இன்ஜின் ஓயிலில் இத்தனை விசயமா! 01

 இயந்திரத்தின் ஆயுளை தீர்மானிக்கும் இன்ஜின் ஓயில்! 

நமதுஉடலில் ஓடும் ரத்தம் போன்றது வாகனங்களின் இன்ஜின் ஓயில். இன்ஜினில் உள்ள உலோகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது மசகுத்தன்மை (Viscosity) இல்லையென்றால், உலோகம் விரைவாகத் தேய்வதுடன் கீறல்களும் விழுந்துவிடும். உலோக உரசலின்போது ஏற்படும் வெப்பத்தால், இன்ஜின் உருகி தனது வடிவத்தை இழந்து, சிறிது நேரத்திலேயே செயலிழந்துவிடும். இதைத்தான் இன்ஜின் ‘சீஸ்’ ஆகிவிட்டது என்கிறோம்.

உரிய அளவு ஓயில் இருக்கும்போது, உலோக உராய்வு முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன், உராய்வால் ஏற்படும் வெப்பத்தையும் இந்த ஓயில் கடத்திவிடுகிறது. இன்ஜினுக்குள் ஏற்படும் உராய்வுகள், வெப்பமடைதல் போன்றவற்றைக் குறைப்பதே இன்ஜின் ஓயிலின் முதன்மையான பணி. உடலின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், எப்படி ஹார்ட் அட்டாக் வருகிறதோ, அதேபோல இன்ஜின் ஓயில், இன்ஜினுக்குள்ளே சீராகச் செல்லவில்லை என்றால், இன்ஜினுக்கு ‘அட்டாக்’ வந்து சீஸ் ஆகிவிடும்.

இன்ஜின் ஓயிலிலும் பல வகைகள் இருக்கின்றன. மேலும், அவற்றுக்கான விதிமுறைகளும், பயன்பாட்டுக்கு ஏற்ப வித்தியாசங்களும் இருக்கும். இன்ஜின் ஓயிலுக்கான விதிகளை நிர்ணயிக்கும் அமைப்புகள் பல இருக்கின்றன. அவற்றில் SAE (Society of Automotive Engineers) என்பது ஒரு சர்வதேச அமைப்பு. இதன் வழிகாட்டுதலின்படிதான், இன்ஜின் ஓயிலின் கிரேட் தீர்மானிக்கப்படுகிறது.

இன்ஜின் ஓயிலின் பணி மற்றும் மசகுத்தன்மையின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப, ஐந்து ஐந்தாக 0 முதல் 25 வரை (W) குளிர்கால கிரேடிங்கும், பத்து பத்தாக 20 முதல் 60 வரை (S) கோடை கால கிரேடிங்கும் வகை பிரிக்கப்படுகின்றன. இதில், சிங்கிள் கிரேட் மற்றும் மல்ட்டி கிரேட் என இரு வகைகள். சாதாரண பயன்பாட்டுக்கு சிங்கிள் கிரேட் ஏற்றது.

நம் நாட்டின் மிதமான பருவநிலைக்கு, மல்ட்டி கிரேட் சரியானது. இங்கு அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும் கார்களுக்கான ஓயில் கிரேட் 5W30 / 10W40 அல்லது 15W40 / 20W50 ஆகியவைதான். W-வுக்கு முன்பாக இருக்கும் நம்பர், குறைவான வெப்பநிலையைக் (குளிர்காலம்) குறிப்பிட்டால், W-வுக்குப் பின்பு இருக்கும் நம்பர், அதிகபட்ச வெப்பநிலையைக் (கோடைக்காலம்) குறிப்பிடுகிறது. எனவே, இன்ஜின் இயங்கும்போது அடர்த்தியாக இருக்கும் ஓயில், இன்ஜின் செயல்படாத போது திரவ நிலைக்கு மாறிவிடும்.

உலக அளவில் API (American Petroleum Institute) மற்றும் EACA (European Automobile Manufacturers Association ) அமைப்புகள்தான் ஓயில் கிரேட் நிர்ணயம் செய்வதில் மிகப் பழைமையானவை. இலங்கையில் விற்பனை செய்யப்படும் இன்ஜின் ஓயில்களில், அமெரிக்காவின் API  விதிகள்தான் பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன. இது பெரும்பாலும் பெட்ரோல் இன்ஜின்களுக்கே பொருந்தும் என்றாலும், டீசல் இன்ஜின்களுக்கு என பிரத்யேகமான விதிகளையும் கொண்டுள்ளது API. ஸ்பார்க் இக்னீஷன் இன்ஜின்களுக்காக API SL அல்லது API SM கம்ப்ரஷன் இக்னீஷன் இன்ஜின்களுக்காக API CH4 அல்லது API CI4 விதிகளும் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன.

