யாழ் பல்கலைகழகத்தில் ‘அரசியல் வேலைவாய்ப்பிற்கு’ எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் நியமனத்தில், அரசியல் தலையீட்டுடனான நியமனம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நியமன பெயர்ப் பட்டியலில் அரசியல்வாதிகளின் சிபாரிசுகளே உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக முன்றலில் தொடர் போராட்டமொன்றை இன்று ஆரம்பித்துள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமக்கான நீதி நியாயம் கிடைக்கும் வரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் இனியும் தாமதிக்காது சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.

அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலால் பாதிக்கப்பட்டோர் தங்களது நியாயமான கோரிக்கைகளை பல்வேறு தரப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.

ஆயினும் உயர் கல்வி அமைச்சோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, யாழ் பல்கலைக்கழக நிர்வாகமோ, இதற்கு உரிய தீர்வுகளை வழங்க முன்வராததோடு தங்களது நியாமான கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ அக்கறை காட்டவும் இல்லை.

ஆகையினால் இப் பிரச்சினையை வெளிக்கொணரும் முகமாக இன்று காலை முதல் யாழ் பல்கலை முன்றலில் தமக்கு நியாயம் கிடைக்கும்வரை தொடர்ச்சியான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here