நீங்களும் பிஸ்னஸ் புள்ளி ஆகலாம்!- 01

உன்னை நீயே அறிவாய்

யாழ்ப்பாண நகரத்திற்கு வருபவர்கள் பலரும் அங்குள்ள பெரிய வர்த்தக நிலையங்களை பார்த்து, அப்படியொன்றிற்கு உரிமையாளராக வேண்டுமென நினைக்கிறார்கள். அவரவர் துறையை பொறுத்து கனவு மாறுபடுகிறது.

தொழில்நுட்பத்துறையில் உள்ளவர்கள் பில்கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் மாதிரி ஆகுவதை விரும்புவார்கள். விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒருவர், அதனுடன் தொடர்புடைய மாதிரி ஒரு பெரிய நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமென கனவு காண்பார். இந்த கனவு, வெறி, பிரமிப்பு எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்காமல் போகாதென சொல்ல முடியுமா? முடியாது. எந்த விதைக்குள் எந்த விருட்சமென்பதை யாராலும் சொல்ல முடியாது.

கடின உழைப்பும், பொசிற்றிவான சிந்தனையும் இருந்தால் அவர் ஜெயிக்கலாம். பிஸ்னஸ்மேன் (businessman) ஆகலாம். வாழ்க்கையின் அடிநிலையில் இருந்தாலும், உயர்நிலைக்கு வரலாம். இதற்கு அடிப்படையான முதலாவது விசயம்- “என்னிடம் பிஸ்னஸ்மேன் ஆகக்கூடிய முழு திறனும், தகுதியும் இருக்கிறது“ என நீங்கள் நம்ப வேண்டும். இரண்டாவது, பிஸ்னஸில் ஜெயிக்க வைக்கும் அத்தனை வித்தைகளைளும் சூட்சுமங்களையும் அறிந்துகொள்ள மனக்கண்ணை எப்பொழுதும் திறந்து வைத்திருக்க வேண்டும்.

இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்தாலே “படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. நமது கப்பாசிற்றிக்கு ஏற்ற வேலையை தராமல், ஏதோ ஒரு வேலையை தந்துள்ளார்கள். இப்படியே ஈயோட்டிக்கொண்டிருந்தால் வயதுதான் போகும்“ என்றுதான் பேசுகிறார்கள். இளவயதில் உள்ள அத்தனைபேருமே, சொந்தமாக தொழில் தொடங்கினால் மாத்திரமே இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்க்கலாமென நம்புகிறார்கள்.

ஏன் தொழில் தொடங்க வேண்டும்?

ரொபர்ட் கியாஸ்கி பிஸ்னஸ் தொடர்பாக புத்தகங்கள் எழுதி உலகப் புகழ் வெற்றவர்.  21ம் நூற்றாண்டு தொழில்முனைவோருக்கானது என ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.  காரணம், இன்றைய நூற்றாண்டு மனிதர்களில் சொந்தமாக தொழில் செய்து வாழ்பவர்கள் மட்டும்தான் வாழலாமென நினைக்கிறார்கள். எஞ்சியவர்கள் பாதுகாப்பின்னையை குறிப்பிடுகிறார்கள்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறை, நமது எதிர்காத்தை  நிலையற்றதாக்கும். வேலை, சம்பளம் ஏதுவுமே நிரந்தரமில்லை. அறவுணர்ச்சியும் குறைந்து செல்கிறது. பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்ய, தனியே தொழில் தொடங்குவது மட்டுமே வழி. தனி தொழில் தொடங்கினால் நீங்கள் சுதந்திரமாக செயற்பட முடியும். யாரிடமும் உங்களை நிரூபித்துக் கொண்டிருக்க தேவையில்லை. அனைத்தையும் நீங்களே நடைமுறைப்படுத்தி முயற்சித்து பார்க்கலாம்.

