8வது மாடியிலிருந்து விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம்: வழக்கில் திடீர் திருப்பம்!

8வது மாடியில் இருந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில், அவர் உடற்பயிற்சிக்காக மாடி படிக்கட்டில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து இறந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருச்சியை சேர்ந்தவர் ஜூலியஸ். இவருடைய மகள் டேனிதா ஜூலியஸ் (24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தார்.

முதல் நாளாக நேற்றுமுன்தினம் வேலைக்கு வந்த அவர், இரவில் அந்த நிறுவனத்தின் 8வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். 3வது மாடியில் வேலை செய்யும் அவர், 8வது மாடிக்கு சென்றது ஏன்?. எனவே அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், அம்பத்தூர் எஸ்டேட் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், பலியான டேனிதா ஜூலியஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது தவறி விழுந்தாரா? எனவும் விசாரித்தனர்.

இதற்கிடையில் டேனிதா ஜூலியஸ் பலியான தகவல் திருச்சியில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் சென்னை புறப்பட்டு வந்தனர். நேற்று அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையம் வந்த அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

டேனிதா ஜூலியஸ் மாரத்தான் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர். பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று உள்ளதாக கூறி, அது தொடர்பான புகைப்படங்களை போலீசாரிடம் அவரது பெற்றோர் காண்பித்தனர்.

மேலும் டேனிதா ஜூலியஸ், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புவார். இதற்காக அவர், எங்கு சென்றாலும் ‘லிப்டை’ பயன்படுத்தாமல் படிக்கட்டுகளையே அதிகம் பயன்படுத்துவார் எனவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்த பிறகு டேனிதா ஜூலியஸ், சாப்ட்வேர் நிறுவன கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் உடற்பயிற்சிக்காக ஏறி இறங்கியதும், இதில் அவர் நிலைதடுமாறி 8வது மாடியில் இருந்து தவறிவிழுந்து பலியானதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு டேனிதா ஜூலியஸ் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here