முதல்முறையாக சறுக்கியது ரணில்- சுமந்திரன் ஒப்ரேஷன்: ஐ.தே.கவிற்குள்ளும் வலுக்கும் சுமந்திரன் எதிர்ப்பு!

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் ரணிலின் கடைசி நேர முயற்சி கட்சிக்குள் கூட கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கடைசி வாய்ப்புக்கள் ஏதாவது உள்ளதா என பார்த்திருந்து, சஜித் அலை பெருகி வரும்போது அதை தடுப்பதற்காக நிறைவேற்றதிகார ஒழிப்பை கையிலெடுத்தது கட்சிக்குள் கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

அரசியலில் நாகரிகமான மனிதராக குறிப்பிடப்பட்டு வந்த ரணில், முதன்முறையாக மோசமான நடவடிக்கையொன்றின் ஊடாக, கறைக்குள்ளாகியுள்ளார்.

தற்போது ரணில் மேற்கொண்ட நிறைவேற்றதிகார ஒழிப்பு முயற்சியில் பிரதான பாத்திரம் வகித்தவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் என்பதை சில தினங்களின் முன்னர் குறிப்பிட்டிருந்தோம். கடந்த நான்கரை வருடத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அவரது அரசிற்கும் பல்வேறு விதங்களில் ஒத்தாசையாகவும், சட்டரீதியான வெற்றிகரமான ஆலோசனை வழங்குபவராகவும் இருந்த சுமந்திரனும், இம்முறை சறுக்கியுள்ளார்.

ஜனாதிபதி பதவியின் இறுதிப்பகுதியில் தனது பெயரை மைத்திரி கெடுத்துக் கொண்டதை போலவே, ரணிலும் தனது பெயரை களங்கத்திற்குட்படுத்தியுள்ளார். பதவி மற்றும் சொத்துக்களில் பற்றற்றவர் போல பகிரங்கமாக காண்பித்து வரும் ரணிலின் மனதிலுள்ள பதவியாசையை இன்றைய சம்பவம் நிரூபித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ரணில் ஆதரவு நிலைப்பாடு, தற்போதைய நிறைவேற்றதிகார ஒழிப்பு விவகாரங்களில் எம்.ஏ.சுமந்திரன் எடுக்கும் முடிவுகளால், ஐ.தே.க பாதிக்கப்படுகிறது, ரணில் தவறான முடிவுகளை எடுக்கிறார் என ஐ்தேகவின் முக்கிய மற்றும் பின்வரிசை உறுப்பினர்கள் பகிரங்கமாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்று நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் ஐ.தே.கவின் இளம் எம்.பிக்கள் சுமார் 10 பேர் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். இதன்போது, எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் காரசாரமான கருத்துக்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். சுமந்திரனின் ஆலோசனையிலேயே ரணில் தேவையற்ற வேலைகளை பார்க்கிறார் என அவர்கள் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்று விசேட அமைச்சரவை கூட்டம் நடந்ததன் பின்னர், நிதியமைச்சர்  மங்கள சமரவீர- தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு நடந்தது. அபிவிருத்தி நிதிகள் விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. இதற்கு முன்னதாக, ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் காரசாரமான விமர்சனங்களை மங்கள வைத்துள்ளார்.

“பிரதமர் பதவி வெறி கொண்டு செயற்படுவதாகவும், நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்போம் என நான்கரை வருடமாக நாம் சொல்லி வந்தோம். அப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இப்படி செய்வது வெட்கக்கெடாது. சுமந்திரன்தான் ரணிலை தலைகுப்புற விழுத்தியுள்ளார்“ என காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபாலவும் இணக்கம் தெரிவித்ததாக முன்னர் சொல்லப்பட்டது. எனினும், இன்று அமைச்சரவை கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய மைத்திரி, “இதில் நான் தொடர்புபட்டிருக்கவில்லை. பிரேரணை தொடர்பான விவாதத்தை ரணில் விரும்பியதால், அமைச்சரவையை கூட்டினேன்“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here