மக்களின் தேவை, நுகர்வு கலாசாரமும் வெகுவாக மாறிவிட்டது. இது மெகா சந்தையை உருவாக்கி விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்பவர்கள் வெற்றியடைகிறார்கள்.  சரியான தொழிலை அடையாளம் காண்பவர்கள் வெற்றியடைகிறார்கள்.

எல்லோராலும் பிஸ்னஸ் செய்ய முடியுமா?

இன்று படித்து முடித்ததும் 35% இளைஞர்கள் ஏதோ ஒரு வேலைக்கு போய்விடுகிறார்கள். இன்னொரு 35% இளைஞர்கள் படித்து முடித்ததும் என்ன செய்வதென தெரியாமல் திண்டாடுகிறார்கள். படிக்கும் காலத்தில் ஏன் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்பதைப்பற்றி இவர்கள் பெரிதாக கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். படித்து முடித்த பின்னரே என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடுவார்கள்.

25% ஆட்கள் குடும்பத்தின் தொழிலை செய்கிறார்கள். மீதியுள்ள வெறும் 5% இளைஞர்கள் மட்டுமே சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுக்கிறார்கள்.

இதில் வேலை செய்யும் 35% இளைஞர்கள், தமது 30 வயதை கடந்த பின்னர்தான்- “ஏன் நாம் சொந்தமாக தொழில் தொடங்ககூடாது?“ என சிந்திக்கிறார்கள். இப்படி பலரும் யோசித்தாலும், வேலை பார்த்த அனுபவத்தை கொண்டு சொந்தமாக தொழில் ஆரம்பிப்பவர்கள் வெகு சிலர்தான். இருக்கும் வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கினால் மாத சம்பளம் இல்லாமல் போய்விடும் என பயப்படுகிறார்கள் மற்றவர்கள். தொழில் நஷ்டம் வந்தால்? என்ற பயமும் சேர்ந்துவிடுகிறது.

பிஸ்னஸின் முதல் தேவை பணம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் அது சரியல்ல. கொஞ்சம் முயற்சித்தால் பணத்தை தயார் செய்துவிடலாம். அதைவிட முதலில் தேவை- பிஸ்னஸ் செய்யப்போகிறவர் தன்னை தயார்படுத்த வேண்டும். பிஸ்னஸிற்காக மனதளவில் தயாரானாலே, முதல்படியை கடந்து விட்டீர்கள் என்பது அர்த்தம்!

பிஸ்னஸ் செய்ய வேண்டும், வாழ்வில் வெற்றியடைய வேண்டுமென்ற வெறி உங்கள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு இடத்தில் வேலை பார்ப்பதும், பிஸ்னஸ் செய்வதும் ஒன்றல்ல. தொழில் தொடங்கும்போது படிப்பு, வயது. மொழி எல்லாம் பெரிய விசயங்கள் அல்ல. தொழில் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறி இருந்தால், தொழில் அறிவை எளிதாக யாராலும் பெற்றுவிட முடியும். நீங்கள் தயாரிக்கும் பொருள் அல்லது கொடுக்கும் சேவையை மக்கள் ஏற்பார்களா என்ற சந்தேகம் உங்களிற்கு வரவே கூடாது. மக்களுக்கு தேவையான பொருளை, சேவையை அவர்கள் விரும்பும் விதத்தில் கொடுத்தால் ஏற்றுக்கொள்வார்கள்!

பெரிதாக ஆசைப்படுங்கள்!

பிஸ்னஸ் தொடங்குவதென முடிவெடுத்தால், என்ன பிஸ்னஸ் செய்யப்போகிறோம், எப்படி செய்யப் போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும். திட்டங்களை நிறைவேற்ற என்னவெல்லாம் தேவையென்பது தெரிந்திருக்க வேண்டும். பிஸ்னஸ் என்பது பெட்டிக்கடையொன்றை தொடங்கி நடத்துவதை போன்ற விசயமென நினைத்தால், தொழில் செய்யவே நினைக்காமலிருக்கலாம்.

