கருவே வெற்றி வேட்பாளராம்: புதிய கணிப்பில் முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் கரு ஜயசூரிய போட்டியிட்டாலே வெற்றிபெற முடியும். சஜித் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என தாம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக கொழும்பு பல்கலைகழகத்தின் முன்னாள் சமூகவியல் பேராசிரியர் சிசிர பின்னவெல தெரிவித்துள்ளார்.

“நாடளாவியரீதியில் 10 தொகுதிகளில் வசிக்கும் 1,675 நபர்களை எழுந்தமானமாக தேர்வு செய்தோம். இரண்டு விதமான கருத்துக்கள் குறித்து மக்களின் அப்பிராயத்தை கேட்டோம். ஐ.தே.க சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் அல்லது கரு ஜெயசூரிய போட்டியிடுவார் என்ற இரண்டு சாத்தியங்களின் அடிப்படையில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ, கரு ஜெயசூர்யா, மற்றும் அனுரா குமார திஸநாயக்க ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்ற சாத்தியத்தின் அடிப்படையில் கருத்துக்கணிப்பை மேற்கொண்டோம். அடுத்ததாக, கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, மற்றும் அனுரா குமார திஸநாயக்க ஆகியோர் போட்டியிடுவார்கள் என்ற சாத்தியத்தின் அடிப்படையில் கருத்துக்கணிப்பை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

“முதல் சாத்தியத்தின் அடிப்படையிலான கருத்துக் கணிப்பில், ஜெயசூரிய பத்தில் ஏழு தொகுதிகளில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மூன்று தொகுதிகளில் உள்ளவர்களின் ஆதரவை மட்டுமே பெற்றார். இரண்டாவது சாத்தியத்தின் அடிப்படையில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், சஜித் பிரேமதாச பத்தில் நான்கு தொகுதிகளை மட்டுமே பெற முடியும். மிகுதி ஆறு தொகுதிகளையும் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் ”என்று அவர் தெரிவித்தார்.

மதம், இனம் மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பத்து தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

எப்படியாயினும், கோட்டாபய மகத்தான வெற்றியை பெற மாட்டார் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கருத்துக் கணிப்பில் சில அனுமானங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இதன்படி, சுதந்திரக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாது, ஐதேகவில் பிளவு ஏற்படாது, கரு அல்லது சஜித் கட்சியை மீறி சுயாதீனமாக போட்டியிடமாட்டார்கள், சிறுபான்மை கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள் என்ற அனுமானங்களின் அடிப்படையிலேயே கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

வாக்களிக்கும் மக்கள் தொகை மற்றும் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் நாடு 10 வலயங்களாக பிரிக்கப்பட்டு, இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு பெருநகர், கொழும்பு புறநகர்ப் பகுதிகள், கண்டி, குருநாகல், கேகாலை, உள்ளிட்டவை, கிராமப்புற பகுதிகள், தொலைதூர விவசாய பகுதிகள், மலையக தோட்டங்கள், வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பெரும்பான்மை பகுதிகள், வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகள், தமிழ், முஸ்லிம் மக்களின் தென்பகுதி வாழிடங்கள், கரையோரப் பகுதிகளில் கிறிஸ்தவ பெரும்பான்மைப் பகுதிகளை உள்ளடக்கியதாக 10 வலயங்களாக பிரித்ததாக அவர் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here