கார்களுக்கான ஓயில்களில், உராய்வைக் குறைக்கக்கூடிய அடீட்டிவ்கள் அதிகளவில் இருக்கின்றன. எனவே, இதை மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்துவது, கிளட்ச் சிலிப் ஆவதற்கு வழிவகுக்கும். தவிர, ஓயில் விஷயத்தில் எப்போதுமே வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் கிரேடை மட்டும் பயன்படுத்த வேண்டும். கிரேடை மாற்றினால் ஓயில் ஃப்லிம், இன்ஜின் வடிவமைப்புக்கு ஏற்ப உருவாகாது. இதனால், இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படுவதுடன், நாளடைவில் அது செயலிழப்பது உறுதி.

இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் இன்ஜின் ஓயில் மற்றும் அதன் விதிகளைப் பார்க்கலாம்.

ஜெ.எ.சொ (JASO – Japanese Automotive Standards Organization) என்பது இன்ஜின் ஓயிலுக்கான ஜப்பானிய அமைப்பு. High Revving பெர்ஃபோமென்ஸ் இன்ஜின்களுக்குப் பெயர் பெற்ற ஜப்பான், ஜெ.எ.சொ விதிகளை இருசக்கர வாகனங்களுக்கு ஏதுவானதாகவே அமைத்திருக்கிறது. எனவே, தென்னாசிய சந்தையிலுள்ள மோட்டார் சைக்கிள் இன்ஜின் ஓயில்கள், அமெரிக்காவின் API SL அல்லது API SM விதியுடன் சேர்த்து, JASO MA / JASO MA2 அல்லது JASO MB விதிகளைப் பின்பற்றியே தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் JASO MA / JASO MA2 என்பது, அதிக உராய்வுகளைக்கொண்ட வெட் கிளட்ச் பைக்குக்கும், JASO MB என்பது, குறைவான உராய்வுகளைக்கொண்ட ஸ்கூட்டருக்கும் பொருந்தும். எனவே, பைக்கின் ஓயிலை ஸ்கூட்டரிலும், ஸ்கூட்டரின் ஓயிலை பைக்கிலும் மாற்றுவது, நாம் இன்ஜினுக்கு செய்யும் மிகப் பெரிய தீங்கு. இன்ஜின் ஓயில்களின் செயல்பாட்டை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அடிட்டீவ்களை தற்போது பார்க்கலாம்.

Detergent / Dispersant – இன்ஜினின் உட்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதே இதன் பணி.

Viscosity Index Improvers – எந்த பருவநிலையில் இயங்கினாலும், இன்ஜின் ஓயிலின் மசகுத்தன்மையைக் குறையவிடாமல் இவை பார்த்துக்கொள்ளும்.

Anti-Wear Agents – கார்/டூவீலரை அதிக நாள்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது, இன்ஜின் வடிவமைப்புக்கு ஏற்ற ஓயில் ஃபிலிம் முழுமையாக இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. எனவே, உலோகங்கள் உரசும் வாய்ப்பும் தானாக அமைந்துவிடுகின்றன. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, Zinc Dialkyl Dithio Phosphate அல்லது Phosphorous – Sulphur ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட Anti-Wear Agents, இன்ஜின் ஓயிலில் கலக்கப்படுகின்றன.

Friction modifiers – உலோகங்கள் உரசுவதால் ஏற்படும் அதிக உராய்வைக் கட்டுப்படுத்தி, மைலேஜை அதிகரிப்பதுதான் இதன் வேலை. இதற்காக Graphite, Molybdenum போன்றவை, இன்ஜின் ஓயிலில் சேர்க்கப்படுகின்றன.

Corrosion Inhibitors / Alkaline Additives –  காற்றும், எரிபொருளும் கலந்த கலவை எரியூட்டப்படும்போது, நீர் மற்றும் அசிட் ஆகியவை உற்பத்தி ஆகின்றன. இவை இன்ஜினில் நீடித்தால், அதன் உட்புறத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அதனைத் துருப்பிடிக்கச் செய்துவிடும். இப்படி நடக்கவிடாமல் செய்வதே  இதன் பணி.

Antioxidants – இன்ஜினுக்குள்ளே இருக்கும் ஓயிலின் நச்சுத்தன்மை, இறுக்கத்தின் அளவு, மாசு பொருள்களின் உருவாக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம்.

அடுத்த பாகத்தில் இன்ஜின் ஓயில் வகைகளைப் பற்றிப் பார்ப்போம்!

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here