பிஸ்னஸ் என்பது பெரிய விசயம். பிஸ்னஸிற்கு பெயர் வைப்பதிலிருந்து, முறைப்படி பதிவுசெய்வது, வரி கட்டுவது, படிப்படியாக வளர்ந்து முன்னணி தொழிலதிபராக உயர்வது வரை எல்லாம் சேர்ந்ததுதான் பிஸ்னஸ். இந்த வளர்ச்சியை விரும்பும் அணுகுமுறைதான் புதிதாக தொழில் தொடங்குபவர்களிடம் இருக்க வேண்டும்.

ஜாக் மா உதாரணம்

பிஸ்னஸ் செய்யும் ஆர்வம் இருந்தும், என்ன பிஸ்னஸ் செய்வதென்ற குழப்பம்தான் பெரும்பாலானவர்களிடம் இருக்கும். “தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்“ என்ற மூத்தவர்கள் சொல்வார்கள். அது அவ்வளவு சரியானதல்ல. அனுபவமில்லாத முற்றிலும் புதிய தொழில்களில் இறங்கி பெரும் சாதனை படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஜக் மாவும் அதில் ஒருவர். இவருக்கு ஆங்கிலம் தெரியாது. முன்பின் பிஸ்னஸ் செய்த அனுபவமும் கிடையாது. வேலை தேடி கடைகடையாக அலைந்தார். ஆனால், இன்று அவரது ஒன்லைன் ஷொப்பிங் பிஸ்னஸ் உலகம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது.

ஜாக் மா செய்தது ஒன்றுதான். திறந்த மனதுடன் சந்தையை அணுகினார். அவருக்குள் இருந்த தேடல் பிஸ்னஸிற்கான வழிகை காட்டியது. பிஸ்னஸை வளர்ப்பதற்கான திறனையும், அறவையும் வளர்க்க தன்னையொரு மாணவனாகவும் மாற்றிக்கொண்டார். எல்லோருக்கும் எல்லாம் தெரியாது. எனக்கு எதுவுமே தெரியவில்லையென முயற்சிக்காமல் இருக்ககூடாது. எந்த உயரத்துக்கு போனாலும் கற்றுக்கொள்ள தயாராக இருந்தீர்கள் என்றால், கற்றுத்தர உலகம் தயாராகத்தான் இருக்கிறது.

உங்களிற்காக காத்திருக்கிறது சந்தை

உங்களின் முன்னால் விரிந்துள்ள சந்தையில் என்னென்ன தொழில்கள் உள்ளன, அதில் உங்களிற்கு பொருத்தமானது எது என்பதை பார்ப்போம். முக்கியமான பிஸ்னஸ் கோட்பாடு ஒன்றை சொல்கிறோம் கவனித்துக் கொள்ளுங்கள். “சரியான தொழிலை தெரிவு செய்தாலே போதும், ஐம்பது சதவிகித வெற்றி நிச்சயமாகிவிடும்“.

உற்பத்தி(Manufactruing),  வர்த்தகம் (Trading), சேவை (Service)  ஆகிய துறைகள் உள்ளன. பெரும்பாலான அனைத்து பிஸ்னஸ்களும் இந்த மூன்று துறைக்குள்ளும்தான் அடக்கம்.

இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள், நுகர்வு பொருட்கள் உள்ளிட்டவை உற்பத்தி துறையிலும், ஹோட்டல், சுற்றுலா, மருத்துவம், ஓடிட்டிங், தொழில்நுட்ப சேவைகள், பாங்கிங் (banking) போன்றவை சேவைத்துறையிலும் உள்ளடங்கும்.

ஒருவரிடமிருந்து பொருட்களை வாங்கி இன்னொருவரிடம் விற்பது வர்த்தகத்தில் அடங்கும். அது நேரடியாகவோ, ஒன்லைன் மூலமாகவோ இருக்கலாம்.

உற்பத்திதுறை

இந்த துறையில் பெரும் வாய்ப்புக்கள் உள்ளன. நமது நாட்டில் பெரும்பாலான பொருட்கள் இறக்குமதிதான். இறக்குமதி நாடாக இருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது.

