாகும். யுத்தத்தின் பின்னர் மக்கள் மீளக்குடியமராத காலப்பகுதியில் இராணுவத்தின் துணையுடன் அங்கு பௌத்த விகாரை அமைத்த கொலம்பே மேதாலங்காதர தேரர், அது பௌத்தர்களின் பண்டைய வழிபாட்டிடம் என அழிச்சாட்டியம் செய்து வந்தார். அந்த விகாரைக்கு குருகந்த ரஜமகா விகாரையென பெயரும் சூட்டப்பட்டது.

பிள்ளையார் ஆலயத்தில் மாற்றங்கள் செய்து, தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமைக்கும் இடையூறு செய்து வந்தார். இராணுவம், பொலிசார், தொல்லியல் துறையின் ஒத்தாசையுடன் இந்த அபகரிப்பை மேற்கொண்டு வந்தார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடந்த வழக்கு விசாரணையொன்றில், தேரரிற்கு புற்றுநோய் என அவர் சார்பு சட்டத்தரணிகளால் அறிவிக்கப்பட்டது.

அண்மையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், அவருக்கு மனநோய் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஜனாதிபதி தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டமொன்றில், நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த வழிபாட்டிடம் அமைந்திருந்தமைக்கான எந்த தடயமும் இருக்கவில்லையென தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொலம்பே மேதாலங்காதர தேரர் இன்று காலை கொழும்பில் உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை விகாரைக்கு எடுத்து வந்து அடக்கம் செய்யும் முயற்சிகள் நடக்கலாமென்ற எச்சரிக்கையுணர்வுடன், நிலவரத்தை அவதானித்து வருவதாக தமிழர் மரபுரிமைப் பேரவை தரப்பினர் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அந்த பகுதியில் மாற்றங்கள் செய்ய முடியாது என்பதால், தேரரின் உடலை அங்கு அடக்கம் செய்ய வாய்ப்பில்லையென்றும் தெரிவித்தனர்.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here