சம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்!

தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கனடா கிளை நடந்து கொள்ளும் விதம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள், தமிழ் அரசு கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே யாழ் போதனாசாலை சிற்றூழியர் நியமனம், சமுர்த்தி நியமனம் தொடர்பில் தகவல் வெளியிட்டிருந்தோம்.

புதிதாக, யாழ் மாவட்ட அரச வங்கிககளில் திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தை வெளிப்படுத்துகிறோம். இந்த வெளிப்படுத்தல்கள் இரா.சம்பந்தன் ஆதரவாளர்களிற்கும், கனடா கிளையினருக்கும் எரிச்சலையூட்டக் கூடும். எனினும், இரா.சம்பந்தன் உள்ளிட்ட, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரையும் உள்ளடக்கிய கலந்துரையாடலில், நிதியமைச்சர் மங்கள சமரவீரவே இந்த தகவல்களை போட்டுடைத்துள்ளார்.

நேற்று முன்தினம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தமிழ் தேசியகூட்டமைப்பிற்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதன்போதே மங்கள சமரவீர இந்த தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார். இந்த தகவல்களால் அதிருப்தியடைந்த தமிழ் அரசுக்கட்சியின் இரண்டு நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்ய முயன்றனர். எனினும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை சமரசம் செய்து, உட்கார வைத்தனர்.

இரா.சம்பந்தனின் சிபாரிசில் யாழ் மாவட்ட அரச வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்த 35 பேர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தார்கள். நிதியமைச்சு அதிகாரிகள் மூலம் எப்படியோ இந்த விடயத்தை மோப்பம் பிடித்து அறிந்த கூட்டமைப்பு எம்.பிக்கள் தமக்குள் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இரா.சம்பந்தனின் இந்த பொறுப்பற்ற- தேர்தல் கால நடவடிக்கையால்- யாழ் மாவட்ட இளைஞர், யுவதிகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் அதிருப்தியடைந்திருந்தனர்.

மங்கள சமரவீரவுடனான நேற்று முன்தின கலந்துரையாடல் ஆரம்பித்தபோது, கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட்டாக இந்த விடயத்தை எழுப்பினர். நிதியமைச்சு மூலம் தமக்கு வேலைவாய்ப்பு ரீதியில் எந்த நன்மையும் கிடைக்கவில்லையென கடுமையாக குற்றம்சாட்டினர்.

அதை மறுத்த மங்கள, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான வேலைவாய்ப்பை தொடர்ந்து வழங்கி வருவதாகவும், அதை இரா.சம்பந்தனிடம் தெரிவிக்க, அவர் தரும் பட்டியலின் படி நியமனம் வழங்குவதாகவும் தெரிவித்தார். எனினும், கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட்டாக, தமக்கு இந்த தகவலே புதியது, தம்மிடம் யாரும் சிபாரிசு கேட்பதில்லையென தெரிவித்தனர்.

இதன்போதே, இரா.சம்பந்தனின் கைவரிசையை உணர்ந்த மங்கள, சங்கடமாகினார். எனினும், சிறிய அறையில் உரத்த குரலில் நடந்த இந்த வாதப்பிரதிவாதங்கள் எதுவும் கேளாதவர் மாதிரி, கூரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் சம்பந்தன்.

கூட்டமைப்பு எம்.பிக்கள் பலர் தமது இருக்கையை விட்டு எழுந்து நின்று, வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு விபரத்தை வெளியிட வேண்டுமென விடாப்பிடியாக நின்றனர். இயன்றவரை சமாளித்து, முடியாத கட்டத்தில் வேலைவாய்ப்பு விபரத்தை மங்கள வெளியிட்டபோதே, யாழ் நியமனங்களை திருகோணமலையை சேர்ந்தவர்கள் மூலம் நிரப்பியது தெரிய வந்தது.

இது தொடர்பில் தமிழ் அரசு கட்சியின் கிழக்கு எம்.பியொருவர் தகவல் தருகையில், மேலதிக சில தகவல்களையும் தந்தார்.

வங்கி ஊழியர் நியமனம் தொடர்பான விபரம் கோரப்பட்டதும், திருகோணமலையை சேர்ந்தவர்களிற்கான நியமனத்தை வழங்கும் பொறுப்பை கனடா கிளையிலிருந்து வந்து, திருகோணமலை மாவட்ட தலைவர் பொறுப்பை கைப்பற்றிய குகதாசனிடம், சம்பந்தன் ஒப்படைத்ததாக குறிப்பிட்டார்.

கனடா கிளைக்கு நெருக்கமானவர்களின் சிபாரிசுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் நிதியமைச்சில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பின்படி யாழில் திருகோணமலையை சேர்ந்த 35 பேர் நியமிக்கப்பட்டதற்கு மேதிகமாக, ப.சத்தியலிங்கத்தின் சிபாரிசிலும் 10 பேர் வங்கியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அது தவிர, மூவர் சாந்தி சிறிஸ்கந்தராசாவின் பெயரில் குறிப்பிடப்பட்டு, சத்தியலிங்கத்தின் ஊடாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். சத்தியலிங்கத்தின் ஊடாக அதிகமானவர்கள் நியமிக்கப்பட்டார்கள், மற்ற எம்.பிக்களிற்கு நியமன வாய்ப்பு வழங்கப்படவில்லையென்ற விமர்சனங்களை தவிர்க்க, சாந்தியின் பெயரில் அது பதிவுசெய்யப்பட்டுள்ளது. தேசியப்பட்டியல் நியமனமான எம்.பி, பதவியில் நீடிக்க வாய் திறக்க மாட்டார் என்ற காரணத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரா சம்பந்தனின் வழிநடத்தலில், தமிழ் அரசு கட்சியின் கனடா கிளையை சேர்ந்தவர்களால் இந்த மோசமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ப.சத்தியலிங்கம், ஆர்னோல்ட், சயந்தன், அஸ்மின் ஆகியோரை கனடா கிளை அரசியல்ரீதியாக தத்தெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாணசபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, விக்னேஸ்வரனிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தயாரித்து அனுப்பியதும் கனடா கிளை பிரகிருதிகளே.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள புனர்வாழ்வு அமைச்சின் கீழான அபிவிருத்தி திட்ட நிதிகளும், வடக்கில் தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தனிற்கு 500 மில்லியன், மாவை சேனாதிராசா, எம்.எ.சுமந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன், சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கு மாத்திரமே வடக்கில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here