இந்தியா- பாகிஸ்தானிற்கிடையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: ட்ரம்ப் 3வது முறையாக அறிவிப்பு!

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் சமரசப் பேச்சு நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை இந்தியா -பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை என்று இந்தியா வலியுறுத்தி வரும் நிலைப்பாட்டிற்கு அடியாக, மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று ஜனாதிபதி ட்ரம்ப் பேசியுள்ளார்.

ஏற்கெனவே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று ஜனாதிபதி ட்ரம்ப் இருமுறை கூறியதற்கு இந்தியா மறுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. எனினும், அதை கருத்தில் எடுக்காமல் நேற்று மீண்டும் தனது முந்தைய நிலைப்பாட்டை ட்ரம்ப் தெரிவித்தள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன். இரு நாடுகளும் விரும்பினால் நான் பேசத் தயார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் இருந்த பதற்றம் இப்போது சற்று தணிந்துள்ளது. இரு நாடுகளுடனும் நான் நட்புறவோடுதான் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் இரத்து செய்தது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பின் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நட்புறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here