ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து திணறியது எதனால்? – சச்சின் டெண்டுல்கரின் அலசல்

ஆஷஸ் தொடரில் 774 ரன்களைக் குவித்து டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் சாதனையை சமன் செய்த அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து வீழ்த்த திணறியதன் காரணங்களை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அலசியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்றைய திகதியில் நம்பர் 1 வீரரான ஸ்மித்தின் உத்தி சிக்கல் நிறைந்தது. ஆனால் அவரது மனம் ஒருங்கிணைந்த ஒன்று என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சிக்கலான உத்தி ஒருங்கிணைந்த மனம் இதுதான் மற்றவர்களிடமிருந்து ஸ்மித்தை வேறுபடுத்துகிறது என்றார் சச்சின் டெண்டுல்கர்.

தன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்மித்தின் துடுப்பாட்ட உத்தியை விவரித்த சச்சின், “முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அவரை ஸ்லிப், விக்கெட் கீப்பர் கட்சில் வீழ்த்த முயன்றனர். ஆனால் ஸ்மித் என்ன செய்தார், ஓஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து வந்து லெக் ஸ்டம்பை காண்பிக்கும் விதமாக ஆடி பந்துவீச்சாளர்கள் உத்தியை எதிர்கொண்டார். இதன் மூலம் அவர் தனது அணுகுமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்வுகளையும் சாதுரியமும் காட்டினார்.

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் லெக் ஸ்லிப், லெக் கல்லி வைத்து ஜோப்ரா ஆர்ச்சரை வைத்து சிலபல ஷோர்ட் பிட்ச் பந்துவீச்சை மேற்கொண்டனர். இதில் ஸ்மித் கொஞ்சம் ஆடிப்போனார், காரணம் தன் உடல் எடை முழுதையும் பின் காலில் வைத்து பந்தின் திசைக்கு நேராக வந்ததால் சிக்கல் ஏற்பட்டது. ஏன் ஜோப்ரா பவுன்சரில் அடி வாங்கினார் என்பதற்கு இதுதான் காரணம்.

எந்த ஒரு துடுப்பாட்ட வீரனுக்கும் தலை கொஞ்சம் முன்னால் நகர வேண்டும், முன்னால் கொஞ்சம் நீட்டி சற்றே பந்தின் திசைக்கு நேராக இருக்க வேண்டும். ஆனால் ஸ்மித் பின்னங்காலில் உடல் எடை முழுதையும் இறக்கி பந்தின் லைனில் வந்ததால் மட்டை முகத்துக்கு நேராக எழும்பி பந்திலிருந்து கண்ணை எடுக்க நேரிட்டதால் அடி வாங்கினார்.

ஆனால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் உத்தியை மாற்றினார். முன்னால் உடலை நீட்டி பவுன்சரின் லைனிலிருந்து சற்றே விலகி பந்தை ஆடாமல் குனிய முடிந்தது. தன் உத்தியை மிகச்சாதுரியமாக அவர் சரி செய்து கொண்டார். இதனால்தான் கூறுகிறேன், சிக்கல்கள் நிறைந்த துடுப்பாட்ட உத்தி. ஆனால் மனத்தளவில் மிகவும் கவனமான ஒருங்கிணைந்த அணுகுமுறை ஸ்மித்தினுடையது என்று” இவ்வாறு கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here