பாகிஸ்தான் செல்ல பச்சை விளக்கு!

பாகிஸ்தான் சுற்று பயணத்தை இலங்கை அணி மேற்கொள்ளலாமென இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிக்கையளித்துள்ளது. இதையடுத்து, திட்டமிட்டபடி, இலங்கையின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இடம்பெறவுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், இலங்கை பாதுகாப்பு அமைச்சு பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தியடைந்ததை தொடர்ந்து, அறிக்கையொன்றை இலங்கை கிரிக்கெட்டிற்கு சமர்ப்பித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்குமென இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளர் மோகன் டி சில்வா, பாகிஸ்தானுக்கு புறப்படுவதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து அனைத்து சான்றுகளையும்  பெற்றதாக இன்று கூறினார்.

“பாதுகாப்பு அமைச்சிலிருந்து எங்களுக்கு பச்சை விளக்கு காண்பிக்கப்பட்டது. திட்டமிட்டபடி சுற்றுப்பயணதிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. நானும் எங்கள் அலுவலக பொறுப்பாளர்களும் அணியுடன் வருவோம்.” என்றார்.

பயங்கரவாத தாக்குதல் நடக்கலாமென குறிப்பிடப்பட்ட அறிக்கைகள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டன.

2009 மார்ச்சில் பாகிஸ்தானின் லாகூரில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணி தாக்குதலுக்கு இலக்காகியது. இதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். 6 பாகிஸ்தான் பொலிஸ்காரர்களும் இரண்டு பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

தாக்குதலுக்குப் பின்னர், சர்வதேச அணிகளில் பாகிஸ்தானிற்கு செல்ல  மறுத்துவிட்டன. எனினும், 2017 ஒக்டோபரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டி 20 ஆட்டத்தில் இலங்கை ஆடியது.

டி சில்வா கடந்த மாதம் ஒரு பாதுகாப்பு ஆலோசகருடன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்.

மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளுக்கான அணிகளை இலங்கை ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஒருநாள் போட்டிகள் செப்ரெம்பர் 27,29 மற்றும் ஒக்ரோபர் 2ம் திகதி கராச்சியில் நடைபெறும். டி 20 போட்டிகள் ஒக்ரோபர் 5,7,9ம் திகதிகளில் லாகூரில் நடக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here