எழுக தமிழ்… ஏன்? எதற்கு? எப்படி?

எழுக தமிழ் 2019 பேரணி இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

எழுக தமிழை ஒருவித அசூசையுடன் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அரச தரப்பு ஆதரவாளர்கள் எழுக தமிழ் வெற்றியா, தோல்வியா என்ற தீவிர விவாதத்தில் இறங்கியிருப்பதே, எழுக தமிழ் பெற்ற ஒரு வெற்றிதான். அவர்கள் அனைவரின் நிம்மதியையும் எழுக தமிழ் பறித்து விட்டது.

எழுக தமிழ் வெற்றியா, தோல்வியா என்ற விவாதத்தில் ஈடுபடுபவர்களை அதிகம் பொருட்படுத்த வேண்டியதில்லை. எழுக தமிழ் ஆரம்பித்த சமயத்திலேயே இந்த விதமான கருத்துக்கள் இருந்தன. அனேகமாக, ரணில் அரசு ஆதரவாளர்கள் தமது காலத்தில் தமிழ் மக்களின் திரட்சியை விரும்பவில்லையென்பதே இந்த விமர்சனங்களின் மூல வேர்.

அதற்கு வசதியாக, கோட்டாபயவிற்கு வாய்ப்பாகவே எழுக தமிழ் நடப்பதாக குறிப்பிட்டார்கள்.

இந்தவகையாக மனப்போக்குள்ளவர்கள் வரலாறு முழுவதும் இருப்பார்கள். விடுதலைப்புலிகளின் காலத்திலும் இந்த வகையானவர்கள் இருந்தார்கள். புலிகள் பெரும் தாக்குதல் நடத்தினால், இராணுவம் பதிலடி தாக்குதலாக கடுமையான தாக்குதல் நடத்துமே என முணுமுணுத்தவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களையெல்லாம் புலிகள் மட்டுமல்ல, வரலாறும் கணக்கெடுக்காது.

படித்து பட்டம் பெற்று, அரசாங்க வேலையும் வேண்டும், தமிழீழமும் வேண்டும் என்ற யாழ்ப்பாணிகளின் பொதுமனநிலையின் இன்னொரு வடிவம்தான் இந்த கோட்டா புரளி.

உண்மையில், தமிழ் அரசு கட்சி உருவாக்கியுள்ள மோசமான அரசியல் இயல்பு இந்த “மஹிந்த- கோட்டா“ புரளி. அரசியல் உரிமைகளிற்காக போராடும் இனம், நபர்களை முன்னிலைப்படுத்திய அரசியல் செய்ய முடியாது. தென்னிலங்கையில் ரணில் இருக்கிறாரா, கோட்டா இருக்கிறாரா என்பதல்ல விஞ்ஞானபூர்வ அரசியல். நாம் இலக்கை எப்படி அடைகிறோம் என்பதே, நமது தேவை. நபர்களை முன்னிலைப்படுத்திய அரசியல் செய்ய ஆரம்பித்தால், எமது இலக்கை  விட்டுவிடுவோம். இப்போது தமிழ் அரசு கட்சியும் செய்துள்ளது அதையோ.

இலக்கை நாம் எப்படி அடையப் போகிறோம் என்பது முக்கியமல்ல, யாரை ஜனாதிபதியாக்கக் கூடாது என்பதே நமது முக்கிய இலக்கு என்பதை போன்ற அபத்தமான அரசியல் கோட்பாடொன்றை உருவாக்கியுள்ளது. கட்சிகள் அடிமைகளைத்தான் உருவாக்கி வைத்துள்ளன. செயற்பாட்டாளர்களையல்ல. அதனால், புத்திபூர்வமாக இந்த கோட்பாட்டை அணுகும் வல்லமை அந்த அடிமைகளிற்கு வாய்ப்பதில்லை.

யாரை ஜனாதிபதியாக்குவதென்பதல்ல, யாரை ஜனாதிபதியாகாமல் தடுக்க வேண்டுமென்பதே முக்கியம் என்ற கோட்பாட்டின் உண்மையான அர்த்தம்- அடுத்த ஐந்து வருடத்தையும் தமிழர்கள் வீணாக்கப் போகிறார்கள் என்பதே. இது கோட்டாவை ஆதரிப்பதல்ல. ரணிலையும் ஆதரிப்பதல்ல. தெற்கு தரப்புக்கள் அனைவரையும் ஜனாதிபதியாகவும், பிரதமராகவுமே அணுக வேண்டும். அதை தனிநபர்களாக அணுகுவது, அரசியல் அறிவீனம்.

கோட்டா புரளியை கிளப்புவது யாரெனில் ரணில் விசுவாசிகளே.

