மனைவி உச்சநிலையை அடைவதில்லையென்கிறார்: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 14

எஸ்.ஜெபநேசன் (28)
வட்டுக்கோட்டை

எமக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. இருவரும் அரச உத்தியோகத்தில் இருக்கிறோம். கடந்த சில மாதங்களின் முன்னர் மனைவி திடீரென ஒருநாள் என்னிடம் சொன்னார்- தான் இதுவரை உச்சக்கட்ட இன்பத்தை என்னுடன் அனுபவிதததேயில்லையென. ஏதோ ஒரு மருத்துவ கட்டுரையை படித்த பின்னரே அவர் அப்படி பேசினார். தனக்கு ஏதும் குறையிருக்குமோ என்றும் அவர் குழப்பமாக இருக்கிறார். இது குழந்தை பெற்றுக்கொள்வதை பாதிக்குமா?

டாக்டர் ஞானப்பழம்: தம்பி… உங்கள் நீண்ட கடிதம் படித்தேன். உங்கள் மனைவிக்கு ஒரு குறையிருப்பதாக நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் என்பதை கடிதத்தை படித்தபோது புரிந்தது. நீங்களாக அப்படி புரிந்தீர்களா, அல்லது மனைவி அப்படி புரிந்ததை நீங்கள் பிரதிபலித்தீர்களா என்பது தெரியவில்லை.

சரி, அதற்கு முதல் ஒரு விசயம்.

இந்த உலகத்தில் எவ்வளவோ ஆத்திகர்கள் இருக்கிறார்கள். பக்தியில் சிறந்தவர்கள் எத்தனையோ பேர் உங்களிற்கு அருகிலும் இருக்கலாம். நீங்களும் அப்படி இருக்கலாம். ஆனால், இவர்களில் யாராவது, கடவுளை கண்டிருக்கிறார்களா?

இதென்னடா, பாலுறவின் உச்சததை பற்றி கேட்க, கடவுளை பற்றி பேசுகிறேன் என நினைக்காதீர்கள்.

கடவுளும், புணர்ச்சிப் பரவசநிலையும் (Orgasm) ஒன்றுதான். கடவுளை எப்படி உணரத்தான் முடியுமோ அதுபோலத்தான் இதுவும்; அனுபவித்தால்தான் புரியும். இதற்கு நெருக்கமான உதாரணமாகத் தும்மலைக் கூறலாம். கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி திடீரென வெடிக்கக்கூடிய தும்மலைப் போன்றதே புணர்ச்சிப் பரவசநிலை.

பரவசநிலையென்பதை அளவிட எந்த அளவுகோலும் கிடையாது. அது உணர்வு. உங்கள் மனைவி உணர்வது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். ஆனால் அது குறைபாடென்ற முடிவிற்கு உடனடியாக வர வேண்டாம். இந்த விவகாரத்தை நீங்களாகவே கையாளலாம். அதற்கு, பரவசநிலை பற்றிய விளக்கத்தை தருகிறேன். உங்களிற்கு உதவியாக இருக்கும்.

பரவசநிலை ஏற்படும்போது பெண்ணுறுப்பு, கர்ப்பப்பை, ஆணுறுப்பு என அனைத்தும் வேகமாகச் சுருங்கி விரியும். இந்தப் பகுதிகளில் உள்ள தசைகள் சுருங்கி விரிந்து தளர்வதால் புணர்ச்சிப் பரவசநிலை கிடைக்கும். இத்தகைய இன்பத்தை அடைந்த பிறகு, புயலுக்குப் பின் ஏற்படும் அமைதியைப்போல உடல் உறுப்புகள் முழுவதும் ஒருவித ஆழ்நிலைக்குச் சென்றுவிடும். நம்முடைய நரம்பு மண்டலம், நியூரோ ஹார்மோன்கள் என்று சொல்லப்படும் ஒக்ஸிடோசின் (Oxytocin), புரோலோக்டின் (Prolactin), எண்டார்பின் (Endorphin) ஹார்மோன்களின் கூட்டுச் செயல்களால் புணர்ச்சிப் பரவசநிலையை உணரச் செய்கிறது. இந்த இன்பம், செக்ஸ் மட்டுமல்லாமல், சுயஇன்பத்திலும் ஏற்படும். கனவு காணும்போது, மனரீதியாக செக்ஸ் இன்பம் தூண்டப்பட்டும் ஏற்படலாம். தூக்கத்தில் விந்து வெளியேறுவதை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

