பிரதேசசபை வாகனத்தில் மனைவி பிள்ளையை ஏற்றியிறக்கும் விவகாரம்: வலி.வடக்கு அமர்வில் களேபரம்!

வலி வடக்கு பிரதேசசபையின் தவிசாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள், அதிகார துஷ்பிரயோகத்தினால் நேற்று சபையில் பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. இதனால் சபை அமர்வுகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

சபை அமர்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களிற்கும் தடைவிதித்தார் தவிசாளர் சோ.சுகிர்தன்.

வலி வடக்கு பிரதேசசபை அமர்வு நேற்று (19) இடம்பெற்றது. இதன்போது, கடந்த கூட்ட அறிக்கையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பேசப்பட்ட முக்கிய விடயங்கள் சில இணைக்கப்படாததை உறுப்பினர்கள் அவதானித்து சுட்டிக்காட்டினார்கள்.

பிரதேசசபைக்குரிய வாகனத்தில் வலிவடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் தனது மனைவியை மாதகலில் உள்ள சென் ஜோசெப் மகாவித்தியாலத்திற்கும், மகளை உடுவில் மகளிர் கல்லூரிக்கும் தினமும் ஏற்றியிறக்கியது விதி மீறல் என்பதை கடந்த அமர்வில் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட தவிசாளர், இனிமேல் குடும்ப தேவைக்கு பொதுமக்களின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன், இதுவரை வாகனத்தை பாவித்தமைக்கான எரிபொருள் செலவை செலுத்துகிறேன் என குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது எதுவும் கடந்த கூட்ட அறிக்கையில் இருக்கவில்லை.

ஆவளை மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கோபுரத்தை 14 நாளில் அகற்றுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒரு மாதமாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சப உறுப்பினரான விஜயராஜ் என்பவரின் பெயரில் விதிமீறலாக காசோலை தயாரித்தது உள்ளிட்ட விடயங்களை சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

எினும், தவிசாளர் அதை ஏற்க மறுத்தார்.

இதையடுத்து தமிழ் அரசு கட்சியை சேர்ந்த சஜீவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி, சிறலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் இணைந்து, தவிசாளரின் முறையற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தன. சபை நடுவே எழுந்து சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சபை நடவடிக்கைகயை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார் தவிசாளர்.

மீண்டும் சபை கூடியபோதும், உறுப்பினர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் சபையை ஒத்திவைத்தார் தவிசாளர்.

10 நிமிடத்தின் பின்னர் சபை மீண்டும் கூடியபோது, பிரதேசசபை வாகனத்தை இனிமேல் மகள், மனைவியை ஏற்றியிறக்க மாட்டேன் என இரண்டாவது தடவையாகவும் வாக்களித்தார். எனினும், இதுவரை பாவித்தமைக்கான பணத்தை செலுத்த முடியாது என்றார்.

அத்துடன், ஆவளை மயானத்திலுள்ள ஸ்மார்ட் கம்பத்தை 14 நாட்களில் அகற்றுவதென்றும் வாக்களித்தார்.

அத்துடன், சபைக்குட்பட்ட பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்துவதில் தவிசாளரால் பாரசட்சம் காட்டப்படுவதாகவும், தனக்கு நெருக்கமானவர்கள் மூலமே மின்விளக்கு பொருத்தப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது. இனிமேல் மின்விளக்குகளை சமமாக பகிர்வதாக தவிசாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், கீரிமலையில் குப்பை கொட்டுவது தொடர்பாக பிரதேசமக்களையும், தொடர்புடைய தரப்புக்களையும் அழைத்து விரைவில் விளக்கமளிப்பதாகவும் தெரிவித்தார்.

சபை கூட்டத்தில் செய்தியாளர்கள் தடைவிதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தவிசாளரின் துஷ்பிரயோகங்கள் இன்றைய அமர்வில் பேசப்படுமென்பதை முன்கூட்டிய தெரிந்து, ஊடகவியலாளர்கள் தடைவிதிக்கப்பட்டனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், மாவை சேனாதிராசாவின் தனிப்பட்ட உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here