ஆகவே, எழுக தமிழையும் கோட்டாவையும் முடிச்சுப் போடுபவர்களை, முதலில் சிறிகோத்தா பிரச்சனைகளை முடிக்கப் பாருங்கள் என ஆலோசனை சொல்லியனுப்புவதே சிறந்தது.

எழுக தமிழிற்கு முதல்நாள்

நேற்று- எழுக தமிழிற்கு முதல்நாள்- திடீர் சர்ச்சையொன்று ஏற்பட்டது. எழுக தமிழ் மேடையில் அரசியல்வாதிகள் யாரும் உரையாற்றக் கூடாது என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் திடீர் நிபந்தனை போட்டார்கள். அவர்களை சமரசப்படுத்த தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இதையடுத்து நேற்று சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவர்களுடன் பேச்சு நடத்தினார். அதற்கும் பலன் கிட்டவில்லை.

பின்னர் கே.ரீ.கணேசலிங்கம், சரவணபவன் ஆகிய விரிவுரையாளர்கள் மாணவர்களுடன் பேசி, சமரசப்படுத்தினார்கள்.

இரு முனையில் நகர்வு

இன்றைய எழுக தமிழ் பேரணி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும், யாழ் பல்கலைகழக முன்னறலில் இருந்தும் ஆரம்பித்தது. காலை 9 மணிக்கு பேரணி ஆரம்பமாகுமென குறிப்பிடப்பட்டிருந்தாலும், 10.25 அளிவிலேயே பேரணி ஆரம்பித்தது. இரண்டு முனைகளில் ஆரம்பித்த பேரணி கந்தர்மடம் சந்தியில் சந்தித்து, யாழ் முற்றவெளியை நோக்கி நகர்ந்தது. இதில் சுமார் 4,000 அளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேரணிக்கு தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்பன ஒத்துழைக்கவில்லை. எனினும், இரண்டு கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்தனர்.

முற்றவெளியில் சுமார் 700 வரையானவர்கள் ஏற்கனவே குழுமியிருந்தனர். இதன்படி பார்த்தால் அண்ணளவாக 4500 – 5000 பொதுமக்கள் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்களிற்காக 5000 மதிய போசன பார்சல்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட அவ்வளவு பார்சலும் தீர்ந்து விட்டது.

பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட எம்.பி, சிறிதரன் கலந்து கொண்டிருந்தார். நல்லூர் திலீபன் பூங்காவில் இருந்து, ஆனைப்பந்தி வரை அவர் நடந்து சென்றிருந்தார். அவருடன் கிளிநொச்சி மாவட்ட தமிழ் அரசு கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எழுக தமிழால் என்ன இலாபம்?

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் சமூகத்தின் எதிர்ப்பரசியல் முனையை முழுங்கச் செய்து, அமைச்சு பதவியை ஏற்கலாமா என்ற விவாதத்தை மத்தியகுழுவில் நடத்தும் நிலைக்கு கீழிறக்கியுளள்து தமிழ் அரசு கட்சியின் அரசியல். இதேவிதமான அரசியலை தொடர்ந்தால், அடுத்த ஐந்து வருடத்தில், தமிழ் தேசிய கட்சிகள் வலுவிழந்து, தென்னிலங்கை தேசிய கட்சிகள் சக்திமிக்கவையாக மாற்றமடைந்து விடும்.

அரசியல் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை அந்த பொறியை  அணைய விடாமல் பாதுகாக்க வேண்டும்.

எல்லா போராட்டங்களிலும், தலைவர்களிலும் பலவீனம் இருக்கலாம். எனினும், அதை நாசூக்காக எப்படி கையாள்கிறோம் என்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் போராட்டத்திலும் விமர்சனங்கள் இருந்தன. அதற்காக அதை நிராகரிக்க முடியாது.

1995ம் ஆண்டின் பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தவர்கள் அதிகபட்சமாக நான்கரை இலட்சம்தான். மிகுதியானவர்கள் பாதுகாப்பாக யுத்த வலயத்திற்கு வெளியில் வாழ்ந்தனர். ஆனால், ஈழத்தமிழர்கள் அண்ணளவாக 35- 40 இலட்சமானவர்கள். முள்ளிவாய்க்காலில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் நான்கரை இலட்சம் என்பதற்காக புலிகள், தமிழர்கள் புலிகளை நிராகரித்தார்கள் என்றோ… அது தேவையற்ற போராட்டமென்றோ ஆகாது.

எண்ணிக்கையில் எதுவுமில்லை. திரண்டு வந்த மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விசுவாசத்தை ஏற்படுத்திக் கொள்வதே தமிழ் மக்கள் பேரவையின் உடனடி தேவை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here