இழுபறி: மாகாணசபை உறுப்பினர்களிற்கும் வரிச்சலுகை வாகன அனுமதிப்பத்திரம்; 3 வடமாகாணசபை உறுப்பினர்களும் உள்ளடக்கம்!

வரிச்சலுகை வாகன இறக்குமதி பத்திரத்தை மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கும் அமைச்சரவை பத்திரம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் ஆட்சேபனை தொடர்பாக நேற்று அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

அந்த அமைச்சரவை பத்திரம் நேற்று இரண்டாவது முறையாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி கிட்டாமல் போயுள்ளது. உள்ளூராட்சி, மாகாணசபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்த்தனவினால் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

காலாவதியான ஏழு மாகாணசபைகளின் உறுப்பினர்களுக்கும், தற்போதைய ஊவா மாகாண சபைக்கும் தலா 35,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்களை சலுகை விதிகளின் கீழ் இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிப்பதாக இந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சலுகை, முன்னைய வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு 2017இல் வழங்கப்பட்டது. அப்போதைய வடக்கு மாகாணசபையின் மூன்று உறுப்பினர்களை தவிர, மிகுதி 35 உறுப்பினர்களும் அந்த வசதியை பெற்றனர்.

தற்போதைய அமைச்சரவை பத்திரம் அந்த மூன்று வடமாகாணசபை உறுப்பினர்களிற்கும் அந்த சலுகை வாய்ப்பை வழங்குகின்றது.

மொத்தமாக 421 மாகாணசபை உறுப்பினர்களிற்கு வரிச்சலுகை வாகன அனுமதியை வழங்குகிறது அந்த பத்திரம்.

வடமாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட சலுகை மூலம் அவர்கள் பலனடைந்துள்ளனர், ஏனைய மாகாணங்களிற்கும் அந்த சலுகை வழங்கப்பட வேண்டுமென வஜிர குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுபோன்ற சலுகையை பெற்றுள்ளனர், எனவே மாகாணசபை உறுப்பினர்களிற்கும் இந்த வாய்ப்பை வழங்க வேண்டுமென சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அமைச்சர் மங்கள சமரவீர அதை கடுமையாக ஆட்சேபித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படுவதால், மாகாணசபை உறுப்பினர்களிற்கும் வழங்க வேண்டுமெனில், நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இந்த சலுகையை நிறுத்துவேம் என்றார்.

மங்களவின் எதிர்ப்பு காரணமாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

வடமாகாணசபையில் மூவர் இந்த வசதியை அப்போது பெற்றுக்கொள்ளவில்லை. வைத்தியர்கள் சத்தியலிங்கம், குணசீலன் ஆகியோர் விண்ணப்பித்திருந்தபோதும், மருத்துவர்களாக வரிச்சலுகை வாகனங்களை கொள்வனவு செய்திருந்ததால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. க.வி.விக்னேஸ்வரன் அப்போது விண்ணப்பிக்கவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here