‘குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்’: பாஜக மூத்த தலைவர் மீது 23 வயது பெண் குற்றச்சாட்டு!

குளிக்கும்போது தன்னை இரகசியமாக வீடியோ எடுத்து, அதை பகிரங்கப்படுத்தப் போவதாக மிரட்டி பல மாதங்களாக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக, பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் மீது 23 வயதான சட்ட மாணவியொருவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

அவரது முறைப்பாடு குறித்து நேற்று சிறப்பு விசாரணைக்குழு சுமார் 11 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி, டில்லி காவல்துறை மற்றும் நீதவான் ஆகியோருக்கு அளித்த அறிக்கையில், பாஜக தலைவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை விவரித்துள்ளார்.

தனது 12 பக்க புகாரில், அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சின்மயானந்த் நடத்தும் கல்லூரியில் சட்டப் படிப்பில் சேருவதற்காக 2018 ஜூன் மாதம் அவரை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அனுமதிக்கு ஏற்பாடு செய்ததாகவும், அப்போது தனது தொலைபேசி எண்ணை குறித்துக் கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பின்னர், அவரை அழைத்து கல்லூரி நூலகத்தில் 5000 ரூபாய்க்கு ஒரு வேலையை வழங்கியுள்ளார். அந்தப் பெண் நூலகத்தில் பணிபுரிந்தார்.

“ஒக்டோபரில் அவர் என்னை ஹாஸ்டலில் தங்கச் சொன்னார். ஒருநாள் என்னை தனது ஆசிரமத்திற்கு அழைத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஹாஸ்டலில் குளித்த வீடியோவை தனக்குக் காட்டியதாகவும், அதை பகிரங்கப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதாகவும், பின்னர் அச்சுறுத்தி வன்புணர்ந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். வன்புணர்வையும் படமாக்கி, அதையும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு பயன்படுத்தினார் என்று அவர் கூறினார். இந்த ஆண்டு ஜூலை வரை இந்த கொடுமைகள் தொடர்ந்தன.

செப்டம்பர் 5 ம் தேதி, டெல்லியில் உள்ள லோதி சாலை காவல் நிலையத்திற்கு சென்று, முறையிட்டார். எனினும், முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்ததால் “உத்தரபிரதேச காவல்துறை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்” என்றும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 24 ம் தேதி அந்த பெண் காணாமல் போனார். திடீரென ஒருநாள், சமூக ஊடகத்தின் வெளியிட்ட வீடியோவில், தலைவர் ஒருவர் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். அந்த வீடியோவில் அவர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் உதவி கோரினார்.

அவர் காணாமல் போன பின்னர் அந்த பெண்ணின் தந்தை உ.பி. போலீசில் முறைப்பாடு அளித்தார். ஆரம்ப வீடியோவில் அவர் பாஜக தலைவரை பெயரிடவில்லை என்றாலும், அந்த பெண்ணின் தந்தை தனது புகாரில் சின்மயானந்த் என்று பெயர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி, அவர் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தலைமறைவாகி விட்டதாக நீதிபதிகளுக்கு அந்த பெண் தெரிவித்தார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, முன்னாள் மத்திய மந்திரி குற்றச்சாட்டுகளை மறுத்து, அவரை அச்சுறுத்துவதற்கான ஒரு ‘சதி’ என்று கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here