நிறைவேற்றதிகார ஒழிப்பு; பின்னணியில் இருந்தது யார்?: ஐ.தே.முவிற்குள்ளும் குழப்பம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வரும் புதன்கிழமை அறிவிப்பேன். செயற்குழுவில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் நேற்று உறுதியளித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (20) மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே ரணில் மேற்படி வாக்குறுதியை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, அகிலவிராஜ் காரியவசம், கபீர் ஹாசிம், நவீன் திசாநாயக்க, ராஜித சேனாரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர். பங்காளிக் கட்சிகளின் சார்பில் அமைச்சர்களான மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, பழனி திகாம்பரம் ஆகியோர் பங்குபற்றின. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கு கொள்ளவில்லை.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உடனடியாக தீர்மானிக்க வேண்டும் என பங்காளி கட்சி தலைவர்கள் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த சஜித், மஹிந்த ராஜபக்ஷ அணியை வெற்றிகொள்ள வேண்டுமென்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்தார்.

பிரதமர் விக்ரமசிங்க தொடர்ந்தும் பிரதமராகவும் கட்சியின் தலைவராகவும் செயற்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் நாம் வெற்றி பெற்ற பின்னரும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட வேண்டும். அதுவே எமது நிலைப்பாடாகும். அதனால்தான் நானும், பெரும்பான்மையான எம்.பிக்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த மலிக் சமரவிக்கிரம ஜனாதிபதி விவகாரம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய உடன் நான் கலந்துரையாடினேன். அவர் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனால் தற்போது பிரதமர் ரணிலா, அமைச்சர் சஜித்தா என்ற விடயம் குறித்தே நாம் முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

பங்காளி கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக செயற்பட வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதே கருத்தை கபீர் ஹாசிமும் தெரிவித்தார்.

இதேவேளை நிறைவேற்றதிகாரம் ஒழிப்பு தொடர்பாக பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் என்னுடன் தொடர்புகொண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பில் நகல் ஒன்றினை தயாரித்து உள்ளதாகவும், அது குறித்து அமைச்சர் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் கலந்துரையாடி ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் கூறினார். இதனையடுத்தே இந்த விடயத்தை ஆராயலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், சுமந்திரன் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. மாறாக நான் அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன். அப்போது தான் நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பில் அவர் எனக்கு தெரிவித்தார். இதைவிட வேறு ஒன்றும் அவர் என்னுடன் பேசவில்லை. அந்த விடயத்துக்கு நான் ஒப்புதல் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளமை தவறானதாகும். சிறுபான்மையினருக்கு சாதகமான மக்களால் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் உடன்படவில்லை. இதுவே உமது நிலைப்பாடாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் திகாம்பரம், வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் என்னை சந்தித்த சுமந்திரன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பில் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் தெரிவித்ததுடன், தமக்கு ஆதரவு வழங்குமாறும் கோரியிருந்தார். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து விடயத்தில் தமது கூட்டணி நிலைப்பாடு எதிரானது என்பதை நான் அவருக்கு தெரிவித்ததுடன், அதற்கு ஆதரவு வழங்க முடியாது என்றும் தெரிவித்தேன் என்றார்.

அமைச்சர் மலிக் சமரவிக்கிரம குறிப்பிட்டபோது, சுமந்திரனை இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு விவகாரம் தொடர்பில் வினவியபோது, இந்த விடயத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று அவர் மறுத்ததாக தெரிவித்தார்.

பிரதமர் ரணில் குறிப்பிடுகையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்ட பின்னர், விடயம் தெரியாமல் அமைச்சர் ஹக்கீம் என் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் சுமத்தியுள்ளார். இது தவறான நடைமுறையாகும். நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இதனை அறியாது அமைச்சராக்கி மிகக்கடுமையாக முறை தவறி செய்யப்பட்டிருக்கிறார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், வரும் புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவை கூட்டி வேட்பாளர் தொடர்பான இறுதியான முடிவை அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததை அடுத்து கூட்டம் முடிவுற்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here