மக்கள் ஆதரவில்லாத முரளிதரன் போன்றவர்களை நம்பி கோட்டாபய இறங்குவது நகைப்பிற்குரியது!

நாம் இன்று புதிய பாதையினை உருவாக்குவதற்காக நேர்மையான முறையிலே பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பொழுது முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என இவருடன் பயணிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளை வீணடிக்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவிப்பவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் கடந்த ஐந்து வட காலத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகளையோ அல்லது தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் மாற்றங்களையோ பெற முடியவில்லை.

இருப்பினும் இன்று பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அதி கூடிய ஆதரவினை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஊடாக புதிய பாதையை வகுக்க தயாராக உள்ள நிலையில் முத்தையா முரளிதரன் போன்றவர்களில் தகுதி மீறிய வார்த்தை பிரயோகங்களை முற்றிலும் எதிர்க்கின்றோம். இவர் போன்றவர்களுக்கு தமிழர்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் இல்லை. மாறாக தமிழர் என்ற அடையாளத்தை கூட இவர் கடந்த காலங்களில் காண்பித்ததும் இல்லை. இவரது வார்த்தைகளை நம்பி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ களம் இறங்குவாரேயாயின் இது நகைப்புக்கு இடமான விடயமாகும். இவரைப் போன்று காலாவதியான சில தமிழ் அரசியல்வாதிகளையும் இவர் அனைத்துக் கொண்டு செல்வாராயின் நாம் இந்த பயணத்தில் சங்கமிக்க தயாராக இல்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளாலேயே நாம் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது. அவர் தெளிவான முறையில் எமது தமிழ் மக்களுடன் பயணிக்க தயாராக உள்ளார் என்பது அவருடனான சந்திப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நாம் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம்.

முத்தையா முரளிதரன் போன்றவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து செல்வதன் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு அதிகரிக்க முடியாது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியே தனது சந்தோசமான நாள் என்று அவர் சொல்லியிப்பாராயின் அது உலகத் தமிழர்களுக்கு விரோதமான சொல்லாகும். மக்கள் மத்தியில் தமிழ் தேசிய தலைவராக கருதப்படும் பிரபாகரனை கொச்சைப்படுத்துபவரை எந்தவொரு தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதே நேரத்தில் கடந்த காலங்களை மறந்து சிங்கள மக்கள் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைவரான மஹிந்த ராஜபக்ஷவுடனாலேயே எமது மக்களுக்கான தீர்வு ஏற்படுமாயின் அது சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதன் அடிப்டையிலேயே நாம் எமது ஆதரவினை இவ்வாறான தலைமைக்கு ஆதரவளிக்க எதிர்ப்பார்த்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2009இல் யுத்தம் முடிந்த நாளிலேயே (விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட நாள்) தாம் நிம்மதியடைந்ததாக அண்மையில் முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்ததும், எனினும், கோட்டாபய ஆதரவாளர்கள் அவர் அப்படி கூறவில்லையென தமிழ்பக்கம் உள்ளிட்ட ஊடகங்கள் மீது குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here