நான் பல்டியடித்தேனா?: தவறான செய்தியைப் பற்றி மனோ விளக்கம்!

நிறைவேற்றதிகார ஒழிப்பு தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் அந்தர் பல்டியடித்ததாக வெளியான தவறான செய்தி தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்ட முகப்புத்தக பதிவில்,

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்கு நான் முதலில் உடன்பட்டதாகவும், பின்னர் அமைச்சரவைக்கு முந்திய (Pre-Cabinet) கூட்டத்தில் “அந்தர் பல்டி” அடித்து விட்டதாகவும் நண்பர் வித்தியாதரன் தனது காலைக்கதிர் நாளேட்டில் (20/21ம் திகதிகளில்) யாரோ சொல்லி எழுதியுள்ளார். இது உண்மைக்கு புறம்பான செய்தி.

நேற்று இரவு நண்பர் வித்தியை தொலைபேசியில் அழைத்து இந்த பிழையை பற்றி கூறினேன். என் அரசியல் வாழ்வில் நான் ஒருபோதும் “அந்தர் பல்டி” அடித்ததில்லை என்று அவருக்கு கூறினேன்.

நான் ஜனாதிபதி தேர்தல் முறைமை ஒழிப்புக்கு ஆதரவாக நிற்பேன் என உறுதிமொழி வழங்கியதாக அவருக்கு யார் சொன்னார்கள் என நான் அவரிடம் கேட்கவில்லை. ஊடகர்களிடம் அவர்களது “செய்தி-மூலம்” பற்றி கேட்க கூடாது என்ற பண்பு எனக்கு இருக்கிறது. ஆனால், அவரது அந்த “செய்தி-மூலம்” பொய் செய்தியை அவருக்கு வழங்கியுள்ளது என்று அவருக்கு விளக்கினேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அன்றைய 19ம் திகதி எம்பி வேலுகுமாரின் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு நான் கண்டியில் இருந்தேன். அச்சமயம் “இரண்டு மணிக்கு அமைச்சரவைக்கு முந்திய (Pre-Cabinet) கூட்டம், மூன்று மணிக்கு அமைச்சரவை (Cabinet) கூட்டம், உடன் வாருங்கள்” என எனக்கு அவசர தகவல் வர, நிகழ்சிகளை இடைநடுவில் நிறுத்திக்கொண்டு கொழும்புக்கு தெருவழியாக பறந்து வந்தேன்.

அப்படியும் நான் இரண்டு மணிக்கு நடைபெற்ற அமைச்சரவைக்கு முந்திய (Pre-Cabinet) கூட்டத்துக்கு போகவே முடியவில்லை. மூன்று மணி அமைச்சரவை (Cabinet) கூட்டத்துக்கும் மூன்றரை மணிக்கே தாமதமாக போனேன்.

இந்நிலையில் நான் போகாத அமைச்சரவைக்கு முந்திய (Pre-Cabinet) கூட்டத்தில் நான் அந்தர் பல்டி அடித்தாகவும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்கு நான் முதலில் உடன்பட்டதாகவும் நண்பர் வித்தியாதரன் தனது காலைக்கதிர் நாளேட்டில் எழுதியுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறமானது.

இதை நான் அவருக்கு நேற்றிரவு தொலைபேசியில் எடுத்து கூறும்போது அவர் என்னிடம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் பாதகங்களை பற்றி விளக்க தொடங்கி விட்டார்.

“நாம் இதுபற்றி வேறிடத்தில் பேசுவோம். நான் இப்போது உங்களை அழைத்தது, உங்கள் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி கூறவே. எமது கட்சியின் நிலைப்பாடுகளை நாம்தான் முடிவு செய்வோம். திடீர் திடீரென நாம் எம்மை மாற்றிக்கொள்வதில்லை. எனக்கு ஒவ்வொரு விடயங்கள் பற்றியும் தெளிவான நிலைப்பாடுகள் உள்ளன. அவற்றுக்கு பின்னால் உறுதியான காரணங்களும் உள்ளன. இப்போது தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், திடீரென சிலர் விழித்து எழுந்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற அவசரப்படுவதும், இதுதான் நமது அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்று காட்ட விளைவதும் ஏனென்று எனக்கு நன்கு தெரியும்” என அவருக்கு கூறி முடித்தேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here