தரப்படுத்தப்பட வேண்டியது வங்கிகளையா? சேவையா?- தலை சுற்ற வைக்கும் ஊழல் தொடர் 05

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெளிவுபடுத்தப்படாத ஏழைகளுக்கான உதவித் திட்டங்களால்தான் அதிகமாக சர்ச்சைகளும், மாவட்டம் தொடர்பான எதிர்மறையான புள்ளிவிபரங்களை காண்பிப்பதும் ஏற்பட்ட வண்ணமுள்ளன.

வறுமை ஒழிப்பு திட்டத்தை பற்றியும் முக்கியமாக குறிப்பிட வேண்டும். 1999 ஆம் ஆண்டிலிருந்த இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இத்தனை ஆண்டுகால செயற்திட்டத்தில் போதுமான அடைவுமட்டம் எட்டப்பட்டதா என்ற நியாயமான கேள்வியும் உள்ளது. இந்த செயற்திட்டத்தின் குறைபாடுகள் பற்றிய விமர்சனங்கள் அண்மைக்காலத்தில் சடுதியாக மேலெழுந்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

வறுமை ஒழிப்பு செயற்திட்டம் மீதான விமர்சனங்கள் இருந்தும், அதை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை. இந்த விசயத்தில் அவர்கள் எவ்வளவு தெளிவை பெற்றிருக்கிறார்கள் என்ற கேள்வியும் உள்ளது.

சமுர்த்தி வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஏழை மக்களை வாழ்வாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. எனினும், அவை பற்றி மக்களிற்கு தெரிவதில்லை. அதிகாரிகளில் சிலரும் அந்த தெளிவுபடுத்தல்களை செய்து, அதன் பலன்களை மக்கள் பெற்றுக்கொள்ள உதவுவதில்லை.

வறுமை ஒழிப்பு செயற்திட்டத்தில் அதிகம் தெளிவுபடுத்தப்படாத நடைமுறைகள் பற்றிய ஒரு அறிமுகத்தை தருகிறோம்.

01.சமுர்த்தி வங்கிகளில் பயனாளிகளை அங்கத்தவர்களாக இணைத்து சிறு குழுக்களை அமைத்து அதன் மூலம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் எவ்வாறு என்பது இதுவரை உரிய மக்களுக்கு தெளிவுபடுத்தபடாத நிலையே காணப்படுகின்றது. இதன் மூலம் ஏழைகளிடம் சேமிக்கும் பணத்திற்கு உரிய முறையில் பற்றுச்சீட்டுகள் பணம் பெற்றதும் வழங்கப்படுவதில்லை. அதனை கேட்டாவது பெற வேண்டுமென்ற தெளிவும்  அனேகமான ஏழைப்பயனாளிகளுக்கு இல்லை.

இப்படியான தெளிவின்மையை தமக்கு சாதகமாக பாவித்த சில அதிகாரிகள் மோசடி செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். தீபத்தில் தொடர்ந்து வெளியாகும் சமுர்த்தி முறைகேடுகள் பற்றிய தொடரை கவனித்தவர்களிற்கு இது புரியும். இந்த மோசடியில் ஈடுபடும் அலுவலர்களிற்கு உரிய தண்டனை கிடைத்ததா என்றால்- அதுவும் கேள்விக்குறிதான்.

02.வாழ்வாதர திட்டங்களுக்கு பயனாளிகளை தெரிவு செய்யும் போது அவை மக்களின் தேவை கருதியதாக இருக்க வேண்டியது அவசியம். அந்த பொறுப்புணர்வு அலுவலகர்களிற்கு அவசியம். ஆனால் சில அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால், திணிக்கப்பட்ட வாழ்வாதார உதவிகளாகவே அமைந்துவிடுகின்றன. இதுவே மோசடிகள் இடம்பெற்றுவருவதற்கான காரணமாகவும் ஆகிவிடுகிறது.

பல இடங்களில் வாழ்வாதாரம் என்று வழங்கப்பட்ட பொருட்கள் பல வருடங்கள் கடந்தும் பயன்படுத்த முடியாமலும் அதற்கான உத்தரவாதகாலமும் முடிவடைந்த நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் ஏழை மக்களின் பெயரை பயன்படுத்தி அதிகாரிகளின் உறவினர்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன் சில அதிகாரிகள் அதனை மக்களுக்கு வழங்காமல் விற்று காசாக மாற்றி கொண்ட சம்பவங்களும் உள்ளன.

03.சமுர்த்தி வங்கிகளில் பயனாளிகள் கடன் பெறும் வேளையில்- பெறப்படும் கடன், அதன் நோக்கம், எந்த அளவினாலான கடன் தேவை என்பதனை பயனாளிகளுக்கு தெளிவுபடுத்தப்படாமல் வழங்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. பின்னர், உத்தியோகத்தர்கள் மோசடியான முறையில் ஏழை பயனாளிகளின் பெயரை பயன்படுத்தி மோசடியான முறையில் கடனைப்பெற்று மீண்டும் கடனை கட்டாது ஏழைகளை ஏமாற்றுதல்.

