கவரிங் நகையை வைத்து யாழில் 1கோடி மோசடி: தலைமறைவான முகாமையாளருக்கு வலைவீச்சு!

சங்கானையிலுள்ள தனியார் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் உத்தியோகத்தர் ஒருவரையும், வாடிக்கையாளர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது மல்லாகம் நீதிவான் நீதிமன்றம்.

வங்கியின் முகாமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சங்கானையிலுள்ள செலான் வங்கி கிளையில் பணியாற்றிய முகாமையாளம் மற்றும் கடன் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர், வாடிக்கையாளர்கள் மூவர் என ஐந்து பேர் இணைந்து தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை அடகுவைத்து முற்பணம் பெற்றிருந்தனர்.

2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த மோசடி நடைபெற்றது. இதை வங்கி நிர்வாகம் கண்டறிந்ததும், முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்தது. அத்துடன், குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்தது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவினர் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரையும் நீதிமன்றின் உத்தரவில் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வங்கிக் கிளையின் முகாமையாளர் ரமணன் தலைமறைவாகிய நிலையில் உத்தியோகத்தர் மற்றும் 3 வாடிக்கையாளர்களையும் கைது செய்தனர். அவர்கள் நால்வரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று (20) வெள்ளிக்கிழமை முற்படுத்தினர்.

வழக்கை விசாரணை செய்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேகநபர்கள் நால்வரையும் வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் தலைமறைவாகியுள்ள முன்னாள் முகாமையாளரைக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பிடியாணை உத்தரவையும் நீதிவான் பிறப்பித்தார்.

“வங்கியின் நிதியை மோசடி செய்த நால்வர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் உரிய பணத்தை மீளச் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்காததால் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியால் வாடிக்கையாளர்களின் நிதி மற்றும் நகைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை” என்றவாறு வங்கியின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here