இந்த துறையில் பிஸ்னஸ் செய்ய விரும்பினால், விவசாயமோ, இயந்திரமோ எந்த பொருளை உற்பத்தி செய்ய விரும்புகிறீர்களோ, அந்த பொருள், உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், உபகரணங்களை கையாளும் அறிவு அவசியம். அல்லது அந்த அறிவுடையவர்களை வேலைக்கு வைத்திருக்குமளவிற்கு கையில் மூலதனம் இருக்க வேண்டும்.

பொருளை உற்பத்தி செய்தால், அதை யாரும் தேடி வந்து வாங்கமாட்டார்கள். யாருக்காக அதை உற்பத்தி செய்தீர்களோ, அவர்களை தேடி நீங்கள்தான் போக வேண்டும். வாடிக்கையாளர்களை கண்டுபிடிப்பதும், அவர்களிடம் உங்கள் தயாரிப்புக்களை விற்பதும் ஒரு கலை. அதை  பற்றி பின்னர் பார்ப்போம்.

விவசாயம் தனித்துறையாக இருந்தாலும், அதையும் உற்பத்திதுறையாக பார்க்கலாம். விவசாயம் இப்பொழுது கோர்ப்பரேட் பிஸ்னஸாக உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது.

வர்த்தகம்

பிஸ்னஸ் என்றாலே வர்த்தகத்தைதான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். உற்பத்தியாளர்களிடம் பொருளை வாங்கி, வாடிக்கையாளரிடம் விற்பதுதான் வேலை. எளிதாகவும், இலாபம் தருவதாகவும் இருப்பதால் பலரும் இதில்தான் ஆர்வமாக உள்ளனர். கையில் கொஞ்ச பணமும், வாடிக்கையாளரை பிடிக்க முயற்சியும் இருந்தால் போதும். தற்போது வரவேற்பு பெறும் ஒன்லைன் வர்த்தகத்திலும் நல்ல வாய்ப்புண்டு.

சேவைத்துறை

தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைமுறை மாற்றத்தாலும் மிக விரைவாக பணம் சம்பாதிக்கும் வழிகள் இந்த துறையில் உள்ளது. உற்பத்தியாளர்களிற்கும் வாடிக்கையாளர்களிற்குமிடையில் பாலமாக இருப்பதே சேவைத்துறை.

சேவைத்துறையில் பலவகை பிஸ்னஸ்கள் உள்ளன. தற்போது ஸ்மார்ட்போன், இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் சேவைத்துறையில் பிஸ்னஸ் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டது. இதில் ஒருவராக நீங்களும் மாற விரும்பினால் ஸ்மார்ட்போன், இணையம், அப் (app) பயன்பாடுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதில் வாடிக்கையாளரின் மனநிலை அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும். அதற்கு ஈடுகொடுக்க வேண்டும்.

நம்மைப்பற்றி நாமே!

இந்த விசயங்களில் நீங்கள் முன்னுக்கு வர வேண்டுமெனில், அடிபட்டு அடிப்பட்டு கற்றுக்கொள்ள சில வருடங்கள் ஆகும். இந்த சில வருடங்களை, சில மாதங்களாக மாற்ற ஒரு வழியிருக்கிறது. அதாவது, உங்களை போல முயற்சியை ஆரம்பித்து இன்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளவர்களின் அனுபவங்களை நீங்கள் அறிந்து கொள்வது, தொழில் சூட்சுமங்களை அறிந்துகொள்ள உதவும்.

யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ள நாம் தயங்ககூடாது. அதேநேரம், உங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதெப்படி “நம்மை பற்றி நாமே தெரிந்து கொள்வது?“ என குழம்பாதீர்கள். உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன? திறமை என்ன? அதை பிஸ்னஸிற்கு எப்படி பயன்படுத்துவது? இதையெல்லாம் அடுத்த பாகத்தில், ஒரு சோதனை பயிற்சியுடன் பார்க்கலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here