நிறைவேற்றதிகாரத்தை நீக்கும் ரணிலின் முயற்சி வெண்ணெய் திரள பானையை உடைக்கும் செயல்: இராதாகிருஸ்ணன் கண்டனம்!

ஜனாதிபதி தேர்தல் முறைமையை மாற்ற ரணில் மேற்கொண்ட முயற்சி, பால் பொங்கி வரும்போது பானையை உடைத்த செயலாக இருக்கின்றது. தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பும் வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியாது. சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக தீர்க்க கூடியதாக ஜனாதிபதி முறை காணப்படுகிறது. இதனை சிறுபான்மை மக்களும் விரும்புகின்றனர். ஆகவே  ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு நான் எனது எதிர்ப்பை தெரிவிக்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விஷேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட ஹப்புகஸ்த்தலாவ ருவன்புர ஸ்ரீசண்முகா தமிழ் வித்தியாலயத்திற்கு, கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயல்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 80 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட பாடசாலைக்கான வகுப்பறை கட்டடத்தை பாடசாலை சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இன்று (20) இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

தற்போது நாட்டில் சூடுபிடித்துள்ள விடயம் தான் ஜனாதிபதி தேர்தல். இந்த தேர்தலுக்கு பொதுஜன பெரமுன கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தனது வேட்பாளர் யார் என்று உறுதியாக சொல்லி உள்ளது. சுதந்திர கட்சியும் இதுவரை யாரையும் ஜனாதிபதி வேட்பாளராக கூறவில்லை. ஐக்கிய தேசிய கட்சியும் இது வரைக்கும் உத்தியோகபூர்வமாக யார் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறவில்லை.

கட்சிக்குள் இழுபறி நிலையும் குழப்பமும் காணப்படுகின்றது. தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான தினமும் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் முறைமையை மாற்ற முயற்சித்த செயல், பால் பொங்கி வரும்போது பானையை உடைத்த செயலாக இருக்கின்றது.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாச அவர்களில் அலை அனைத்து பிரதேச மக்களின் உச்சரிப்பில் அவரை வெற்றிபெற வைத்து ஐக்கிய தேசிய கட்சியையும் வெற்றிபெற வைத்துள்ளதாக தெரிகின்றது. இதை உணர்ந்து ஐக்கிய தேசிய கட்சி நிதானமாக செயற்பட்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும். இதனை மலையக மக்கள் முன்னணி சார்பாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாகவும் வலியுறுத்துகின்றேன். தற்போது இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான சிறுபான்மை மக்களும் இதனையே விரும்புகின்றனர்.

இந்த நாட்டில் நாம் சிறுபான்மை மக்கள் என்ற ரீதியில் நாங்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் 50 ரூபாய் சம்பள கொடுப்பனவை கூட இன்னும் கொடுக்கவில்லை. அதேபோல் வடக்கு கிழக்கு மக்களின் இன பிரச்சனைகள் இன்னும் தீர்த்து வைக்கப்படவில்லை. இந்த அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமும் இதற்காண தீர்வுகளை முன் வைப்பதாக கூறினர். அதன் செயற்பாடு ஸ்தம்பிதம் அடைந்துவிட்டது. எதிர்காலத்திலும் இந்நிலை தொடர்ந்து இருக்க முடியாது. இதற்கான உரிய தீர்வு வேண்டுமானால் இதனை நிரைவேற்ற கூடிய பொருத்தமான ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும். பொருத்தமான ஒருவரையும் தெரிவு செய்யவும் வேண்டும். சரியான ஜனாதிபதி வேட்பாளராக யாரும் சரியாக தெரிவு செய்யபடாததால் நாங்களும் யாரை ஆதரிப்பது என்ற ஒரு முடிவு இன்றி இருக்கின்றோம். ஆகவே சரியான ஒருவரை மக்கள் எதிர்பாக்கும் மக்கள் மனதில் உச்சரிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஜக்கிய தேசிய கட்சி தெரிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here