மொஸ்கோ நகர தேர்தலில் புடின் ஆதரவு கட்சிக்கு பின்னடைவு!

ரஷ்யாவின் மொஸ்கோ நகர தேர்தலில் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன. அரசு, பொலிஸ் நெருக்குவாரங்களை கடந்து மகத்தான் வெற்றியை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல்களில், மொஸ்கோ நகரசபையிலுள்ள 45 ஆசனங்களில் புடின் ஆதரவு வேட்பாளர்கள் 25 ஆசனங்களையே வென்றனர். கடந்த தேர்தலில் 38 ஆசனங்களை வென்றிருந்தனர்.

ஆனால் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,  ரஷ்யா முழுவதும் உள்ள பிற உள்ளூர் மற்றும் பிராந்திய தேர்தல்களை சுட்டிக்காட்டி, ஆளும் கட்சி “மிகவும் வெற்றிகரமாக” இருப்பதாப கூறினார்.

முன்னதாக, எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் மொஸ்கோ நகர தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைநகரில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அதிகாரிகள் அவற்றை கடுமையாக ஒடுக்க முயன்றனர். எனினும், ஆர்ப்பாட்டங்கள் விரிவடைந்தன.

எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, ஆர்ப்பாட்டங்களிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தேக்கமடைந்து வரும் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் குறைந்து வருவது மற்றும் ஜனாதிபதி புடினின் ஆதரவு வீழ்ச்சி ஆகியவற்றின் மத்தியில் நகர தேர்தலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

“இதற்காக நாங்கள் ஒன்றாக போராடினோம். பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி ”என்று தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ட்விட்டரில் நவல்னி கூறினார்.

தேர்தலில் போட்டியிட தடைசெய்யப்பட்ட பின்னர், எதிர்ப்புத் தலைவராக உருவாகிய லியுபோவ் சோபோல், “வரலாற்றில் மஸ்கோவியர்களின் தைரியம் மற்றும் விடாமுயற்சி மற்றும் நகர நிர்வாகத்தின் கோழைத்தனம் ஆகியவற்றிற்கு நன்றி” என்று கூறினார்.

புடினின் நெருங்கிய கூட்டாளியான மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், வாக்கெடுப்பு “உணர்ச்சிபூர்வமான மற்றும் உண்மையான போட்டி”யாக இருந்ததாக கூறினார். நகர நாடாளுமன்றத்திற்கு அதிக பன்முகத்தன்மை “பயனுள்ளதாக இருக்கும்” என்றும் கூறினார்.

ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் மொஸ்கோ கிளையின் தலைவர் ஆண்ட்ரி மெட்டல்ஸ்கி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

புடினை ஆதரிப்பதற்காக 2001 இல் உருவாக்கப்பட்ட யுனைடெட் ரஷ்யா கட்சி அண்மைய ஆண்டுகளில் சரிவைச் சந்தித்து வருவதை இந்த தேர்தலும் உறுதி செய்தது.

நகர தேர்தல் முடிவுகள் இப்படி அமைந்திருந்தாலும், ஆளுநருக்கான தேர்தல்கள் நடந்த 16 பிராந்தியங்களிலும் புடின் ஆதரவு வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here