பொதுவான செக்ஸ் நிலை என்பது, பெண் கீழேயும், ஆண் மேலேயும் இருந்து புணர்வதே. இதில் 70 முதல் 80 சதவிகிதப் பெண்களுக்குப் பரவசநிலை கிடைப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு. ஏனென்றால், பெண்ணுறுப்பில் இருக்கும் உணர்ச்சி மிகுந்த பகுதியான கிளிட்டோரிஸ் (Clitoris) நேரடியாகத் தூண்டப்பட்டால்தான் பெண்கள் பரவசநிலையை அடையமுடியும். ஆண் கீழேயும், பெண் மேலேயும் இருந்து செயல்பட்டால் பெண்ணுக்கு இன்பம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கிளிட்டோரிஸ் பகுதியில் சுமார் 8000 உணர்வு நரம்புகள் இருக்கின்றன.

எல்லாப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே அளவு தீவிரமான பரவசநிலை ஏற்படாது. இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரே மனிதருக்குக் கூட ஒவ்வொருமுறை செக்ஸ் வைத்துக் கொள்ளும்போதும், இந்த அளவின் தீவிரம் மாறுபடும். செக்ஸ் வைத்துக்கொள்ளும் சூழல், கணவன் மனைவிக்கிடையேயான புரிந்துணர்வு, ஆர்வம், மனக்கசப்பு போன்றவையெல்லாம் சேர்ந்துதான் பரவசநிலையின் அளவைத் தீர்மானிக்கின்றன. மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில், ஆண்களுக்கு சராசரியாக 10 முதல் 15 விநாடிகளும், பெண்களுக்கு சராசரியாக 20 விநாடிகளும் புணர்ச்சிப் பரவசநிலை இன்பம் நீடிக்கும் என்கிறார்கள். உடலுறவில் ஈடுபடும்போது, ஆணும் பெண்ணும் ஒருவர்மீது ஒருவர் காதல் கொண்டு, காமக் கடலில் மூழ்கினால் தான் இந்தத் தெவிட்டாத இன்பம் கிடைக்கும்.

ஆகவே, தேவையற்ற சஞ்சலங்களை தவிருங்கள். பத்திரிகைகளில் வரும் மருத்துக குறிப்புக்களையெல்லாம் படித்துவிட்டு, உங்களை அதனுடன் பொருத்திப் பார்ப்பதை தவிருங்கள்.

மன்மத கடல் மிகப்பெரியது. ஒரு ஓரமாக நின்று நீச்சலடித்தால் இப்படித்தான் தேவையற்ற சந்தேகங்கள் வரும். பயப்படாமல் இறங்கி நீச்சலடியுங்கள்.

எம்.எஸ்.முபாரக் (25)
அட்டாளைச்சேனை

டாக்டர், எனக்கும் மனைவிக்கும் திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. குழந்தைகள் இல்லை. நீண்டநாளாக அவர் சண்டையில் ஈடுபடுகிறார். உடலுறவிற்கு ஒத்துழைப்பதில்லை. எப்படியோ, எதோ காரணம் சொல்லி அம்மா வீட்டிலேயே தங்கி விடுகிறார். எனது சிகரெட் பழக்கம் அவருக்கு பிடிக்கவில்லையென்கிறார். ஆனால், சிகரெட் பழக்கத்தால் இப்படி ஒரு கணவனை பெண் வெறுப்பாரா? அவருக்கு வேறு ஏதேனும் தொடர்புகள் இருக்கலாமோ என சந்தேகிக்கிறேன். இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம்?

டாக்டர் ஞானப்பழம்: உங்கள் நீண்ட கடிதத்தை படித்தில், பிரச்சனைக்குரிய விசயத்தை ஒரு வரியில் எழுதியிருந்ததை கவனித்தேன். உண்மையில் இந்த பிரச்சனையை மிகமிக சுலபமாக தீர்க்கலாம். அதற்கு ஒன்றேயொன்றை நீங்கள் செய்ய வேண்டும்.

புகைபிடிப்பதை நிறுத்தி விடுங்கள்!

நீங்கள் இதை செய்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும்.

