புலிகளை மீளுருவாக்க முயன்றதாக கைதானவருக்கு விளக்கமறியல் நீடிப்பு: சாட்சியங்களை வைக்க தவறிய பொலிசார்!

விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முனைகிறார், சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தார் என குறிப்பிட்டு கைதான சந்தேக நபருக்கு மீண்டும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் பாண்டிருப்பு கடற்கரையில் வைத்து கைது செய்து, கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் வழக்கு தாக்கல் செய்து இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (11) புதன்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக பொலிஸ் தரப்பில் இருந்து எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்காத நிலையில் பொலிஸார் மேலும் ஒருவாரம் மேலதிக விளக்கமறியலை கோரியதற்கு இணங்க நீதிவான் அனுமதி வழங்கினார்.

எதிர்வரும் செப்ரம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட இச்சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் தரப்பினர் முன்னெடுப்பதுடன் சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தனது தரப்பினரின் வழக்கினை பயங்கரவாத தடை சட்டத்தில் இருந்து நீக்கி சாதாரண சிவில் வழக்கு ஊடாக முன்னெடுக்கமாறு கோரிக்கை விடுத்தார்.

இது தவிர குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருவதுடன், இரு பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள 288/ஏ மாரியம்மன் கோயில் வீதி பாண்டிருப்பு-2 பகுதி முகவரியாக கொண்ட தில்லைநாதன் ஆனந்தராஜ் (41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here