உயிர்வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வலியுறுத்தி 20 மாவட்டங்களில் கவனயீர்ப்பு போராட்டம்!

உயிர் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் உட்பட 20 மாவட்டங்களில் எதிர்வரும் 27ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க போவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் “உயிர் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்துக” எனும் தொனிப்பொருளில் யாழில் நேற்று நடந்த ஊடக சந்திப்பிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

“உயிர் வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளது. இதனடிப்படையில் உயர் வாழும் சட்டம் அயல் நாடுகளில் உள்ளது. ஆனால் இலங்கையில் அந்தச் சட்டம் இல்லை. ஆகவே புதிய அரசியலமைப்பில் உயிர்வாழும் உரிமை சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.

இதனூடாக உயிர் வாழும் உரிமை அடிப்படையாக்கப்பட்டு உயிர் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். உயிர் வாழ்விற்கான உரிமையை விட்டுவிட்டு ஏனைய உரிமையை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. உயிர்வாழும் உரிமையே முதன்மையானது. அதனை ஐ நா சபையும் முதன்மைப்படுத்த வேண்டும்.

ஆகவே உயிர்வாழும் உரிமையை அரசியல் யாப்பில் இணைத்துக் கொண்டு அந்த உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு என வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்கள் உட்பட மொத்தமாக 20 மாவட்டங்களில் கவனயீர்ப்பு போராட்டங்களை எதிர்வரும் 27ம் திகதி நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக ஏற்று கொண்டால் பாதுகாப்பும் நல்வாழ்வும் கிடைக்கும். இனம் மதம் மொழி கடந்து இச் செயற்பாட்டை செய்ய வேண்டும். இனத்தின் மொழி கடந்த ஐக்கியத்தை உருவாக்க வேண்டும்

நீதியுடன் கூடிய சமாதானம் மலரும். இந்த நாட்டவர்களும் நாங்கள் எல்லலோரும் அன்போடும் உரிமையுடனும் வாழ இந்த சட்டம் வழி வகுக்கும் எனவும் மேலும் தெரிவித்தனர்.

இச் சந்திப்பில் பிரஜைகள் அபிலாஷை வலையமைப்பின் தேசிய இணைப்பாளர் பிரான்சிஸ் ராஜன், மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணியின் இணைத் தலைவர் சட்டத்தரணி ஆ.ரகுபதி, அமெரிக்க இலங்கை மிஷன் திருச்சபை முன்னாள் தலைவர் அருட்தந்தை ஈனொக். பூ. புனிதராஜா, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் நா.இன்பம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here