அனேகமாக குடும்பங்களின் பிரச்சனைகளிற்கு பின்னால் புகையே காரணமாக இருக்கிறது. துர்நாற்றத்தால் செக்ஸ் வைத்துக்கொள்வதில் பெண்கள் தயக்கம் காட்டுவது பொது நியதி. புகைப் பழக்கத்தால், எதிர்காலத்தில் அவரே நினைத்தாலும் தாம்பத்யத்தில் பரிபூரணமாக ஈடுபட முடியாது, உடல்ரீதியாக புகைப் பழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதிகம்.

ஆரோக்கியமான பாலியல் உணர்வுக்கும் தாம்பத்யத்துக்கும் நல்ல ரத்த ஓட்டம் தேவை. புகைபிடித்தல் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தை பாதித்துவிடும். இந்தப் பழக்கத்தால் விரைப்புத் தன்மையிலும் சிக்கல் ஏற்படும். அதனால் உடலுறவில் நிச்சயம் அதிருப்தி ஏற்படும். சிகரெட்டிலிருக்கும் புகையிலைதான் இவ்வளவு பாதிப்புகளுக்கும் காரணம். சில காலம் புகைபிடித்தாலே இவை ஏற்படத் தொடங்கும். சிகரெட்டிலிருக்கும் வேறு சில பொருள்கள், புகைத்தவுடனேயே பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கும். குழந்தையின்மை பிரச்னை, பாலியல் நோய்கள் ஏற்படலாம். புகைபிடிக்கும் பெண்களுக்கு விரைவிலேயே மெனோபாஸ் ஏற்படலாம். தொடர்ச்சியாக அல்லாமல் எப்போதாவது புகைக்கும் சிகரெட்கூட, பாலுறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதே மருத்துவ அறிவியல் கண்டறிந்திருக்கும் உண்மை.

புகை தாம்பத்யத்துக்குப் பகையென்பது அறிவியல் உண்மை.

திடீரென விரைப்புத் தன்மையில் சிக்கல் ஏற்பட்டால், அதற்கு புகைப் பழக்கம் காரணமாக இருக்கலாம். புகைபிடித்தல் இதயம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும் அல்லவா… அது, இரத்த ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் பாலுறவில் பிரச்னையாக முடியும். விரைப்புத் தன்மைக் குறைபாடு, இதயநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.

நிக்கோட்டினும் புகையிலையும் ரத்த ஓட்டத்தில் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது, இதயநோய் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே விரைப்புத் தன்மையில் குறைபாடு ஏற்படத் தொடங்கும். புகைப்பதன் மோசமான விளைவுகள் ஒருவர் எவ்வளவு காலம் புகைக்கிறார், எத்தனை சிகரெட் புகைக்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடும். இரத்த ஓட்டத்தில் 25 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டாலே, விரைப்புக் குறைபாடு ஏற்பட்டுவிடும். 50 சதவிகிதம் குறைந்தால், இதயத்தில் பிரச்னை ஏற்படும். அதனால்தான், விரைப்புக் குறைபாடு இதயநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது என்பதை கடந்த வாரங்களிலும் சொல்லியிருக்கிறேன்.

ஆணுறுப்பிலிருக்கும் பஞ்சு போன்ற திசுக்களில் இரத்தம் அதிகமான அழுத்தத்தில் நிறையும்போதுதான், விரைப்புத் தன்மை உண்டாகும். புகைபிடித்தலால் நரம்பில் பாதிப்பு ஏற்படும்போது, இந்தத் திசுக்களுக்கு போதுமான அளவு இரத்தம், போதுமான அழுத்தத்தில் கிடைக்காது. பெண்களுக்கும் இரத்த ஓட்ட பாதிப்பு வரும்போது, பெண்ணுறுப்பில் போதிய உயவு ஏற்படாமல், தாம்பத்யக் குறைபாட்டை உண்டாக்கும். புகைப்பதால் பாலுறவின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க, அதைக் கைவிட்டுவிடுவதே நல்லது. பாலுறவுக்கும் ஆயுட்காலத்துக்கும் தொடர்பில்லையென்றாலும், சந்தோஷமான வாழ்க்கைக்கு, ஆரோக்கியமான பாலுறவு தேவை. எனவே, புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டியதும், குறைக்க வேண்டியதும் மிக அவசியம்.

முந்தைய பாகத்தை படிக்க டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 13

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here