விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதிதான் அழைப்பு விடுத்தார்: ரணில்!

ஜனாதிபத மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதால்தான், நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பது குறித்து ஆராய கடந்த வியாழக்கிழமை அவசர அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது என தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

மீரிகமவில் நடந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர், அமைச்சரவையில் நடந்த நிறைவேற்றதிகார ஒழிப்பு முயற்சி தொடர்பாக சிவில் அமைப்புக்களின் விமர்சனங்களை, தான் கவனிக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

“கடந்த வியாழக்கிழமை காலை ஜனாதிபதி சிறிசேன என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டலாமா என்று கேட்டார். முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் பற்றி விவாதிப்பதில் தவறில்லை என்று நான் பதிலளித்தேன். ஐ.தே.கவிற்குள் இந்த விவகாரம் குறித்து இதுவரை ஆராயப்படவில்லை என்பதையும் அவருக்கு நினைவுபடுத்தினேன். அமைச்சரவைக்கு கூட்டத்திற்கு முன்னதாக ஐ.தே.க பிரமுகர்களுடனான கூட்டத்தை கூட்டினேன். நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பது குறித்து அமைச்சர்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர். அதன்பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவையில் சட்டத்தை அங்கீகரிக்க முடியாது என்று ஜனாதிபதிக்கு அறிவித்தேன். கூட்டத்தின் போது, ​​ஸ்ரீ.ல.சு.கவின் ஆதரவு இல்லாமல் நிர்வாக ஜனாதிபதி பதவியை ஒழிக்க முடியாது என்று வலியுறுத்தினேன். எவ்வாறாயினும், அமைச்சரவைக் கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்குள் இது பற்றி விவாதிக்க வேண்டும் என்று ஒரு உடன்பாட்டை எட்டினோம்” என்று அவர் கூறினார்.

மேலும், 20 வது திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெற முடியவில்லை என்று பல சிவில் சமூக அமைப்புகள் குற்றம் சாட்டியதாக அவர் கூறினார்.

“கடந்த வியாழக்கிழமை ஒரு குழுவினாலும், நேற்று மற்றொருவராலும் நான் விமர்சிக்கப்பட்டேன். மக்கள் இந்த விஷயத்தை முடிவு செய்வார்கள்” என்றார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் கரு ஜெயசூரியாவை பிரதமர் வெகுவாக பாராட்டினார். 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது ஜனநாயகத்தை ஆதரித்தார், eிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார் என தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here