04.சமுர்த்தி மாதாந்த உதவிக்கொடுப்பனவான முத்திரைக் கொடுப்பனவுகளை அந்தந்த மாதமே உரிய பயனாளிகளுக்கு வழங்காமல் அதனை வைத்துக்கொண்டு ஏழைப்பயனாளிகளின் கடன் அறவீடு, மாதாந்த சேமிப்பு தொகைகளை அறவிட்டு கொள்வதனால் பயனாளிகளுக்கு எவ்வளவு நிதி கிடைக்கின்றது, எவ்வளவு நிதி தங்களது கணக்கில் உள்ளதென்பது பற்றிய தெளிவு இல்லாமை.

உரிய காலப்பகுதியில் பொதுமக்களின் வங்கி கணக்கு புத்தகங்களை அவர்களின் கணக்கில் உள்ள பண மீதிகளை அறிந்து கொள்ளும் வகையில் வழங்குவதும் இல்லை. பலபேரின் கைகளில் புத்தகங்களும் இல்லை.

இப்படியான நிலையில்தான் மாவட்டத்தின் சமுர்த்தி செயற்பாடு உள்ளது. மாவட்டத்தில் தற்போது இரண்டு வகைப்பாட்டில் சமுர்த்தி பயனாளிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாதாந்த உதவிபெறும் பயனாளிகள், வாழ்வாதாரத்தில் மேம்படுத்தப்பட்ட பயனாளிகள் என்ற வகைப்படுத்தப்பட்டு, சமுர்த்தி முத்திரை பெற்றுக்கொள்ளும் 77,800 குடும்பங்கள் தற்போதுள்ளன. இந்த எண்ணிக்கை 79,000 வரை அதிகரித்து தற்போது குறைந்துள்ளது.

இவர்கள் முறையே ரூபா 3500, ரூபா 2500, ரூபா 1500, ரூபா 420 என்ற ரீதியில் முத்திரைப் பணக் கொடுப்பனவினை பெற்றுவருகின்றனர்

இதில் ரூபா 420 பெறுமதியினைக் கொண்ட முத்திரையை உடையவர்களுக்கு பணம் வழங்கப்படுவதில்லை இப்பணம் கட்டாய சேமிப்பு என்ற ரீதியல் சமுர்த்தி வங்கிகளில் உள்ள தனிநபர் கணக்குகளில் மாதாந்தம் வரவு வைக்கப்பட வேண்டும்.

இந்த நடைமுறை ஒழுங்கு முறையில் பேணப்படுவதில்லை. அத்துடன், இந்த தொகையினை பெறும் பயனாளிகள் அனைவரும் வாழ்வாதாரத்தில் மேம்பட்டவார்களா என்ற கேள்வியும் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு இந்த 420 ரூபா முத்திரை வழங்கப்படுகிறது. அரசாங்க உதவிகளை பெற்றுக்கொள்ள சமுர்த்தி முத்திரை அவசியம் என்ற ஒரே காரணத்திற்காக இதை வாங்கி வைத்திருக்கிறார்களே தவிர, மேற்கொண்டு இதில் அக்கறைப்படுவதில்லை. தமது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை பற்றி அறிந்தும் வைப்பதில்லை.

கட்டாயச் சேமிப்புகள் ரூபா 3500 இற்கு ரூபா 300 உம், ரூபா 2500 இற்கு ரூபா 200 உம், ரூபா 1500 இற்கு ரூபா 100 உம், ரூபா 420 இற்கு ரூபா  270 உம் கட்டாயமாக சமுர்த்தி முத்திரை பெறும் அனைத்து பயனாளிகளிடமிருந்தும் சேமிப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு வருடாந்தம் 7 வீத வட்டி வழங்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 29 சமுர்த்தி வங்கிகளிலும் இந்த கட்டாயச் சேமிப்பு கணக்குகளின் மொத்த வைப்பு தொகையாக  60 மில்லியன் ரூபாய் உள்ளது. எனினும், தங்களது கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளதென்பதை கணிசமான பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் அறியாமல் உள்ளமை கவலையளிக்கும் விசயமே.

70 வயதை தாண்டியவர்களும், திடீர் சுகயீனமடைபவர்கள், பிள்ளைகளின் கல்வி தேவைக்காக, மேலும் அவசர நிலைமைகளை கருத்தில் கொண்டு இக் கட்டாயச் சேமிப்பு கொடுப்பனவில் இருந்து ரூபா 25000 வரையான பெறுமதியினை அவர்களினால் வங்கிகளிலிருந்து விடுவித்து கொள்ளமுடியும். எனினும், இந்த நடைமுறை தெரியாமலும், தெரிந்தும் விடுவிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டும் பல ஏழைக்குடும்பங்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள்.

ஏனெனில் குறித்த கணக்கு மீதிகளை அறியும் வகையில் வைப்பு புத்தகம் ஒழுங்காக வழங்கப்படவில்லை. அவர்களுக்கான கணக்கு மீதிகளுக்கான வட்டி கொடுப்பனவுகள் ஒழுங்கு முறையில் உரியவர்களின் கணக்குகளில் சேர்க்கப்படுவதில்லை. இப்படி பல விடயங்கள் கவனிப்பாரற்ற நிலையில் உள்ள போது, சமுர்த்தி வங்கிகளை தரப்படுத்திக் கொள்வதால் மட்டுமே, மாவட்டத்தின் சமுர்த்தி சேவையை தரமுயர்த்திக் கொள்ள முடியுமா?

 

 

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here